‘27-ந்தேதி பிரதமரை நேரில் சந்தித்து கோரிக்கை வைப்போம்’ கோவையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி


‘27-ந்தேதி பிரதமரை நேரில் சந்தித்து கோரிக்கை வைப்போம்’ கோவையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 24 Feb 2017 9:45 PM GMT (Updated: 24 Feb 2017 9:32 PM GMT)

27-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து கோரிக்கை வைப்போம் என்று கோவையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார்.

கோவை,

தமிழகத்திற்கு நீட் தேர்வு உகந்தது அல்ல, அதற்காக வருகிற 27-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து கோரிக்கை வைப்போம் என்று கோவையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார்.

4¼ ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்

கோவை ஈஷா யோகா மைய விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடியை கோவை விமான நிலையத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றார். முன்னதாக அவர் கோவை அரசு விருந்தினர் மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதா என்னென்ன திட்டங்களை நாட்டு மக்களுக்கு வழங்க நினைத்தாரோ அந்த திட்டங்கள் எஞ்சி இருக்கிற 4¼ ஆண்டுகளில் நிறைவேற்றப்படும். கோவை ஆத்துப்பாலம்-உக்கடம் வரையிலான உயர் மட்ட மேம்பாலம் அமைக்க விரைவாக ஒப்பந்தம் போடப்பட உள்ளது. இதுபோல் கோவை அவினாசி ரோடு லட்சுமி மில்லில் இருந்து சின்னியம்பாளையம் வரை உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

உலகத்தரத்தில் கோவை அரசு மருத்துவமனை

காந்திபுரம் மேம்பால பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அந்த பணி விரைந்து முடிக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கும். மேட்டுப்பாளையத்தில் இருந்து சாய்பாபா காலனி வரை 4 வழிச்சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கோவை மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையான மோனோ ரெயில் திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது ரூ.500 கோடி செலவில் ஈச்சனாரியில் இருந்து பொள்ளாச்சி வரை 4 வழிச்சாலை பணிகள் நடந்து வருகிறது.

ரூ.300 கோடி செலவில் கோவை அரசு மருத்துவமனை உலகத்தரத்தில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவை பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 10 ஆயிரத்து 888 வீடுகள் கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது. விரைவில் அந்த வீடுகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.320 கோடி மதிப்பில் கோவை மேற்கு புறவழிச்சாலை திட்டத்துக்கு நில எடுப்புக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது.

பவானி கூட்டுக்குடிநீர் திட்டம்

கோவை வெள்ளலூர் பகுதியில் ரூ.125 கோடியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவை மாநகர பகுதியில் உள்ள டி.பி.ரோடு, ஆர்.எஸ்.புரம், டவுன் ஹால் ஆகிய பகுதிகளில் பல அடுக்கு வாகன நிறுத்தம் விரைவில் கட்டப்படும். கோவையின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண ரூ.100 கோடி மதிப்பில் 3-வது குடிநீர் திட்டத்தை செயல்படுத்த கோம்பை மலை, கட்டன் மலை பகுதிகளில் தனி குகைவழிப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரூ.1,550 கோடி மதிப்பில் கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் வசதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ.130.47 கோடி மதிப்பில் தொண்டாமுத்தூர் ஒன்றியத்தில் பொதுமக்கள் பயன்பெற பவானி கூட்டுகுடிநீர் திட்டம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும். கோவை விமானநிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு அரசு அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது.

மத்திய அரசின் அனுமதி

அவினாசி-அத்திக்கடவு திட்டம் மிகப்பெரிய திட்டமாகும். கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த திட்டத்தை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ரூ.3,523 கோடி செலவில் தொடங்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார். இதற்கு முதல் கட்டமாக ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இந்த திட்டப்பணியை தொடங்குவதற்காக மத்திய அரசு அனுமதியை பெறுவதற்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது. மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் இந்த திட்டம் விரைந்து செயல்படுத்தப்படும். 3 மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினை தீரும். நிலத்தடி நீர் உயர்வதற்கான வாய்ப்புகள் இதனால் ஏற்படும். விவசாயிகள் வாழ்வு மேம்படும்.

தடுப்பணை கட்டும் விவகாரம்

கேரளாவில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் காவிரி நதிநீர் பிரச்சினை சம்பந்தமாக மேல்முறையீட்டு ஆணையத்துக்காக காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு அமைக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கு தற்போது நடந்து வருகிறது. அத்துடன் தடுப்பணை பிரச்சினை குறித்த மனுவையும் இணைத்து விசாரிப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். ஆகவே விரைவில் அந்த மனு விசாரணைக்கு வரும். அதன் பின்னர் தடுப்பணை கட்டுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

பிரதமரை சந்திக்க நேரம்

நீட் தேர்வை பொறுத்தவரை தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்குரிய கோப்புகள் குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதுகுறித்து வருகிற 27-ந்தேதி பிரதமரை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கி தந்துள்ளனர். பிரதமரை சந்திக்கும்போது, நீட் தேர்வு தமிழகத்துக்கு உகந்தது அல்ல. அதனை ரத்து செய்யவேண்டும் என்று கோரிக்கை வைப்போம். தமிழகத்தில் வறட்சி நிவாரண நிதியை பொறுத்தவரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூ.2,247 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இன்னும் 5 நாட்களில் அந்த நிதி வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:-ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படுமா?

பதில்:-இந்த திட்டம் மத்திய அரசின் திட்டம். இருந்தபோதிலும் தமிழக அரசு விவசாயிகளுக்கு எந்த வகையில் நன்மை செய்ய முடியுமோ அந்த வகையில் அத்தனையும் செய்யும்.

நீதிவிசாரணை நடத்தப்படுமா?

கேள்வி:-தமிழகத்தில் சாலைத்திட்டப்பணிகளுக்கு ரூ.60 ஆயிரம் கோடியும், கிழக்கு கடற்கரை சாலை பணிக்கு ரூ.10 ஆயிரம் கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மாநில அரசு ஒத்துழைப்பு கொடுத்தால் மேற்கண்ட பணிகளுக்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு இருக்கும் என்றும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறி உள்ளாரே?

பதில்:-மாநில அரசை பொறுத்தவரை மத்திய அரசுடன் இணைந்து, சுமுக உறவு வைத்து செயல்படும். மத்திய அரசின் திட்டப்பணிகள் தமிழகத்தில் முழுமையாக நடைபெற உதவும்.

கேள்வி:-மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிவிசாரணை நடத்தப்படுமா?

பதில்:- நீதிவிசாரணை நடத்துவதற்கு வேண்டும் என்றே சிலர், ஜெயலலிதா மரணம் குறித்து தவறாக புரளியை எழுப்புகின்றனர். அதில் எந்தவித பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story