ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவாக பணம் வசூல் ராஜஸ்தான் ஐ.ஜி. சென்னை வருகை


ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவாக பணம் வசூல் ராஜஸ்தான் ஐ.ஜி. சென்னை வருகை
x
தினத்தந்தி 22 Feb 2017 9:45 PM GMT (Updated: 22 Feb 2017 7:47 PM GMT)

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு சென்னையில் பணம் வசூல் செய்ததாக வாலிபர் ஒருவர் ராஜஸ்தான் மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு சென்னையில் பணம் வசூல் செய்ததாக வாலிபர் ஒருவர் ராஜஸ்தான் மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை சென்னை அழைத்து வந்து விசாரணை நடக்கிறது.

இதில் தொடர்புள்ள 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை பிடிப்பதற்காக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த போலீஸ் ஐ.ஜி. ஒருவரும் சென்னை வர உள்ளார்.

சென்னையில் பணம் வசூல்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜமீல் முகமது என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவருடன் தமிழகத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் தொடர்பில் இருப்பதாக தெரியவந்தது.

இதன் அடிப்படையில் விசாரணை நடந்தபோது சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த இக்பால் என்ற வாலிபர் ஒருவர் ஜமீல் முகமதுடன் தொடர்பு வைத்திருந்ததாக கண்டறியப்பட்டது. இக்பாலை ராஜஸ்தான் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி பகுதியில் தங்கம் கடத்தல் வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இக்பாலும் ஒருவர்.

இக்பால் கைது செய்யப்பட்ட தகவல் ராஜஸ்தான் மாநில போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் இந்த மாத தொடக்கத்தில் ராஜஸ்தான் மாநில போலீசார் சென்னைக்கு வந்து இக்பாலை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இக்பாலிடம் ராஜஸ்தான் மாநில போலீசார் விசாரித்தபோது ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு சென்னையில் பணம் வசூல் செய்ததாகவும், 4 தொழில் அதிபர்கள் அதற்கு உதவி செய்ததாகவும் தெரியவந்தது. அதன்பேரில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று காலையில் இக்பாலை ராஜஸ்தான் மாநில போலீசார் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

சென்னை போலீஸ் உதவி

ராஜஸ்தான் மாநில கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தனிப்படை போலீசார் இக்பாலுடன் சென்னை வந்தனர். சென்னையில் தங்கியிருந்து விசாரணை நடத்த அவர்களுக்கு உதவி செய்யும்படி மயிலாப்பூர் துணை கமிஷனர் பாலகிருஷ்ணனுக்கு போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.

அதன்பேரில் ராஜஸ்தான் மாநில போலீசாருக்கு போலீஸ் வேன் ஒன்று கொடுக்கப்பட்டது. இக்பாலை இரவில் தங்கவைப்பதற்காக கோட்டூர்புரம் மற்றும் மயிலாப்பூர் போலீஸ் நிலையங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டது.

மயிலாப்பூர் மற்றும் கோட்டூர்புரம் போலீஸ் லாக்கப்பில் இக்பாலை இரவில் மாற்றி மாற்றி அடைத்து வைத்து விசாரணை நடந்தது. சென்னை மண்ணடி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இக்பாலை அழைத்துச் சென்று விசாரித்தனர். ‘ஹவாலா’ பண பரிவர்த்தனை மூலம் ஐ.எஸ். அமைப்புக்கு சென்னையிலிருந்து ரூ.3 லட்சத்துக்கு மேல் பணம் அனுப்பப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்தது.

தப்பி ஓட்டம்

பணம் வசூலுக்கு உதவிய 4 தொழில் அதிபர்களும் ராஜஸ்தான் மாநில போலீசாரிடம் சிக்காமல் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை கைது செய்வதற்காக ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து ஐ.ஜி. ஒருவரும் சென்னை வர இருப்பதாக நேற்று இரவு தெரியவந்தது.

நாளை (வெள்ளிக்கிழமை) வரை இக்பாலை சென்னையில் வைத்து விசாரணை நடத்த ராஜஸ்தான் மாநில கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. அதற்குள் தப்பி ஓடிய தொழில் அதிபர்களை கைது செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சென்னை நகர போலீசார் தெரிவித்தனர்.

2 பேர் பிடிபட்டனர்

ராஜஸ்தான் மாநில போலீசாருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து கொடுத்துள்ளதாகவும், சென்னை போலீஸ் அதிகாரிகள் கூறினார்கள். கைது செய்யப்பட்டுள்ள வாலிபர் இக்பாலுக்கும், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும், தவறான தகவல் அடிப்படையில் ராஜஸ்தான் மாநில போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர் என்றும், இக்பாலின் உறவினர்கள் சென்னை நகர போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு போட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் சென்னை பர்மாபஜார் பகுதியை சேர்ந்த 2 பேரை ராஜஸ்தான் மாநில போலீசார் நேற்று இரவு பிடித்தனர். அவர்களை கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணைக்கு பின்னர் அவர்கள் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.

Next Story