‘யோகா பயிற்சியின் மூலமே நற்சிந்தனையும்,உடல் ஆரோக்கியமும் கிடைக்கும்’ விழாவில் பிரதமர் மோடி பேச்சு


‘யோகா பயிற்சியின் மூலமே நற்சிந்தனையும்,உடல் ஆரோக்கியமும் கிடைக்கும்’ விழாவில் பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 25 Feb 2017 12:00 AM GMT (Updated: 24 Feb 2017 9:21 PM GMT)

‘யோகா பயிற்சியின் மூலமே நற்சிந்தனையும், உடல் ஆரோக்கியமும் கிடைக்கும்’ என்று, ஆதியோகி சிலையை திறந்து வைத்து பிரதமர் மோடி கூறினார்.

கோவை,

ஆதியோகி சிலை திறப்பு

கோவை ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டு இருந்த 112 அடி உயர ஆதியோகி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். உங்கள் அனைவருக்கும் வணக்கம் என்று தமிழில் பிரதமர் மோடி கூறி, தன்னுடைய பேச்சை தொடங்கினார். விழாவில் மோடி பேசும்போது கூறியதாவது:-

எவ்வளவோ விழாக்கள் இருந்தாலும், மகா என்ற நல்ல முன்னேற்றத்துக்கான ஒரே விழா மகாசிவராத்திரி ஆகும். எவ்வளவோ தெய்வங்கள் இருந்தும் ஒரே ஒரு மகாதேவன் தான் இருக்கிறார். எத்தனையோ மந்திரங்கள் இருந்தாலும் சிவன் பெருமையை சொல்லக்கூடிய மந்திரம் மகா மிருத்யுஞ்சய மந்திரம் என்று அழைக்கப்படுகிறது. இது சிவபெருமானின் செம்மாந்த பெருமையை குறிப்பது ஆகும். மகாசிவராத்திரி என்பது ஒரு குறிக்கோளோடு நேர்கிற ஒருமையை பற்றியது ஆகும். இருளையும், அநீதியையும் ஒழிப்பதற்கான ஒருமையை மகாசிவராத்திரி விளக்குகிறது. நாம் வீறுகொண்டு உண்மைக்காக போராடுவதற்கு, நம்மை ஊக்குவிக்கிறது. குளிர்காலத்தில் இருந்து, பிரகாசம் நிறைந்த கோடைபொழுதின் தொடக்கத்தை அது உணர்த்துகிறது. மகாசிவராத்திரி கொண்டாட்டங்கள் இரவு முழுக்க நடைபெற்று வருகின்றன.

ஆதியோகியின் மகிமை

இங்கு 112 அடி உயரம் உள்ள ஆதியோகி சிலை திறந்து வைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலையை திறந்து வைத்ததன் மூலம் ஒரு மகத்தான ஈர்ப்பு நம் அனைவரையும் ஈர்த்து உள்ளது. இன்று யோகா தனது எல்லையை கடந்து வந்து கொண்டிருக்கிறது. யோகாவுக்கென்று பல்வேறு வரைமுறைகள், பல்வேறு பள்ளிக்கூடங்கள், பல்வேறு பயிற்சி முறைகள் இருந்தாலும், யோகா நிலையான அளவு உள்ளதாக இருக்கிறது.அது புராதானமானது. ஆனால் நவீனமானது. அது நிலையானது. அது வளர்ந்து கொண்டு இருக்கிறது. யோகாவின் சாரம் இன்னும் மாறவே இல்லை. இந்த சாரத்தை நாம் பேணிக்காப்போம். இந்த சாரத்தை பேணிக்காப்பதே மிக மிக முக்கியமானது. யோகாவை நாம் பயிற்றுவிப்பதன் மூலமாக மனதில், உடலில் அறிவில் ஒரு உண்மையை நாம் உணர முடிகிறது.

மகா சிவராத்திரி நமக்கு புதிய உத்வேகத்தை அளிக்கிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத் ஆலயம், காசியில் உள்ள விசுவநாத் ஆலயங்கள் புனிதம் வாய்ந்தவை. கேதர்நாத் முதல் கன்னியாகுமரி வரை, காசி முதல் கோவை வரை அனைத்தும் சிவனை நோக்கியே உள்ளது. கோடிக்கணக்கான மக்களின் மனதில் சிவன் நிறைந்துள்ளார்.

யோகாவே ஆரோக்கியத்தை அளிக்கும்

நமது யோகா பல நாடுகளை கடந்து சென்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பல விதமான யோகா கலைகள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. பள்ளிகள்தோறும் யோகா வகுப்புகள் நடத்தப்படுகிறது. இது அனைவரையும் இணைக்கிறது. அதுதான் யோகாவின் அழகு தன்மையாகும். யோகா பயிற்சி பெறும் ஒவ்வொருவருக்கும் நற்சிந்தனைக்கான வழி காண்பிக்கிறது. ஆரோக்கியத்தை அளிக்கிறது. உடலும், மனமும் சரியான திசையை நோக்கி செல்ல உதவுகிறது. யோகா நன்மையை நோக்கி பயணிக்க உதவுகிறது. நோயை தீர்க்க உதவுகிறது.

சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 21-ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது. கனடா, சுவீடன், தென் ஆப்பிரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் யோகா தின நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. மேலும் பல வெளிநாடுகள் யோகா பயிற்சி அளிக்க நம்மை அணுகி வருகிறார்கள். யோகாவே அனைவரையும் இணைக்கும் சிறந்த கலை. அமைதியையும், சகோதரத்துவத்தையும், மனித நேயத்தையும் யோகா வளர்க்கிறது. சக்தியை அளிக்கிறது.

கடவுளை நோக்கிய கலாசாரம்

நமது கலாசாரம் கடவுளை நோக்கியே உருவாகியுள்ளது. இயற்கையும் அதை சூழ்ந்தே உள்ளது. கடவுள் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் நமக்கு நன்மை செய்கிறார்கள். நமது எண்ணங்கள் புதிய சிந்தனையை நோக்கி செல்ல வேண்டும். நல்ல அனுபவங்களை நோக்கி செல்ல வேண்டும். 21-ம் நூற்றாண்டு பல்வேறு சவால்கள் நிறைந்ததாக அமைந்துள்ளது. ஏராளமான நோய்கள் தோன்றுகின்றன. இதனை கட்டுப்படுத்த வேண்டும். மனித சமூகத்தை காப்பாற்ற வேண்டும்.

பார்வதி என்றால் கன்னியாகுமரி கடல்தான் நமக்கு நினைவுக்கு வருகிறது. எனவே சிவசக்தி சங்கமம் என்பது மலைகள் மற்றும் கடல்களின் சங்கமமாக அமைந்திருக்கும் அழகை நாம் பார்க்கின்றோம். சிவபெருமானின் குடும்பமே ஒன்றுபட்டு வாழ்கிற ஒரு உண்மையை வேற்றுமையில் ஒற்றுமை என்ற மரபை நமக்கு உணர்த்துவதாக இருக்கிறது. நம்முடைய மரபு எந்த ஒரு இறைவனாக இருந்தாலும், இறைவியாக இருந்தாலும் விலங்கிடமோ, பறவையிடமோ, மரத்தினிடமோ தொடர்பு படுத்தப்பட்டு இருக்கிறார். இந்த விலங்கும், பறவையும், அந்த மரமும் கடவுளை வணங்குகிற அதே உற்சாகத்தோடு வணங்கப் படுகிறது. இத்தகைய பண்பாடுகள் குழந்தை பருவத்தில் இருந்து நமக்கு விதைக்கப்பட்டு இருக்கின்றன. அதனால்தான் பொறுமை உணர்வு, கனிவு, சகோதரத்துவத்தோடு நாம் வாழ்கிறோம். இந்த பண்பாட்டுக்காக நமது பெரியவர்கள் வாழ்ந்து மறைந்து இருக்கிறார்கள்.

புதிய சிந்தனையை நோக்கி

நமது மனம் எல்லா பக்கங்களில் இருந்தும் புதிய புதிய சிந்தனைகள் மற்றும் எண்ணங்கள் வருவதற்கான திறந்த நிலையில் இருக்க வேண்டும். துரதிஷ்டவசமாக ஓரிருவர்கள் மட்டும்தான் தங்கள் மனதை குறுகிய எல்லையில் சுருக்கிக்கொண்டு புதிய தொடக்கங்கள் வருவதை தடுக்கிறார்கள். அதேநேரம் ஒன்று பழையது என்று எண்ணி அதை நிராகரிப்பதும் தவறு. அதை ஆராய்ச்சி செய்து, அடுத்த தலைமுறைக்கு ஏற்றதாக நாம் மாற்றிக்கொள்ள வேண்டும்.

இந்த தேசத்தில் மிக முக்கியமான அம்சம் பெண்மையின் தலைமைக்கு முக்கியத்துவம் தருகிறது. பல இறைவிகள் நம் மத்தியில் இருக்கிறார்கள். பல பெண் முனிவர்கள் தோன்றி இருக்கிறார்கள். அவர்கள் பழைய வாழ்க்கை முறையை உடைத்து புதிய முறையை படைத்து இருக்கிறார்கள். ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், தற்போது நாம் பேசுவது பெண்களின் மேம்பாடு பற்றி அல்ல. பெண்களால் தலைமை ஏற்று நடத்தப்படும் மேம்பாடு பற்றி பேசுகிறோம். 21-ம் நூற்றாண்டில் இத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. யோகா என்பது நோயில் இருந்து விடுதலை, உலகின் ஆசையில் இருந்து விடுதலை என்ற நிலையை நோக்கி போகிறது. சத்குரு ஜக்கிவாசுதேவுக்கு நான் மிகுந்த நன்றி தெரிவிப்பதற்கு காரணம், மிகச்சாதாரணமான சாமானிய மனிதர்களில் இருந்து ஒரு யோகியை உருவாக்கி இருக்கிறார். தங்கள் குடும்பங்களில் வாழ்பவர்கள், வேலைபார்த்து கொண்டிருப்பவர்கள் எல்லோருமே யோக நிலையை உணர்ந்து தினம் தினம் ஒரு அற்புதமான அனுபவத்தை பெறுவதற்கு ஜக்கிவாசுதேவ் வழிவகுத்து தந்திருக்கிறார்.

ஒருவர் இங்கிருந்தாலும், எந்த சூழலில் இருந்தாலும், அவரால் யோகியாக விளங்க முடியும் என்பதற்கு இது சான்றாக இருக்கிறது. இந்த வளாகத்தில் ஒளிவீசுகிற பல முகங்களை நான் பார்க்கிறேன். ஒரு நல்ல காரியத்துக்காக முழு அர்ப்பணிப்போடு இருக்கும் தொண்டர்களை பார்க்கிறேன். எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

இவ்வாறு மோடி கூறினார்.

விழாவில் புதுச்சேரி மாநில கவர்னர் கிரண்பெடி, மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், மத்திய மந்திரிகள் பொன்.ராதாகிருஷ்ணன், பண்டாருதத்தாத்ரேயா, விஜய்கோயல், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story