மின்சார ரெயிலில் இருந்து விழுந்த 3 வாலிபர்கள் பலி படிக்கட்டு பயணத்தால் விபரீதம்


மின்சார ரெயிலில் இருந்து விழுந்த 3 வாலிபர்கள் பலி படிக்கட்டு பயணத்தால் விபரீதம்
x
தினத்தந்தி 23 Feb 2017 9:15 PM GMT (Updated: 23 Feb 2017 8:45 PM GMT)

சென்னை பழவந்தாங்கல் அருகே மின்சார ரெயிலில் படிக்கட்டு அருகே பயணம் செய்தபோது தவறி விழுந்த 3 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.

சென்னை,

விரைவு மின்சார ரெயில்

சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு விரைவு மின்சார ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் எழும்பூர், மாம்பலம், கிண்டி உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும்.

சாதாரண மின்சார ரெயில்களை காட்டிலும் இதில் 30 நிமிடங்கள் பயண நேரம் குறைவு என்பதால் இந்த விரைவு ரெயிலில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

படிக்கட்டுகளில் பயணம்

செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று காலை 7.50 மணியளவில் கடற்கரை நோக்கி விரைவு மின்சார ரெயில் புறப்பட்டது. காலை நேரம் என்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் என ஏராளமானோர் இந்த ரெயிலில் பயணம் செய்தனர்.

இந்த ரெயில் தாம்பரம் வரை அனைத்து மின்சார ரெயில் நிலையங்களில் நின்று சென்றதால் ரெயிலில் கட்டுக்கடங்காத அளவுக்கு கூட்டம் இருந்தது. ஏராளமானோர் ரெயில் படிக்கட்டுகளிலும், மேற்கூரையை பிடித்தபடியும் ஆபத்தான நிலையில் பயணம் செய்தனர்.

கம்பத்தில் சிக்கிய ‘பேக்’

தாம்பரம் ரெயில் நிலையத்தை தாண்டியதும் மின்சார ரெயிலின் வேகம் அதிகரித்தது. பழவந்தாங்கல்-பரங்கிமலை இடையே ஒரு வளைவில் அந்த ரெயில் சென்றபோது படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த ஒருவரின் தோளில் மாட்டியிருந்த ‘பேக்’ தண்டவாளத்தை ஒட்டி இருந்த சிக்னல் கம்பத்தில் இருந்த ஏணியில் சிக்கிக் கொண்டது.

இதனால் வெளியே இழுக்கப்பட்ட அவர் நிலைதடுமாறி அருகில் இருந்த பயணிகளை பிடித்தார். அவரை கீழே விழாமல் காப்பாற்ற நினைத்து அருகில் இருந்த சில பயணிகளும் சேர்ந்து அவரை பிடித்தனர். ஆனால் ரெயிலின் வேகத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ‘பேக்’ சிக்கிக்கொண்டவர் உள்பட மொத்தம் 7 பேர் ரெயிலில் இருந்து கீழே விழுந்தனர்.

அந்த இடத்திலேயே 2 பேர் பலி

இந்த எதிர்பாராத சம்பவத்தில் முதலில் விழுந்த 2 பேர் ரெயில் சக்கரத்தில் சிக்கி உடல் சிதைந்து அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மற்ற 5 பேரும் தண்டவாளத்தின் அருகே ஆங்காங்கே திசைக்கு ஒருவராக சுருண்டு விழுந்து கிடந்தனர்.

இந்த சம்பவம் ரெயில் பெட்டிகளில் இருந்த பயணிகள் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பயணிகள் கூச்சலிட்டு கதறினார்கள். சிலர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். பயணிகள் கூச்சல் போட்டதாலும், அபாய சங்கிலி இழுக்கப்பட்டதாலும் என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

ரெயில் நின்றதும் பயணிகள் அலறியடித்து விபத்து நடந்த இடத்துக்கு ஓடினர். அந்த வழியெங்கும் தண்டவாளத்தில் கை, கால் போன்ற உறுப்புகள் சிதறிக் கிடந்தன. ரத்தமும், சதையுமாக அந்த பகுதியே கோரமாக காட்சி அளித்தது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 5 பேரும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சம்பவ இடத்தில் இறந்த 2 பேரின் உடல் பாகங்களும் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

பலி 3 ஆனது

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 பேரும், மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஒருவர் இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. மற்ற 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து எழும்பூர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்தவர்கள் பெருங்களத்தூரை சேர்ந்த மணிகண்டன்(வயது 20), பிரவீன்ராஜ்(20), தாம்பரத்தை சேர்ந்த சாமுவேல்(24) என்பது தெரியவந்தது. பிரவீன்ராஜ் ஏ.சி. மெக்கானிக்காகவும், மணிகண்டன் கூலித் தொழிலாளியாகவும் வேலைபார்த்து வந்தனர்.

படுகாயமடைந்தவர்கள் கொரட்டூர் பகுதியை சேர்ந்த தேவராஜ்(26), பெருங்களத்தூரை சேர்ந்த கோபிநாத்(29), மதுசூதனன்(27), மணிகண்டன்(20) என்பதும் தெரிந்தது. அவர்களும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் தனியார் நிறுவனங்களில் வேலைபார்த்து வருபவர்கள்.

அதிகாரிகள் விசாரணை

இந்த விபத்து குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்கு காரணமான மின்கம்பத்தில் இருந்த இரும்பு ஏணி வளைந்து காணப்பட்டது. ரெயில்வே அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

இந்த விபத்தால் மின்சார ரெயில் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

Next Story