‘கண் எதிரிலேயே தம்பியை பறிகொடுத்துவிட்டேனே’ பலியான பிரவீன்ராஜின் அண்ணன் கண்ணீர் பேட்டி


‘கண் எதிரிலேயே தம்பியை பறிகொடுத்துவிட்டேனே’ பலியான பிரவீன்ராஜின் அண்ணன் கண்ணீர் பேட்டி
x
தினத்தந்தி 23 Feb 2017 9:30 PM GMT (Updated: 23 Feb 2017 8:48 PM GMT)

கண் எதிரிலேயே தம்பியை பறிகொடுத்துவிட்டேனே என்று பலியான பிரவீன்ராஜின் அண்ணன் சவுந்தர் கண்ணீருடன் கூறினார்.

ரெயிலில் இருந்து கீழே விழுந்து பலியான பிரவீன்ராஜின் அண்ணன் சவுந்தர் கண்ணீர் மல்க கூறியதாவது:-

கண் எதிரிலேயே விழுந்தான்

நான் எனது தம்பி பிரவீன்ராஜுடன் தினமும் பெருங்களத்தூரில் இருந்து கோடம்பாக்கத்திற்கு வேலைக்கு சென்றுவருவேன். கோடம்பாக்கத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் நான் வேலை பார்த்து வருகிறேன். எனது தம்பி அதே பகுதியில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தான்.

ரெயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டு அருகில் நின்றுகொண்டு சென்றோம். அப்போது ரெயிலில் தொங்கியபடியே வந்த ஒருவரின் முதுகில் தொங்கிக் கொண்டிருந்த ‘பேக்’ தண்டவாளம் அருகே உள்ள சிக்னல் கம்பத்தின் ஏணியில் சிக்கிக் கொண்டது. அவர் கீழே விழும்போது அருகில் இருந்தவர்களையும் சேர்த்து இழுத்தார்.

இதில் என் தம்பி என் கண் எதிரிலேயே கீழே விழுந்தான். நாங்கள் அலறியபடி ரெயிலின் அபாய சங்கிலியை இழுத்தபோது ரெயில் சிறிது தூரம் சென்று நின்றது. நாங்கள் அங்கிருந்து ஓடிவந்து பார்த்தபோது என் தம்பி பிரவீன்ராஜ் உடல் இரண்டு துண்டாகி இறந்துகிடந்தான்.

இவ்வாறு சவுந்தர் கூறினார்.

17 நண்பர்கள் பயணம்

பிரவீன்ராஜின் நண்பர் பெருங்களத்தூரை சேர்ந்த சுதாகரன் கூறியதாவது:-

விபத்தில் பலியான பிரவீன்ராஜ், காயமடைந்த மணிகண்டன் உள்பட 17 நண்பர்கள் தினமும் காலை பெருங்களத்தூர் ரெயில் நிலையத்தில் இருந்து இதே விரைவு ரெயிலில் பயணித்து வேலைக்கு செல்வோம். 2 ஆண்டுகளாக நாங்கள் ரெயில் பயண நண்பர்களாக இருக்கிறோம்.

கடந்த சில நாட்களாக இந்த ரெயில் தாமதமாக வருவதால் ரெயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்ட நெரிசலில் படிக்கட்டு உள்ளே நின்று பயணம் செய்தோம். கருப்பு பேக் மாட்டிக்கொண்டு வந்தவர் குரோம்பேட்டை அருகிலேயே இதேபோல மின்கம்பத்தில் அடிபட இருந்தார். அப்போது உள்ளே வந்துவிடுங்கள் என எச்சரித்தோம். ஆனால் பிரவீன்ராஜ், மணிகண்டனால் உள்ளே வரமுடியவில்லை. இதனால் விபத்தில் சிக்கிக்கொண்டனர்.

2 வருடமாக ஒரே ரெயிலில் ஒரே பெட்டியில் பயணம் செய்தோம். இந்த ரெயிலை தவறவிட்டால் வேலைக்கு செல்லாமல் 17 பேரும் வீட்டிற்கு திரும்பிவிடுவோம். இன்று பிரவீன்ராஜை இழந்துவிட்டோம், மணிகண்டன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறான் என்று உருக்கமாக கூறினார். 

Next Story