முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் இன்று மாலையில் பிரதமரை சந்திக்கிறார்


முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் இன்று மாலையில் பிரதமரை சந்திக்கிறார்
x
தினத்தந்தி 26 Feb 2017 11:45 PM GMT (Updated: 27 Feb 2017 12:23 AM GMT)

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லிக்கு சென்றார். இன்று மாலை பிரதமரை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார்.

சென்னை,

நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு உள்ளிட்ட பிரச்சினை குறித்து பிரதமர் நரேந்திரமோடியிடம் பேசுவதற்காக, உயர் அதிகாரிகளுடன் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லிக்கு சென்றார். இன்று மாலை பிரதமரை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார்.

சிவராத்திரி விழா

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, கடந்த 18–ந்தேதி சட்டசபையில் பெருமான்மையை நிரூபித்தது. இதையடுத்து, 500 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல், விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்குதல் என்று முக்கிய திட்டங்கள் குறித்து அறிவிப்பை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

இந்தநிலையில், கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் நடத்திய சிவராத்திரி திருவிழாவில், 112 அடி உயரம் கொண்ட ஆதியோகி சிவன் சிலையை திறந்து வைக்க பிரதமர் நரேந்திரமோடி வந்திருந்தார். அப்போது, பிரதமரை, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து பேசினார்.

டெல்லி சென்றார்

இதையடுத்து மருத்துவ கல்விக்கான தேசிய நுழைவுத் தேர்வான ‘நீட்’ தேர்வு எழுதுவதில் இருந்து, தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கவேண்டும். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து நடத்தி வரும் போராட்டம், தமிழகத்தில் நிலவும் வறட்சி உள்ளிட்டவை குறித்து பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேச முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்தார்.

இதற்காக நேற்று அவர் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.40 மணியளவில் சென்னையில் இருந்து புறப்பட்ட முதல்–அமைச்சர், இரவு 10.15 மணிக்கு டெல்லியை சென்று அடைந்தார்.

அரசு அதிகாரிகள்

முதல்–அமைச்சருடன் தமிழக அரசு செயலாளர்கள் சிவ்தாஸ் மீனா, விஜயகுமார், கூடுதல் செயலாளர்கள் ஜெயஸ்ரீ முரளிதரன், போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், கிரிதரன், தர்மராஜ் ஆகியோரும் உடன் சென்றனர். இவர்கள் செல்லும் அதே விமானத்தில், எம்.பி.க்கள் கே.மரகதம், பி.குமார், அருண்மொழித்தேவன், ஜி.அரி, எம்.சந்திரகாசி, பி.நாகராஜன், கே.பரசுராமன், ஆர்.கே.பாரதிமோகன், செல்வகுமார் சின்னய்யன், அன்வர்ராஜா, கே.கோபால் ஆகியோரும் சென்றனர்.

இவர்களுடன் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் செல்லவில்லை. அவர், இன்று (திங்கட்கிழமை) காலையில் சென்னையில் இருந்து விமானத்தில், டெல்லி செல்கிறார். பிரதமர் நரேந்திரமோடியை, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கும் போது, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும் உடனிருப்பார்.

பிரதமருடன் சந்திப்பு

டெல்லி சென்றுள்ள முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடன் சென்றுள்ள தமிழக அரசு அதிகாரிகள், இன்று காலையில் 9.30 மணிக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின்கட்கரியை அவரது வீட்டில் வைத்து சந்தித்து பேசுகிறார்கள். அதன்பின்னர் 12 மணிக்கு, மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி எம்.வெங்கையா நாயுடுவையும், 1 மணியளவில், சட்டத்துறை மந்திரி ரவிசங்கர்பிரசாத்தையும், அதன்பின்னர், 3.30 மணியளவில் மின்சாரத்துறை மந்திரி பியூஷ்கோயலையும் சந்தித்து பேசுகின்றனர்.

இதன்பின்னர், மாலை 5.45 மணிக்கு பிரதமர் நரேந்திரமோடியை, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அரசு செயலாளர்கள் ஆகியோர் சந்தித்து பேசுகின்றனர். அப்போது, நீட் தேர்வு, நெடுவாசல் பிரச்சினை உள்பட பல விவகாரங்கள் குறித்து பிரதமருடன் பேச உள்ளார்கள்.

இரவு விருந்து

இந்த சந்திப்புகளை எல்லாம் முடித்த பின்னர், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு செல்கின்றனர். அங்கு, டெல்லியில் பணியாற்றும் தமிழ்நாடு பிரிவை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், அதிகாரிகளுக்கும், மத்திய அரசு துறைகளில் உயர் அதிகாரிகளாக பணியாற்றி வரும் தமிழ்நாட்டை சேர்ந்த உயர்அதிகாரிகளுக்கும் எடப்பாடி பழனிசாமி இரவு விருந்து அளிக்கின்றார்.
 

Next Story