ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கி, ஓ.பன்னீர்செல்வம் பேசுகிறார்


ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கி, ஓ.பன்னீர்செல்வம் பேசுகிறார்
x
தினத்தந்தி 23 Feb 2017 9:45 PM GMT (Updated: 23 Feb 2017 8:33 PM GMT)

சென்னை ஆர்.கே.நகரில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் இன்று(வெள்ளிக் கிழமை) நடக்கிறது. இதில் நலத்திட்ட உதவிகள் வழங்கி ஓ.பன்னீர்செல்வம் பேசுகிறார்.

சென்னை, 

சென்னை ஆர்.கே.நகரில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் இன்று(வெள்ளிக் கிழமை) நடக்கிறது. இதில் நலத்திட்ட உதவிகள் வழங்கி ஓ.பன்னீர்செல்வம் பேசுகிறார்.

ஜெயலலிதா 69-வது பிறந்தநாள்

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இன்று 69-வது பிறந்தநாள் ஆகும். அவருடைய பிறந்தநாளை சசிகலா தலைமையை ஏற்றுள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களும், ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் தனித்தனியாக கொண்டாட உள்ளனர்.

அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இருதரப்பிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ஜெயலலிதா கடந்த 2 முறை போட்டியிட்டு வென்ற சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் சிறப்பாக கொண்டாடுவதற்கு முடிவு செய்துள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வம் பேசுகிறார்

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஏற்பாட்டில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டை மணிக்கூண்டு அருகே ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது.

இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். பின்னர் அவர் ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, சிறப்புரை ஆற்றுகிறார்.

பொதுக்கூட்டம் முடிந்தவுடன் சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போது ஓ.பன்னீர்செல்வம், தன்னுடைய நீதி கேட்பு பயணம், ஜெயலலிதாவின் மரணம், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தல், தனது அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் போன்ற பல்வேறு கேள்விகளுக்கு மனம் திறந்து பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்.கே.நகர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு எப்படி இருக்கும்? என்று அவருடைய ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி நேற்று நிருபர்களிடம் கூறும்போது, ‘சசிகலா குடும்பத்தினர் நிலைப்பாட்டையும், எங்களுடைய நிலைப்பாட்டையும் விரிவாக நாட்டு மக்களுக்கு எடுத்துரைப்பார். தன்னுடைய மனதில் சிந்தித்து கொண்டு இருப்பதை வெளிப்படுத்துவார். ஜெயலலிதாவின் மறைவை பற்றி கூட இருக்கலாம்’ என்றார்.

தீபா பங்கேற்க மாட்டார்

ஆர்.கே.நகரில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து தீபாவும் பங்கேற்று பேசுவார் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தீபா தன்னுடைய ஆதரவாளர்களின் விருப்பத்திற்கு இணங்க பேரவை தொடங்க உள்ளதால் அவர் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளார்.

இந்தநிலையில் தீபா தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டு ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த தொண்டர்கள் விருப்பமும், வேண்டுகோளும் விடுத்துள்ளனர்.

Next Story