கோவை அரசு ஆஸ்பத்திரியில் 70 பேருக்கு சிகிச்சை பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 19 பேர் பலி


கோவை அரசு ஆஸ்பத்திரியில் 70 பேருக்கு சிகிச்சை பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 19 பேர் பலி
x
தினத்தந்தி 22 Feb 2017 9:45 PM GMT (Updated: 22 Feb 2017 7:42 PM GMT)

பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 19 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 70 பேர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை, 

பன்றிக்காய்ச்சல்

கோவை மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல், மர்ம காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 70 பேர், பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த 2 மாதங்களில் பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்கு 19 பேர் பலியாகி உள்ளனர்.

இது குறித்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறியதாவது:-

முன்எச்சரிக்கை நடவடிக்கைகள்

பன்றிக்காய்ச்சலால் பாதிக் கப்பட்டவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.

பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் தடுப்பூசி போடப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் ஆரம்பத்திலேயே அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற வேண்டும். அதற்கான மருந்து மாத்திரைகள் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. காய்ச்சல் தானே என்று சாதாரணமாக விட்டுவிடக்கூடாது. கட்டாயம் உரிய சிகிச்சை பெற வேண்டும். அடிக்கடி கைகளை கழுவுவது, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வது, ஆஸ்பத்திரிகளுக்கு செல்லும்போதும் நோயாளிகளை பார்க்க செல்லும்போதும் முகத்தில் துணி கவசம் அணிந்து செல்வது போன்ற முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் தவறாமல் கையாள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story