கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சுழற்சி முறை ஒதுக்கீடு கேட்டு வழக்கு அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீசு


கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சுழற்சி முறை ஒதுக்கீடு கேட்டு வழக்கு அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீசு
x
தினத்தந்தி 25 Feb 2017 10:15 PM GMT (Updated: 25 Feb 2017 6:55 PM GMT)

உள்ளாட்சி தேர்தலில் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சுழற்சி முறை ஒதுக்கீட்டை பின்பற்றக்கோரிய மனுவுக்கு மார்ச் 6–ந் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை 

சென்னை ஐகோர்ட்டில் திருவள்ளுவர் மாவட்டம், மேலகொண்டையூரைச் சேர்ந்த சுகுமார் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

கடந்த 1995–ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு பஞ்சாயத்துகள் இடஒதுக்கீடு என்பது, சுழற்சி முறை இடஒதுக்கீடு விதிகளின்படி, கிராம பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் தலைவர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஆகிய பதவிகள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில், தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட பெண்கள், பொதுப்பிரிவு பெண்கள், பொதுப்பிரிவு என ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

நிராகரிப்பு 

இந்த விதிகளின் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம், மேலகொண்டையூர் கிராம பஞ்சாயத்தை பொதுப்பிரிவுக்கு ஒதுக்கவேண்டும். கடந்த 20 ஆண்டுகளாக மேலகொண்டையூர் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும், பொது பிரிவு பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டது.

தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சுழற்சி முறைப்படி இந்த கிராமத்தை பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கவேண்டும். இதுதொடர்பாக அளித்த மனுவை ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் நிராகரித்து உத்தரவிட்டார். அவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நோட்டீசு 

இந்த மனுவை ஐகோர்ட்டின் முதல் டிவி‌ஷன் பெஞ்ச் விசாரித்தது. இந்த மனுவுக்கு மார்ச் 6–ந் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story