‘டெபிட்’ கார்டை பயன்படுத்தி பண பரிமாற்றம் திருப்பூர் பெண்ணுக்கு ரூ.1 லட்சம் பரிசு


‘டெபிட்’ கார்டை பயன்படுத்தி பண பரிமாற்றம் திருப்பூர் பெண்ணுக்கு ரூ.1 லட்சம் பரிசு
x
தினத்தந்தி 23 Feb 2017 10:00 PM GMT (Updated: 23 Feb 2017 9:16 PM GMT)

மத்திய அரசின் அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர் திட்டத்தின் கீழ் திருப்பூர் பெண்ணுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

சென்னை, 

மத்திய அரசின் அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர் திட்டத்தின் கீழ் திருப்பூர் பெண்ணுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. ‘ரூபே’ டெபிட் கார்டு மூலம் பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்காக அவருக்கு இந்த பரிசு வழங்கப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து இந்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர் திட்டம்

ரொக்கமில்லா பண பரிமாற்றத்தை நிலைநிறுத்தும் வகையில் மின்னணு பண பரிமாற்றத்தில் ஈடுபடுவோரை ஊக்குவிக்கும் வகையில் ‘அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர் திட்டம்’ என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதாவது மின்னணு முறையில் பண பரிமாற்றத்தில் ஈடுபடுவோரை தேர்வு செய்து அவர்களுக்கு பரிசு கொடுத்து கவுரவிக்கிறது.

அந்தவகையில் மின்னணு பண பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு அறிமுகப்படுத்திய அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர் திட்டத்தின் கீழ் திருப்பூரைச் சேர்ந்த இல்லத்தரசிக்கு ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

திருப்பூர் இல்லத்தரசி தேர்வு

அந்த அதிர்ஷ்டசாலியின் பெயர் ஜெயந்தி (வயது 29). திருப்பூரில் வசித்து வருகிறார். சமீபத்தில் முதுநிலை பொறியாளர் பட்டப்படிப்பில் சேர்ந்துள்ளார். இவரது கணவர் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது.

பணமதிப்பு இழப்புக்கு பிறகு, மின்னணு முறையில் பண பரிமாற்றம் மேற்கொள்ள சிரமப்பட்ட ஜெயந்தி, பண பழக்கத்தை விட்டுக்கொடுக்க தயங்கினார். ‘டெபிட்’ கார்டு பயன்படுத்தி வந்த ஜெயந்தியும், அவரது கணவரும் சமீபத்தில் ‘ரூபே’ கார்டு பயன்படுத்தி பொருட்கள் வாங்க ஆரம்பித்தனர். நாளடைவில் ஜெயந்தி பெரும்பான்மையான பண பரிமாற்றங்களை ‘ரூபே’ கார்டு மூலமே மேற்கொள்ள தொடங்கிவிட்டார்.

ரூ.1 லட்சம் பரிசு

இந்தநிலையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர் திட்டத்தின் கீழ் ஜெயந்தி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இதையடுத்து அவருக்கான பரிசுத்தொகை ரூ.1 லட்சம் அவரது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

இதுகுறித்து ஜெயந்தி கூறுகையில், “இத்திட்டத்தின் கீழ் தேர்வுசெய்யப்பட்டது எனக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து மக்களும் மின்னணு பண பரிமாற்ற முறைக்கு மாறவேண்டும். அது நம் நாட்டிலிருந்து கருப்பு பணத்தை அகற்ற உதவும்”, என்றார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story