தமிழகம் முழுவதும் மேலும் 500 மதுபான கடைகள் இன்று முதல் மூடப்படுகிறது


தமிழகம் முழுவதும் மேலும் 500 மதுபான கடைகள் இன்று முதல் மூடப்படுகிறது
x
தினத்தந்தி 23 Feb 2017 10:45 PM GMT (Updated: 23 Feb 2017 9:00 PM GMT)

தமிழகம் முழுவதும் மேலும் 500 மதுபான கடைகள் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் மூடப்படுகின்றன.

சென்னை, 

தமிழகம் முழுவதும் மேலும் 500 மதுபான கடைகள் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் மூடப்படுகின்றன. மண்டலம் வாரியாக மூடப்படும் கடைகளின் பட்டியலும் வெளியிடப்பட்டு உள்ளது.

மதுபான கடைகள்

தமிழகத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கு என்ற லட்சியம் அடையப்படும் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.

அதன்படி, 23.5.2016 அன்று ஜெயலலிதா முதல்-அமைச்சராக பதவியேற்ற அன்றே 500 மதுபான கடைகள் மூடப்படும் என்றும், சில்லறை விற்பனை மதுபானக்கடைகள் மற்றும் அத்துடன் இணைந்த பார்கள் இயங்கும் நேரம் 2 மணி நேரம் குறைக்கப்படும் என்ற அறிவிப்பில் கையெழுத்திட்டார்.

ஜெயலலிதா கையெழுத்திட்ட மறுநாளே(24.5.2016) மதுபானகடைகள் மற்றும் பார்களின் நேரக்குறைப்பு அமல்படுத்தப்பட்டது. அவர் அறிவித்ததுபோல், 500 மதுபானக்கடைகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 19-ந்தேதி மூடப்பட்டன.

அரசு அறிவித்தபடி...

இதில் சென்னை மண்டலத்தில்(சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம்) 58 கடைகளும், கோவை மண்டலத்தில் 60 கடைகளும், மதுரை மண்டலத்தில் 201 கடைகளும், திருச்சி மண்டலத்தில் 133 கடைகளும், சேலம் மண்டலத்தில் 48 கடைகளும் அடங்கும்.

இந்தநிலையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல், பூரண மதுவிலக்கை படிப்படியாக எய்திடும் வகையில், தற்போது புதிதாக பதவியேற்றுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 20-ந்தேதி மேலும் 500 மதுபானக்கடைகள் மூடப்படும் என்று அறிவித்தார்.

அந்த வகையில் அரசு அறிவித்தபடி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மேலும் 500 மதுபானக்கடைகள் மூடப்படுகின்றன. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மாற்றுப்பணி வழங்கப்படும்

மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு, ‘பூரண மதுவிலக்கு’ என்ற நிலை எய்திட, கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில், ஏற்கனவே 19.06.2016-ல் 500 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக்கடைகள் மூடப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக, முதல்-அமைச்சரின் ஆணையின்படி தமிழகமெங்கும், 500 மதுபானக்கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த 169 மதுக்கூடங்கள்(பார்கள்), 24.02.2017(இன்று) முதல் மூடப்படுகின்றன. இவ்வாறு 500 மதுபானக்கடைகள் மூடப்படுவதால் உபரியாக உள்ள அனைத்து பணியாளர்களுக்கும் பணி இழப்பு ஏற்படாமல் டாஸ்மாக் நிறுவனத்திலேயே வேறு மாற்றுப்பணி வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மண்டலம் வாரியாக ஒவ்வொரு பகுதியிலும் மூடப்படும் மதுபான கடைகள், பார்களின் விவரம் வருமாறு:-

சென்னை மண்டலம்

பகுதி - கடைகள் - பார்கள்

வட சென்னை - 17 - 15

மத்திய சென்னை - 19 - 15

தென் சென்னை - 31 - 24

காஞ்சீபுரம் வடக்கு - 8 - 4

காஞ்சீபுரம் தெற்கு - 14 - 0

திருவள்ளூர் கிழக்கு - 9 - 5

திருவள்ளூர் மேற்கு - 7 - 0

மொத்தம் 105 கடைகள், 63 பார்கள்.

கோவை மண்டலத்தில் மொத்தம் 44 கடைகளும், 20 பார்களும் மூடப்படுகின்றது.

மதுரை மண்டலத்தில் 99 கடைகளும், 37 பார்களும் மூடப்படுகின்றன.

சேலம் மண்டலத்தில் 133 கடைகள், 26 பார்களும், திருச்சி மண்டலத்தில் 119 கடைகள், 23 பார்களும் மூடப்படுகின்றன.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 500 மதுபானக்கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து, 6 ஆயிரத்து 206 கடைகள் தமிழகத்தில் இருந்தன. இந்த நிலையில் மேலும் 500 மதுபானக்கடைகள் தற்போது மூடப்பட்டால் தமிழகத்தில் 5 ஆயிரத்து 706 கடைகள் இருக்கும். 

Next Story