112 அடி உயர ஆதியோகி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்


112 அடி உயர ஆதியோகி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 24 Feb 2017 11:45 PM GMT (Updated: 24 Feb 2017 9:18 PM GMT)

கோவை ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயர ஆதியோகி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

கோவை,

112 அடி உயர ஆதியோகி சிலை

கோவையை அடுத்த வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயர ஆதியோகி சிவனின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டு உள்ளது. மகா சிவராத்திரி விழாவையொட்டி பிரமாண்டமான சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் இயற்கை சூழலில் அமைக்கப்பட்டுள்ள சிலை திறப்பு விழாவுக்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த விழாவில் கலந்து கொண்டு சிலையை திறந்து வைக்கவும், சிவராத்திரி விழாவை தொடங்கி வைக்கவும் பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் இருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் மாலை 5.30 மணிக்கு கோவை வந்தார். கோவை விமானநிலையத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பாரதீய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பலர் பூங்கொத்து கொடுத்து பிரதமரை வரவேற்றனர். பின்னர் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டார்.

மோடியுடன், கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் ஒரே ஹெலிகாப்டரில் சென்றனர். மாலை 6.10 மணிக்கு ஈஷா யோகா மையத்துக்கு ஹெலிகாப்டர் வந்து இறங்கியது. பிரதமர் மோடியை ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் வரவேற்றார்.

தியான லிங்கத்தை வணங்கினார்

ஈஷாயோகா மையத்தில் உள்ள புனித சூரிய குண்டத்தை பார்வையிடுவதற்காக படிக்கட்டு வழியாக பிரதமர் மோடி நடந்து வந்தார். தியான லிங்க பகுதிகளையும், நந்தி சிலையையும் பக்தி பரவசத்துடன் பார்வையிட்டார். அங்கு நடைபெற்ற பஞ்சபூத ஆராதனை நிகழ்ச்சியில் பிரதமர் தீப தட்டு ஏந்தி வந்தார். பின்னர் தியான லிங்கத்தை மலர்களை தூவி வணங்கினார். வேத மந்திரங்கள் ஓத ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

தியான லிங்கத்தை சத்குரு ஜக்கிவாசுதேவுடன் சேர்ந்து மோடி சுற்றி வந்தார். அங்கு சிறிது நேரம் உட்கார்ந்து மோடி தியானம் செய்தார்.

தியான லிங்க பகுதிக்குள் அக்னி சட்டிகளை ஏந்தி, கலைஞர்கள் நடனம் ஆடினார்கள். இதை மோடி ஆர்வத்துடன் இருக்கையில் அமர்ந்து பார்வையிட்டார்.

பின்னர் மாலை 6.50 மணியளவில் லிங்க பைரவி தேவியை தரிசனம் செய்தார். அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையிலும் பிரதமர் கலந்துகொண்டார். அங்கிருந்து கார் மூலம் ஆதியோகி சிலை அமைந்துள்ள மேடைபகுதிக்கு பிரதமர் அழைத்து வரப்பட்டார்.

சிலை திறப்பு

சிவன் சிலைக்கு புனித நீரை ஊற்றினார். அதன்பின்னர் இரவு 7.10 மணியளவில் 112 அடி உயர ஆதியோகி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அப்போது கலைஞர்கள் முரசு இசைத்தனர். சிவராத்திரிக்கான மகாயோக யக்னா தீப்பந்தத்தை ஜக்கி வாசுதேவ், பிரதமரிடம் கொடுத்தார். கொப்பரையில் மகா தீபத்தை பிரதமர் ஏற்றி வைத்தார். திறப்பு விழாவின்போது ஜக்கிவாசுதேவ் உடுக்கை அடித்தார். அப்போது மோடியும் ஆர்வத்துடன் உடுக்கையை வாங்கி சிறிதுநேரம் அடித்தார். பிரதமருக்கு ஜக்கிவாசுதேவ் கயிறு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

ஆதியோகி சிலை திறப்பையொட்டி ஆதியோகி தொடர்பான புத்தகத்தை பிரதமர் வெளியிட்டார். ஆதியோகி தொடர்பான பாடல்கள்பாடப்பட்டன. நிகழ்ச்சியையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். 

வெளிநாட்டினர் வருகை

ஆதியோகி சிவனின் முகத்தோற்ற சிலை திறப்பு விழாவில் கோவை மாவட்டம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதுபோன்று அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு பக்தர்கள் பலரும் நேற்று முன்தினம் மாலையிலேயே ஈஷா யோகா மையத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் நேற்று மாலையில் நடந்த விழாவில் கலந்து கொண்டனர். அவர்கள் விழா நடக்கும் இடத்தில் போடப்பட்டு இருந்த இருக்கைகளில் அமர்ந்து, விழாவை ஆர்வத்துடன் பார்வை யிட்டனர். 

பார்வையாளர்களுக்காக 50 டிஜிட்டல் திரைகள்

ஆதியோகி சிலை திறப்பையொட்டியும், சிவராத்திரி விழாவுக்காகவும் ஈஷா யோகா மையத்தில் 1 லட்சத்துக்கும் மேலானவர்கள் வருகை தந்து இருந்தனர். இவர்கள் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காக 300 மீட்டர் இடைவெளிக்கு ஒரு டிஜிட்டல் திரைகள் வீதம் மொத்தம் 50 டிஜிட்டல் திரைகள் வைக்கப்பட்டு இருந்தன. இதனால் பார்வையாளர்கள் எளிதாக நிகழ்ச்சியை காண முடிந்தது. 

நடனமாடிய ஜக்கி வாசுதேவ்

ஆதியோகி சிலை திறப்பு விழா முடிந்த பின்னர் தொடர்ந்து பக்தி பாடல் கள் பாடப்பட்டதுடன், பல்வேறு வாத்திய கருவிகளுடன் இசையும் இசைக்கப்பட்டது. அப்போது ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ், விழா மேடையில் பார்வையாளர்கள் அமரும் இடத்திற்கு நடுவில் போடப்பட்ட பாதையில் சென்று அங்கு திரண்டிருந்த பொதுமக்களை பார்த்து கையை அசைத்ததுடன், இசைக்கு ஏற்ப நடனமும் ஆடினார்.

அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி உள்பட பலர் உற்சாகத்துடன் நடனமாடினார்கள். 

Next Story