‘ஈழத்தமிழர் பிரச்சினையை இளைஞர்களிடம் கொண்டு செல்ல இருக்கிறோம்’ டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு


‘ஈழத்தமிழர் பிரச்சினையை இளைஞர்களிடம் கொண்டு செல்ல இருக்கிறோம்’ டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
x
தினத்தந்தி 25 Feb 2017 10:00 PM GMT (Updated: 25 Feb 2017 7:01 PM GMT)

ஜல்லிகட்டு போராட்டத்தை போன்று, ஈழத்தமிழர் பிரச்சினையையும் இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்ல இருப்பதாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.

சென்னை,

கலந்துரையாடல் கூட்டம் 

‘பசுமை தாயகம்’ சார்பில் ஐ.நா. மனித உரிமை பேரவையின் 34–வது கூட்டத் தொடர் குறித்த கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கி ‘ஐ.நா. மனித உரிமை பேரவையில் அடுத்தது என்ன?’ என்ற கையேட்டை வெளியிட்டார்.

கூட்டத்தில் பா.ம.க. துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம், கவிஞர் காசியானந்தன், பேராசிரியர் சரஸ்வதி, இயக்குனர் கவுதமன் உள்பட பலர் உரையாற்றினர்.

2015–ம் ஆண்டு தீர்மானம் 

கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில் கூறியதாவது:–

நமது தொப்புள் கொடி உறவுகள் 1½ லட்சம் பேர் இலங்கையில் இனப்படுகொலை செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து பசுமை தாயகம் சார்பில் 2009–ல் இருந்து ஐ.நா. மனித உரிமை சபையில் பேசி அழுத்தம் கொடுத்து வருகிறேன். இதுவரை 50 முறை பேசி அழுத்தம் கொடுத்துள்ளேன்.

பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்து எங்களுக்கு நீதி வேண்டும் என கேட்டுள்ளேன். 2015–ம் ஆண்டு மனித உரிமை ஆணையத்தில் பேசும் போது, இந்திய அரசு மவுனமாக இருக்கிறது என பகிரங்கமாக பேசினேன். அதைத் தொடர்ந்து, இந்திய அரசு அங்கே பேசியது.

2015–ம் ஆண்டு ஐ.நா. மனித உரிமை சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில் முதல் முறையாக, இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றது என்றும், தமிழர்கள் பாதிக்கப்பட்டனர் என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும், இனப்படுகொலை என்று சொல்லாவிட்டாலும், அதற்கு இணையான அத்தனை கருத்துகளையும் கூறி இருந்தது.

மெத்தனம் 

ஆனால், அதை இலங்கை அரசு நீர்த்து போகச் செய்தது. அதன்பிறகு இலங்கை அரசு ஒரு தீர்ப்பாயத்தை அமைத்து அதில் 25 தீர்மானங்களை நிறைவேற்றுவதாக கூறிவிட்டு, இதுவரை உப்பு சப்பு இல்லாத 3 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்றி இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் இந்திய அரசின் மெத்தனம் தான். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, ராஜீவ்காந்தி கொலையை காரணம் காட்டியது. தற்போதைய பா.ஜ.க. அரசு இலங்கை அரசின் வணிகத் தேவைக்காக ஈழத்தமிழர்கள் வி‌ஷயத்தில் தயக்கம் காட்டுகிறது.

வருகிற மார்ச் 22–ந்தேதி ஐ.நா. மனித உரிமை பேரவையில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. அந்த தீர்மானம் 2015–ம் ஆண்டு கொண்டு வந்த தீர்மானத்தில் எந்த அளவும் குறைக்க கூடாது. அதன் ஒவ்வொரு செயலுக்கும் காலக்கெடு கொடுக்க வேண்டும். இந்த தீர்மான செயல் திட்டங்களை மனித உரிமை ஆணையரின் நேரடி பார்வையில் செயல்படுத்த வேண்டும்.

ஐ.நா. பாதுகாப்பு குழுவினால் மட்டுமே இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்பதால் ஈழத்தமிழர் பிரச்சினையை ஐ.நா. பொதுச்சபையின் மூலமாக ஐ.நா. பாதுகாப்பு குழுவுக்கு கொண்டு வரவேண்டும். நிரந்தரமான மனித உரிமை ஆணையத்தின் சங்கங்களை இலங்கையில் அமைக்க வேண்டும். அதற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இளைஞர்கள் மத்தியில்... 

ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு இளைஞர்கள் அழுத்தம் கொடுத்ததன் காரணமாக மத்திய அரசு அடிபணிந்தது. எனவே ஈழத்தமிழர் பிரச்சினையையும் இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்ல இருக்கிறோம். இது நமது தொப்புள் கொடி உறவுகளின் இனப்படுகொலை ஆகும். இன்னும் அங்கு பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் திருப்பிக் கொடுக்கப்படாமல் உள்ளன.

1½ கோடி மக்கள் தொகை கொண்ட இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க முடியாதா? முடியும், ஆனால் மத்திய அரசு இதனை ஒரு பிரச்சினையாக கருதவில்லை. எனவே, இந்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஐ.நா. மனித உரிமை சபையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story