அரசு அலுவலகங்களில் இருந்து ஜெயலலிதா படங்களை அகற்ற வேண்டும் தலைமைச் செயலாளரிடம் மு.க.ஸ்டாலின் மனு


அரசு அலுவலகங்களில் இருந்து ஜெயலலிதா படங்களை அகற்ற வேண்டும் தலைமைச் செயலாளரிடம் மு.க.ஸ்டாலின் மனு
x
தினத்தந்தி 25 Feb 2017 10:30 PM GMT (Updated: 25 Feb 2017 7:06 PM GMT)

தமிழக அரசு அலுவலகங்களில் இருந்து ஜெயலலிதாவின் படங்களை அகற்றவேண்டும் என்று கோரி தலைமைச் செயலாளரிடம் மு.க.ஸ்டாலின் மனு கொடுத்துள்ளார்.

சென்னை,

நேரில் சந்திப்பு 

சென்னை தலைமைச் செயலகத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வந்தார். அவருடன் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஜெ.அன்பழகன், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சுதர்சனம் ஆகியோர் வந்தனர்.

அங்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பிறப்பித்த பிறகு, மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு விளம்பரங்கள் கொடுக்கப்பட்டது பற்றியும்; அந்த நிகழ்ச்சியில் முதல்–அமைச்சர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் பல அதிகாரிகள் பங்கேற்றது குறித்தும்; அரசு அலுவலகங்களில் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு இருப்பது குறித்தும் அந்த புகார் மனு அளிக்கப்பட்டது.

தண்டனை உறுதி 

பின்னர் அங்கு நிருபர்களுக்கு, மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி வருமாறு:–

ஜெயலலிதாவை தனிப்பட்ட முறையில், அரசியல் நிலையில் இருந்து விமர்சிக்க விரும்பவில்லை. அவர் மறைந்துவிட்ட ஒரு தலைவர். எனவே, அவரை விமர்சனம் செய்வது அரசியல் நாகரிகமாகாது.

ஆனாலும், குற்றவாளி என்று உச்சநீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு, இறப்பினால் சிறைக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருந்தாலும், அவருக்கு தண்டனை உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது.

அரசுப் பணத்தில் 

ஆனால், அரசின் வரிப்பணத்தில் விளம்பரங்கள் தந்து, 69 லட்சம் மரக்கன்றுகள் நடக்கூடிய வகையில் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. அந்த விழாவில் முதல்–அமைச்சர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்பட சில அதிகாரிகள் கலந்துகொண்டிருக்கிறார்கள். இது சட்டப்படி, முறைப்படி தவறு.

தலைவர்களின் பிறந்த நாள் விழாக்களின்போது, சிறையில் இருக்கும் கைதிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடலாம். ஆனால் தண்டனை பெற்ற கைதிகளுக்கு பிறந்தநாள் கொண்டாடி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கும் நிலை இன்று தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.

கவர்னர் நடவடிக்கை 

நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரியான கிரிஜா வைத்தியநாதன், அரசியல் சட்டத்திற்கு முரணாக செயல்படும் நிலையை தட்டிக்கேட்காமல் இருந்துவிட முடியாது.

விருப்பு வெறுப்புகளை விலக்கி, தன்னுடைய பணி இருக்கும் என்று பதவி ஏற்றபோது உறுதிமொழி தந்துள்ள முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, அதை மீறியிருப்பதால், அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்த பொறுப்பு கவர்னர் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்கவேண்டும் என்று நான் கேட்டுக்கொண்டுள்ளேன்.

படங்களை அகற்றுங்கள் 

தலைமைச் செயலாளரை சந்தித்து, விளக்கமாக ஒரு மனுவை தந்திருக்கிறோம். ஜெயலலிதாவின் பெயரில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுக்கொண்டிருந்தால், அந்த பணிகளை தொடங்கி வைக்கும் நிலை நிச்சயமாக வரக்கூடாது. அதை உடனடியாக இந்த அரசு தடுத்தாக வேண்டும்.

தலைமைச் செயலகம் உள்பட அரசு அலுவலகம், உள்ளாட்சி அமைப்புகள், அமைச்சர் அலுவலகங்களில் அவருடைய படங்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலை நீடித்தால், நீதிமன்றத்தை நாடும் அவசியம் எங்களுக்கு நிச்சயம் ஏற்படும். படத்தை அகற்ற மக்கள் பிரதிநிதிகள் மட்டுமல்ல பொதுமக்களும் பிரச்சினைகளை கிளப்புவதால் சட்டம்–ஒழுங்கு பிரச்சினை வரக்கூடும். தலைமைச் செயலாளரை சந்தித்தபோது இந்த பிரச்சினைகளை எல்லாம் எடுத்துச்சொன்னோம்.

சட்டரீதியாக உரிய நடவடிக்கையை நிச்சயமாக எடுப்பேன் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். எங்களுக்கு அவர் மீது நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜனாதிபதியுடன் பேச்சு 

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:–

கேள்வி:– ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம், நீட் தேர்வு உள்பட தமிழகத்துக்கு எதிரான வி‌ஷயங்களில் இந்த அரசின் செயல்பாடு எப்படி உள்ளது?

பதில்:– நாங்கள் ஜனாதிபதியை சந்தித்தபோது 18–ந் தேதியன்று தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற சம்பவங்களை மட்டும் சொல்லாமல், நீட் தேர்வு பற்றியும் பேசினோம். விளக்கமாக தெரிவித்தோம். அதையும் கவனித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி தந்திருக்கிறார்.

டெல்லிக்கு கோப்பு போகவில்லை 

ஓ.பன்னீர்செல்வம் முதல்–அமைச்சராக இருந்தபோது சட்டசபையில் நீட் தேர்வுக்கான சட்ட முன்வடிவு கொண்டுவரப்பட்டு, தி.மு.க. உள்பட அனைத்து கட்சிகளும் ஏகமனதாக வரவேற்று, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த கோப்பு இன்னும் ஜனாதிபதியின் பார்வைக்கு செல்லவில்லை என்ற செய்தி எங்களுக்கு கிடைத்துள்ளது. அந்த நிலைதான் இந்த ஆட்சியில் உள்ளது.

அதுமட்டுமல்ல, ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் குறித்து சம்பந்தப்பட்ட மத்திய மந்திரிக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேரடியாக வலியுறுத்த இருக்கிறார்கள்.

வீடியோ படங்கள் 

கேள்வி:– சபாநாயகர் மீது நீங்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கடிதம் கொடுத்தது எந்த நிலையில் உள்ளது?

பதில்:– அதை சட்டமன்ற விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன். நடவடிக்கை எடுத்த பிறகு அதுபற்றி பேசுவோம்.

கேள்வி:– சட்டமன்ற வீடியோ படங்களைக் கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டது எந்த நிலையில் உள்ளது?

பதில்:– இதுவரை வீடியோ படங்கள் கொடுக்கப்படவில்லை. இன்னும் எடிட் செய்து, ட்ரிக் ஷாட்களை சேர்த்துக்கொண்டு இருக்கிறார்களோ தெரியவில்லை. முறையாக கொடுப்பதாக இருந்தால், நான் கேட்டவுடனே கொடுத்திருப்பார்கள். அப்படி செய்வதாக தெரியவில்லை.

நேரடி ஒளிபரப்பு 

கேள்வி:– சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என வலியுறுத்துவீர்களா?

பதில்:– அதைத் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டு தான் இருக்கிறோம். இப்போதும் வலியுறுத்துகிறோம். அதை நடைமுறைப்படுத்தி இருந்தால், நாங்கள் இவர்களிடம் சென்று கேட்கவேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது. மக்களுக்கும் எல்லா விவரங்களும் நேரடியாகவே தெரிந்திருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story