தாசில்தார் கையெழுத்தை போட்டு போலி அரசு சான்றிதழ்கள் விற்பனை பெட்டிக்கடைக்காரர் உள்பட 2 பேர் கைது


தாசில்தார் கையெழுத்தை போட்டு போலி அரசு சான்றிதழ்கள் விற்பனை பெட்டிக்கடைக்காரர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 22 Feb 2017 9:00 PM GMT (Updated: 22 Feb 2017 8:23 PM GMT)

சென்னையில் தாசில்தார் கையெழுத்தை போட்டு போலியாக அரசு சான்றிதழை தயாரித்து விற்ற பெட்டிக்கடைக்காரர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை, 

தாசில்தார் புகார்

சென்னை மாம்பலம் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தாரராக பணியாற்றுபவர் ஆனந்த மகாராஜா. இவர் எம்.ஜி.ஆர்.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது கையெழுத்தை போட்டு போலியான சாதி சான்றிதழ், வாரிசு சான்றிதழ் போன்ற அரசு சான்றிதழ்களை போலியாக தயாரித்து சென்னையில் ஒரு கும்பல் சட்ட விரோதமாக விற்பனை செய்து வருகிறது. இதுபோல் போலி சான்றிதழ் விற்பனை நடப்பதாக ஏற்கனவே 2 முறை புகார் கொடுத்துள்ளேன். இதுபோல் போலி சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்யும் கும்பலை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.இவ்வாறு புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

அவரது கையெழுத்தை போட்டு போலியாக தயாரித்த அரசு சான்றிதழையும் புகார் மனுவோடு இணைத்து கொடுத்திருந்தார்.

அதிரடி விசாரணை

இந்த புகார் மனுவின் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் சங்கர், இணை கமிஷனர் அன்பு, துணை கமிஷனர் சரவணன் ஆகியோர் மேற்பார்வையில் அசோக்நகர் உதவி கமிஷனர் அரிகுமார் தலைமையில் எம்.ஜி.நகர். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சொர்ண களஞ்சியம் அதிரடி விசாரணை மேற்கொண்டார்.

உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த சந்திரன் என்பவர் இதுபோல போலி சான்றிதழ் ஒன்றை அசோக்நகர் சார்பதிவாளர் அலுவலகத்தில் சமர்பித்திருப்பது தெரிய வந்தது. போலீசார் சந்திரனை பிடித்து விசாரித்தனர்.

2 பேர் கைது

சந்திரன் கொடுத்த தகவலின் பேரில் போலி சான்றிதழ் தயாரிப்பில் ஈடுபட்டதாக ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த ஆனந்தன் (வயது 52) என்பவரையும், சைதாப்பேட்டையைச் சேர்ந்த சுப்பிரமணி (42) என்பவரையும் கைது செய்தனர். இவர்களில் ஆனந்தன் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். சுப்பிரமணி ஆனந்தனின் கூட்டாளி ஆவார்.

சுப்பிரமணிதான் போலி சான்றிதழ் தயாரிப்பில் மூளையாக செயல்பட்டவர். தாசில்தாரின் கையெழுத்து போலியாக போட்டவரும் இவர்தான். சுப்பிரமணியின் வீட்டில் சோதனை போட்டபோது அங்கு ஏராளமான போலி சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். ஏராளமான போலி ரப்பர் ஸ்டாம்புகளும் சுப்பிரமணியின் வீட்டில் கைப்பற்றப்பட்டது.

போலி சான்றிதழ்களை தலா ரூ.1000 வரை விற்பனை செய்துள்ளனர். இதில் கிடைக்கும் வருமானத்தை சுப்பிரமணியும், ஆனந்தனும் பங்கு போட்டுள்ளனர். சுப்பிரமணி மீது ஏற்கனவே சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் போலி சான்றிதழ் விற்பனை வழக்கு நிலுவையில் உள்ளது.

வாரிசு சான்றிதழ்

போலீஸ் விசாரணையில், சந்திரன் வாரிசு சான்றிதழ் ஒன்றை ரூ.1000 கொடுத்து ஆனந்தனிடம் பெற்றுள்ளதும், அந்த வாரிசு சான்றிதழை போலியாக தயாரித்து கொடுத்துள்ளதும் கண்டறியப்பட்டது. தீவிர விசாரணைக்குப் பிறகு சுப்பிரமணியும் ஆனந்தனும் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

Next Story