சட்டசபையில் நடந்த சம்பவம் குறித்து ஜனாதிபதிக்கு அறிக்கை கவர்னர் வித்யாசாகர் ராவ் அனுப்பினார்


சட்டசபையில் நடந்த சம்பவம் குறித்து ஜனாதிபதிக்கு அறிக்கை கவர்னர் வித்யாசாகர் ராவ் அனுப்பினார்
x
தினத்தந்தி 23 Feb 2017 12:00 AM GMT (Updated: 22 Feb 2017 7:19 PM GMT)

தமிழக சட்டசபையில் கடந்த 18-ந் தேதி நடந்த சம்பவங்கள் குறித்த அறிக்கையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு, தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் அனுப்பினார்.

சென்னை,

பிளவுபட்ட ஆளும் கட்சி

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் ஆளும் கட்சியான அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும், சசிகலா தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சட்டமன்ற கட்சித்தலைவராக தேர்வு செய்யப்பட்டிருந்த சசிகலா, சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து சிறைக்குச் சென்றார். எனவே, சசிகலா தரப்பு அணியின் எம்.எல்.ஏ.க்களால், சட்டமன்ற அ.தி.மு.க. தலைவராக (முதல்-அமைச்சர்) எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

நம்பிக்கை தீர்மானம்

அவரை முதல்-அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துவைத்த கவர்னர் வித்யாசாகர் ராவ், எடப்பாடி கே.பழனிசாமியின் அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா என்பதை சட்டசபையில் 15 நாட்களுக்குள் நம்பிக்கை தீர்மானம் கொண்டுவந்து நிரூபிக்கும்படி உத்தரவிட்டார்.

அதன்படி, 18-ந் தேதி சட்டசபை கூட்டப்பட்டது. அரசின் மீது நம்பிக்கை தீர்மானத்தை எடப்பாடி கே.பழனிசாமி கொண்டு வந்தார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அவரவர் சொந்த தொகுதிக்குச் சென்று மக்களின் கருத்தை அறிந்துவந்த பிறகு, இந்த தீர்மானத்தை ஒருவாரம் கழித்து சட்டசபையில் கொண்டு வரவேண்டும் என்று தி.மு.க., ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கோரிக்கை விடுத்தனர்.

எதிர்க்கட்சி வெளியேற்றம்

ஆனால், அதை சபாநாயகர் ஏற்கவில்லை. எனவே, அவையில் தி.மு.க.வினர் அதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினர். இதனால் அவையில் கடுமையான அமளி ஏற்பட்டது. தி.மு.க.வினரால் புத்தகங்கள் கிழித்து வீசப்பட்டன. மைக்குகள் உடைக்கப்பட்டன. கடுமையான அமளியின் இடையே, இரண்டு முறை அவை நடவடிக்கைகளை சபாநாயகர் ப.தனபால் தள்ளிவைத்தார்.

அதன் பின்னரும் அமளி நீடித்ததால், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் வெளியேற்ற அவைக்காவலருக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். அவர்கள் வெளியேற்றப்பட்டதும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 8 பேர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் ஆகியோர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

கவர்னரிடம் புகார்

அ.தி.மு.க. கட்சியின் இரண்டு அணிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மட்டும் இருந்த நிலையில் நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் அரசுக்கு 122 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர். 11 பேர் (ஓ.பன்னீர்செல்வம் அணியினர்) மட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே அரசின் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டு ஆட்சி தொடர் கிறது.

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின், அவையில் நடந்த சம்பவம் குறித்து கவர்னரிடம் சென்று புகார் கூறினார். எனவே, அவையில் நடந்த சம்பவம் குறித்த விவரங்களை தன்னிடம் கொடுக்கும்படி சட்டசபை செயலாளருக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டார்.

ஜனாதிபதிக்கு அறிக்கை

அதைத்தொடர்ந்து 20-ந் தேதியன்று சட்டசபை செயலாளர் ஜமாலுதீன், அது சம்பந்தப்பட்ட அறிக்கையை கவர்னர் வித்யாசாகர் ராவிடம் கொடுத்தார்.

இந்த நிலையில், தமிழக சட்டசபையில் 18-ந் தேதி நடந்த சம்பவம் குறித்து விவர அறிக்கை ஒன்றை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு, கவர்னர் வித்யாசாகர் ராவ் அனுப்பினார்.

மத்திய அரசுக்கும் அந்த அறிக்கையை கவர்னர் அனுப்பியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அந்த அறிக்கையில் என்ன கூறப்பட்டு உள்ளது என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

Next Story