ஸ்ரீபெரும்புதூரில் 250 ஏக்கரில் அமைகிறது: வானூர்தி தொழிற் பூங்காவுக்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு தமிழக அரசு தகவல்


ஸ்ரீபெரும்புதூரில் 250 ஏக்கரில் அமைகிறது: வானூர்தி தொழிற் பூங்காவுக்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு தமிழக அரசு தகவல்
x
தினத்தந்தி 24 Feb 2017 11:00 PM GMT (Updated: 24 Feb 2017 8:50 PM GMT)

ஸ்ரீபெரும்புதூரில் 250 ஏக்கர் நிலப்பரப்பில் அமையும் வானூர்தி தொழிற் பூங்காவுக்கு சிப்காட் நிறுவனம் ரூ.30 கோடி ஒதுக்கியிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை

ஸ்ரீபெரும்புதூரில் 250 ஏக்கர் நிலப்பரப்பில் அமையும் வானூர்தி தொழிற் பூங்காவுக்கு சிப்காட் நிறுவனம் ரூ.30 கோடி ஒதுக்கியிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ரூ.30 கோடி ஒதுக்கீடு

மாநிலத்தில் வானூர்தி உற்பத்தி சார்ந்த தொழில் துறையின் மேம்பாட்டிற்காக அரசு வழிகாட்டுதலின்படி டிட்கோ நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் 250 ஏக்கர் நிலப்பரப்பில் (600 ஏக்கர் விரிவாக்கம்) அமைக்கப்பட்டு வரும் வானூர்தி தொழிற் பூங்காவும் இந்நடவடிக்கைகளில் ஒன்று.

இப்பூங்காவிற்கான சுற்றுச்சூழல் அனுமதியை சிப்காட் நிறுவனம் ஏற்கெனவே பெற்று, நில மேம்பாட்டுப் பணியை துவங்கி மேற்கொண்டு வருகிறது. இப்பூங்காவில் உட்புறசாலை, நீர் வழங்கல் வசதி, வடிகால் வசதி, மற்றும் தகவல் தொடர்பு வசதிகள் போன்ற அடிப்படை உட்கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.30 கோடியை சிப்காட் நிறுவனம் ஒதுக்கியுள்ளது.

இந்த பணிகளை சிப்காட் நிறுவனம் விரைவில் மேற்கொள்ளவிருக்கிறது. இப்பணிகளை மேற்கொள்வதற்காக ஒப்பந்ததாரரை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 14 வானூர்தி உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சிப்காட் இப்பூங்காவில் இடம் ஒதுக்கி உள்ளது. மேலும் 7 நிறுவனங்கள் இப்பூங்காவில் நிலம் வேண்டி டிட்கோவை அணுகியுள்ளன.

ஏரோ இந்தியா கண்காட்சி

இப்பூங்காவில் டிட்கோ நிறுவனம் 11 ஏக்கரில் வானூர்தி உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்காக உயர் கணினி பொறியியல் மற்றும் வடிவமைப்பு மையம் ஒன்றினை சுமார் ரூ.350 கோடி முதலீட்டில் அமைத்து வருகிறது. மேலும் டைடல் பார்க் நிறுவனம் 12 ஏக்கர் நிலப்பரப்பில் பல அடுக்கு உற்பத்தி கூடம் ஒன்றினையும் இப்பூங்காவில் அமைக்க உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் ஜூன், ஜூலையில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிட்கோ நிறுவனம் தமிழ்நாட்டில் அமைந்துள்ள வானூர்தி உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைத்து சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்ற ஏரோ இந்தியா 2017 கண்காட்சியில் பங்கேற்றது. இக்கண்காட்சியில் டிட்கோ நிறுவனம் பெரிய அளவில் 187 சதுர மீட்டர் கண்காட்சி இடத்தை எடுத்து அதில் 11 வானூர்தி உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் தங்களது உற்பத்தி திறன்களை காட்சிப்படுத்த இணைந்தனர்.

சாதகமான சூழல்

11 நிறுவனங்களின் விவரம் வருமாறு:-

லக்ஷ்மி மெஷின் ஒர்க்ஸ் (கோயம்புத்தூர்), சேலம் ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் (சேலம்), யூக்கால் ஜாப் சிஸ்டம்ஸ் (சென்னை), வால்மேட் இன்ஜினீயரிங் (சென்னை), சுந்தரம் பாஸ்ட்னர்ஸ் (சென்னை), ஸ்ரீஜெயசூரியா எண்டர்பிரைசஸ் (சென்னை), சென்டர் பார் ஏரோ ஸ்பேஸ் ரிசர்ச் அண்ணா யுனிவர்சிட்டி கேம்பஸ் (சென்னை), மெட்டாலிக் பெல்லோஸ் (சென்னை), வின்மின் ஏரோ ஸ்பேஸ் (சென்னை), எம்.டி.ஏ.பி. (சென்னை), டைடல் பார்க் (சென்னை).

டிட்கோவின் இந்த கூட்டு அணுகுமுறை தமிழ்நாட்டிற்கு பல வானூர்தி தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதற்கு ஒரு சாதகமான சூழலை ஏற்படுத்தும்.

தொழிற்துறை முதன்மை செயலாளர் விக்ரம் கபூர், கூடுதல் செயலாளர் எம்.எஸ்.சண்முகம் மற்றும் மேலாண் இயக்குனர் பி.இளங்கோவன் உள்ளிட்டோர் ஏரோ இந்தியா கண்காட்சியில் கலந்து கொண்டு 17 நிறுவனங்களின் உயர்மட்ட நிர்வாகிகளை சந்தித்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story