ஜெயலலிதா மரணத்தில் புதைந்துள்ள சந்தேகங்கள்: மத்திய-மாநில அரசுகள் நீதி விசாரணை நடத்த வேண்டும் ஓ.பன்னீர்செல்வம்


ஜெயலலிதா மரணத்தில் புதைந்துள்ள சந்தேகங்கள்: மத்திய-மாநில அரசுகள் நீதி விசாரணை நடத்த வேண்டும் ஓ.பன்னீர்செல்வம்
x
தினத்தந்தி 25 Feb 2017 12:00 AM GMT (Updated: 24 Feb 2017 9:00 PM GMT)

ஜெயலலிதா மரணத்தில் புதைந்துள்ள பல்வேறு சந்தேகங்கள் குறித்து மத்திய-மாநில அரசுகள் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

சென்னை,

ஜெயலலிதா பிறந்தநாள் விழா

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த அ.தி.மு.க. சார்பில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, ஒரு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் விழா ஆகியவை நடந்தது. மதுசூதனன் தலைமை தாங்கினார்.

ம.தி.மு.க. நிர்வாகியான எம்.எம்.கோபி தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்ததாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இதேபோல தலைமைக்கழக நட்சத்திர பேச்சாளர் பாத்திமா பாபுவும் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார்.

உற்சாக வரவேற்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டி, சிறு வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி, பெண்களுக்கு தையல் எந்திரம், மீனவ பெண்களுக்கு பாத்திரம், ஸ்கூட்டர், விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் உள்பட 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானத்தை ஓ.பன்னீர்செல்வம் வழங்கி தொடங்கிவைத்தார்.

முன்னதாக விழாவில் பங்கேற்க வந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் ஆரத்தி எடுத்தும், பட்டாசுகள் வெடித்தும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ஓ.பன்னீர்செல்வம் அணியை வாழ்த்தி வழிநெடுக பதாகைகளும் வைக்கப்பட்டிருந்தன. சாலையின் இருமார்க்கத்திலும் பெண்கள், மூத்த குடிமக்கள் நின்றுகொண்டு வாழ்த்து கோஷங்களை எழுப்பினர்.

நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

அன்பு கட்டளை

தர்மயுத்தம் வரலாற்றில் வெற்றியடைந்ததாகத்தான் சரித்திரம் உள்ளது. அது ஒருபோதும் துவண்டுவிடாது. ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது அ.தி.மு.க. தொண்டர்களுக்கு ஒரு அன்பு கட்டளையிட்டார். தன்னுடைய பிறந்தநாளன்று யாரும் என்னுடைய இல்லம் தேடி வரவேண்டாம், அதற்கு பதிலாக ஏழை மக்களுடைய இல்லம் தேடிச்சென்று நலத்திட்ட உதவிகள் வழங்குங்கள் என்று அவர் கூறினார்.

ஆடம்பரமாக பிறந்தநாளை கொண்டாடும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு இடையே, தன்னுடைய பிறந்தநாளை ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுமாறு கூறிய ஒரே தலைவர் அவர்தான்.

ஒரு குடும்பத்தின் கையில்...

மக்களால் நான், மக்களுக்காகவே நான் என வாழ்ந்து காட்டியவர் ஜெயலலிதா. திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகிய தலைவர்களின் அறிவு, ஆற்றல், குணநலன் ஒருங்கிணைந்து பெற்ற ஒரே தலைவர் ஜெயலலிதா தான். அ.தி.மு.க.வுக்கு சோதனைகள் வந்தபோதெல்லாம் சிறு குண்டுமணி அளவுக்கும் சேதம் அடையாமல் வழிநடத்தி சென்றார்.

யாராலும் அசைக்க முடியாத இரும்புக்கோட்டையாக அ.தி.மு.க.வை மாற்றியவர். ஒரு குடும்பத்தின் கையில் கட்சியும், ஆட்சியும் போகக்கூடாது, அவர்களின் தலையீடு இருக்கக்கூடாது என்பதில் ஜெயலலிதா மிகவும் உறுதியாக இருந்தார். ஆனால் அவருடைய கொள்கைக்கு, விருப்பத்திற்கு மாறாக தற்போது கட்சியும், ஆட்சியும் ஒரு குடும்பத்தின் கையில் போய்விட்டது.

மீட்டெடுப்பதுதான் நோக்கம்

அவ்வாறு சென்றுள்ள ஆட்சியையும், கட்சியையும் மீட்டெடுப்பதுதான் நம் நோக்கம். ஜெயலலிதா மரணத்தில் புதைந்துள்ள பல்வேறு சந்தேகங்கள் குறித்து மத்திய-மாநில அரசுகள் நீதி விசாரணை நடத்த வேண்டும்.

இதுதான் மக்களின் கோரிக்கையாக உள்ளது. நாங்களும் தொடர்ந்து இந்த கோரிக்கை நிறைவேறும் வரை வலியுறுத்திக்கொண்டே இருப்போம். உண்மையான அ.தி.மு.க. தொண்டர்களிடம் கட்சி வரும் வரை தர்மயுத்தம் தொடரும். தர்மம் உறுதியாக வெல்லும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கொடிகட்டும் தொண்டன்

முன்னதாக மதுசூதனன் பேசும்போது, “ஜெயலலிதா தர்மயுத்தத்தை தொடங்கியபோது எம்.எல்.ஏ.க்கள் யாரும் அவருடன் இல்லை. கொடிகட்டும் தொண்டன் மட்டுமே இருந்தான். அதுபோல கொடிகட்டும் அடிமட்ட தொண்டர்களை நம்பித்தான் இந்த தர்மயுத்தத்தை நாமும் தொடங்கி இருக்கிறோம்” என்றார்.

விழாவில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, மாபா பாண்டியராஜன், நத்தம் விஸ்வநாதன், மைத்ரேயன் எம்.பி., பி.எச்.மனோஜ்பாண்டியன் உள்பட பலர் உடன் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை வடசென்னை வடக்கு மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் செய்திருந்தார். 

Next Story