சட்டசபையில் நடந்த சம்பவத்தின் வீடியோ பதிவை கேட்டு கடிதம் சபாநாயகருக்கு மு.க.ஸ்டாலின் அனுப்பினார்


சட்டசபையில் நடந்த சம்பவத்தின் வீடியோ பதிவை கேட்டு கடிதம் சபாநாயகருக்கு மு.க.ஸ்டாலின் அனுப்பினார்
x
தினத்தந்தி 23 Feb 2017 10:00 PM GMT (Updated: 23 Feb 2017 8:54 PM GMT)

சட்டசபையில் நடந்த சம்பவத்தின் வீடியோ பதிவை கேட்டு கடிதம் சபாநாயகருக்கு மு.க.ஸ்டாலின் அனுப்பினார்

சென்னை,

கடந்த 18-ந்தேதி சட்டசபையில் நடந்த சம்பவங்களின் வீடியோ பதிவுகளைக் கேட்டு சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பினார்.

அரசின் பெரும்பான்மை

தமிழக அரசின் பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிப்பதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் கடந்த 18-ந்தேதி சட்டசபை கூட்டப்பட்டு, நம்பிக்கைத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அப்போது சில கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டசபையில் தி.மு.க.வினர் கடுமையாக செயல்பட்டனர். இந்த நிலையில் அவர்கள் அனைவரையும் வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் ப.தனபால் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 எம்.எல்.ஏ.க்களின் வாக்கைப் பெற்று அரசின் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டது.

ஐகோர்ட்டு உத்தரவு

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. சார்பில் 20-ந்தேதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அவை விதிகளை மீறி தி.மு.க.வினர் வெளியேற்றப்பட்டதால், நம்பிக்கை தீர்மானத்தின் வாக்கெடுப்பை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அவையில் 18-ந்தேதி நடந்த நிகழ்ச்சிகளின் முழு வீடியோ பதிவை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

கடிதம்

அதைத் தொடர்ந்து சபா நாயகர் ப.தனபாலுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். அந்த கடிதம் நேற்று காலை சபாநாயகர் அலுவலகத்துக்கு கிடைக்கப் பெற்றது.

அந்த கடிதத்தில், ஐகோர்ட்டின் உத்தரவுப்படி தாக்கல் செய்ய வேண்டியதிருப்பதால், 18-ந்தேதி நடந்த சம்பவங்களின் வீடியோ பதிவுகள், வெட்டப்படாத நிலையில் எனக்கு முழுமையாக வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

Next Story