சிவன் கோவில்களில் இன்று மகா சிவராத்திரி 4 கால பூஜைகளுக்கு ஏற்பாடு


சிவன் கோவில்களில் இன்று மகா சிவராத்திரி 4 கால பூஜைகளுக்கு ஏற்பாடு
x
தினத்தந்தி 23 Feb 2017 8:45 PM GMT (Updated: 23 Feb 2017 5:30 PM GMT)

மகா சிவராத்திரியையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) சிவன் கோவில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

மகா சிவராத்திரி 

மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய முக்கிய விரதமாகும். ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் சிவராத்திரி பக்தர்களால் மேற்கொள்ளப்படுகிறது. சிவனுக்குரிய ராத்திரிகளில், நித்ய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என 5 வகையாக பிரிக்கலாம்.

மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் அம்பிகை, சிவனை வணங்கி பூஜித்து வணங்கிய இந்நாளே சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.

சிவன் கோவில்கள் 

மகா சிவராத்திரியையொட்டி, சிவன் கோவில்களில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை முதல் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர், வெள்ளீஸ்வரர், சைதாப்பேட்டை காரணீஸ்வரர், மல்லீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர், திருவொற்றியூர் தியாகராஜர் சாமி, கோயம்பேடு குறுங்காலீஸ்வரர், பாடி திருவலிதாயம், பாடியநல்லூர் திருநிற்றீஸ்வரர் கோவில், பாரிமுனை ஏகாம்பரேஸ்வரர், மல்லீஸ்வரர், அமைந்தகரை ஏகாம்பரேஸ்வரர் கோவில், அயனாவரம் பரசுராமலிங்கேஸ்வரர் கோவில், வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவில், குன்றத்தூர் நாகேஸ்வரசாமி உள்பட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களிலும் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதேபோல், தியாகராயநகர் சிவ–விஷ்ணு கோவில், பிரம்மகுமாரிகள் சார்பில் மகாசிவராத்திரி பிராட்வேயில் நடக்கிறது. திருவான்மியூர் பாமன் குமரகுருதாசசாமிகள் கோவிலும் மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

மகாசிவராத்திரி குறித்து சிவாச்சாரியார்கள் கூறியதாவது:–

இந்த நாளில் சிவன் கோவில்களுக்குச் சென்று ஈஸ்வரனை வழிபட்டால் மன அமைதி, வாழ்க்கையில் முன்னேற்றம், தீய சக்திகள் வேரோடு அகலுதல் போன்ற நன்மைகள் நமக்கு உண்டாகும். சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும். சிவராத்திரியில் நான்கு ஜாமங்களில் பக்தர்கள் கலந்துகொள்வது மிகவும் நல்லது. இரவு 11.30 மணிக்கு மேல் 1 மணி வரை நடக்கும் பூஜைக்கு லிங்கோற்பவ காலம் என்று சொல்வார்கள். இந்த தரிசனத்தில் கலந்துகொள்வது மிகவும் புண்ணியமாக கருதப்படுகிறது.

சிவபுராணம் 

நூறு அசுவமேத யாகம் செய்வது, பலமுறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிப்பதற்கு ஈடாகாது. சிவராத்திரிக்கு முதல் நாள் ஒருவேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.

பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவத்துதிகளைச் சொல்லியும், சிவன் கோவிலுக்குச் சென்று அவ்விரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story