போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம் அருகே துணிகரம்: சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செல்போன் பறித்த பீகார் வாலிபர்


போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம் அருகே துணிகரம்:  சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செல்போன் பறித்த பீகார் வாலிபர்
x
தினத்தந்தி 19 Feb 2017 8:45 PM GMT (Updated: 20 Feb 2017 7:43 PM GMT)

சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செல்போன் பறித்து சென்ற பீகார் வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை,

வாலிபரை தாக்கிய பெண்

சென்னை வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலையில் நேற்று பகலில் ஒரு பெண் பர்தா அணிந்து செல்போனில் பேசியபடியே சென்றுகொண்டிருந்தார். அவருக்கு பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்களும் பின்தொடர்ந்து வந்தனர். ஒரு தனியார் வங்கியை அந்த பெண் கடந்தபோது, மோட்டார் சைக்கிள் அவர் அருகில் நெருங்கியது.

அப்போது மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்திருந்த வாலிபர், கண் இமைக்கும் நேரத்தில் அந்த பெண் பேசிக்கொண்டு இருந்த செல்போனை தட்டிவிட்டார். அந்த செல்போன் சாலையில் விழுந்து சேதம் அடைந்தது. இதையடுத்து அந்த வாலிபர் குனிந்து செல்போனை எடுத்து தப்பிக்க நினைக்கும்போது, அந்த பெண் அவரை பிடித்து அடிக்க தொடங்கினார்.

நடுரோட்டில் ஒரு பெண் வாலிபரின் சட்டையை பிடித்து இழுத்து அடித்துக்கொண்டு இருப்பதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பரபரப்புடன் பார்த்தனர்.

தப்பும் முயற்சியில் சிக்கினார்

இந்தநிலையில் திடீரென்று அந்த பெண்ணை தள்ளிவிட்டு, அந்த மர்ம நபர் தயாராக இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிக்க நினைத்தார். அப்போது அந்த பெண் ‘திருடன்... திருடன்... எனது செல்போனை எடுத்துக்கொண்டு ஓடுகிறான்... பிடியுங்கள்... பிடியுங்கள்’, என்று கூச்சலிட தொடங்கினார். நடுரோட்டில் பெண் கூச்சலிடுவதையும், வாலிபர் ஒரு பதைபதைப்புடன் தப்பிக்க முயற்சி செய்வதையும் பார்த்து அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அந்த பகுதியில் இருந்த இளைஞர்கள், ஆட்டோ டிரைவர்கள், பழ வியாபாரிகள் மோட்டார் சைக்கிளில் தப்பியோடும் 2 பேரையும் பிடிக்க முயற்சித்தனர். அந்த வழியாக மொபட்டில் சென்ற போக்குவரத்து பெண் போலீஸ் மகாலட்சுமி என்பவரும் அந்த 2 பேரையும் பிடிக்க முயற்சித்தார். ஆனால் இந்த துரத்தலில் மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்திருந்த நபரை மட்டுமே பிடிக்க முடிந்தது. மோட்டார் சைக்கிள் ஓட்டியவர் மின்னல் வேகத்தில் அங்கிருந்து மறைந்துவிட்டார்.

தர்ம அடி

இதையடுத்து பிடிபட்ட வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். அவர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணும் அந்த வாலிபரை சரமாரியாக தாக்கினார். ஆவேசத்துடன் இருந்த அந்த பெண்ணை அருகில் உள்ளவர்கள் சமாதானப்படுத்தினர். சிலர் உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தெரியப்படுத்தினர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வேப்பேரி போலீசார் விரைந்தனர். அந்த வாலிபரை பாதுகாப்பாக மீட்டு போலீஸ் ஜீப்பில் ஏற்றி அழைத்து சென்றனர்.

எதிர்பாராத இந்த சம்பவத்தில் அந்த பெண்ணின் செல்போன் சேதம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. ‘இன்றைக்கு யார் முகத்தில் முழித்தேனோ, செல்போன் உடைஞ்சு போச்சு’, என்று அந்த பெண் சோகத்துடன் கூறி அங்கிருந்து புறப்பட்டார்.

பீகார் வாலிபர்

இந்த சம்பவம் தொடர்பாக வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், பிடிபட்ட அந்த வாலிபர் பீகார் மாநிலம் மதுபனிஜில்லா பகுதியை சேர்ந்த ராம்குமார் (வயது 25) என்பது தெரியவந்துள்ளது. இவர் ஏற்கனவே இதுபோல பல சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. மோட்டார் சைக்கிளில் தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

செல்போன் பறிக்கப்பட்ட பெண் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கலீல் என்பவரது மனைவி பர்வீன் (24) என்பதும், வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலையில் உள்ள துணிக்கடையில் வேலைபார்த்து வருவதும் தெரியவந்தது. பர்வீன் தனது வீட்டில் இருந்து பஸ் மூலம் வேப்பேரி வந்திறங்கி, கடையை நோக்கி நடந்து வந்தபோது தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.  இந்த சம்பவம் அந்த பகுதியில் நேற்று பரபரப்பாக பேசப்பட்டது.


Next Story