பிறந்தநாள் பரிசாக நல்ல புத்தகங்களை வழங்குங்கள் தொண்டர்களுக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்


பிறந்தநாள் பரிசாக நல்ல புத்தகங்களை வழங்குங்கள் தொண்டர்களுக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
x
தினத்தந்தி 26 Feb 2017 11:15 PM GMT (Updated: 26 Feb 2017 6:20 PM GMT)

பொன்னாடைகளை தவிர்த்து நல்ல புத்தகங்களை பரிசாக வழங்குங்கள் என மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் வடிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

வெற்றித்திருநாள் தொலைவில் இல்லை

ஒரே இல்லத்தில் வாழ்ந்து சதிச்செயலில் இறங்கி லஞ்ச ஊழலில் ஈடுபட்டு சொத்துகளை வாங்கிக்குவித்த குற்றவாளியின் ‘பினாமி’ ஆட்சிக்கு எதிரான தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், போராட்டக்களங்களை தி.மு.க. தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் மட்டுமின்றி, இந்தியத் தலைநகர் டெல்லி வரை இதற்கான குரலை முன்னெடுத்துள்ளோம். மக்களின் விருப்பத்துக்கு மாறான அரசை அமைதி புரட்சி வழியில் அகற்றி, மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்ற அரசாக தி.மு.க. அரசு அமையும் வரையில் ஜனநாயக வழியிலான இந்த போராட்டம் தொடரும். அந்த வெற்றித்திருநாள் வெகுதொலைவில் இல்லை.

கட்சி தொண்டர்களின் சளைக்காத உழைப்புடனும், ஒத்துழைப்புடனும் தமிழக மக்களின் பேராதரவுடனும் அறவழி போராட்டகளத்தை தி.மு.க. கட்டமைத்து சந்தித்து வரும் நிலையில், இடைக்கால இளைப்பாறுதல் போல என்னுடைய பிறந்தநாளுக்கான வாழ்த்து செய்திகளை கட்சியினர் பலரும் முன்கூட்டியே தெரிவித்து வருகிறார்கள். இளைஞர் எழுச்சி நாள் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளையும் ஆர்வத்துடன் மேற்கொண்டுள்ளனர்.

மரக்கன்று நடுதல்

பிறந்தநாள் விழாக்களை ஆடம்பரமாகக் கொண்டாட வேண்டாமென்றும், மக்களுக்கு பயன்தரும் வகையில் ரத்ததானம், நலத்திட்ட உதவிகள், இயற்கையை போற்றும் விதத்தில் மரக்கன்று நடுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கட்சி தொண்டர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வேண்டுகோள் விடுத்து வருகிறேன்.

அத்துடன் பேனர்கள், கட்–அவுட்டுகள் போன்ற பொதுமக்களுக்கு அதிருப்தி ஊட்டும் பிறந்தநாள் அலங்கார ஆடம்பரங்களைக் கண்டிப்பாக, கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும் என்பதையும் ஒவ்வொரு முறையும் வேண்டுகோளாக விடுத்து வருகிறேன். என்னுடைய வேண்டுகோளை அன்புக்கட்டளையாக ஏற்று தவறாமல் செயல்படுத்தும் கட்சி தொண்டர்களின் கட்டுப்பாடே எனக்கு கிடைக்கும் மிகச்சிறந்த பிறந்தநாள் பரிசாக கருதுகிறேன். அன்புமிகுதியாலும் ஆர்வத்தாலும் ஒரு சில தொண்டர்கள் ஆடம்பர விழாக்களை முன்னெடுப்பதும் உண்டு. அவற்றையும் தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

மட்டில்லா மகிழ்ச்சி

காலில் விழுவதைத் தவிர்த்து கம்பீரமான வணக்கம் செலுத்தி சுயமரியாதை காப்போம் என்ற என்னுடைய வேண்டுகோளை கட்சியினர் கடைப்பிடித்து வருவது மட்டிலா மகிழ்ச்சி தருகிறது. அதுபோலவே, நான் பங்கேற்கும் கழக நிகழ்ச்சிகளில் பேனர்களைத் தவிர்த்து, கட்சியின் இருவண்ணக் கொடிகளை காணும் திசையெல்லாம் பறக்கச் செய்யுங்கள் என்ற வேண்டுகோளையும் கட்சியினர் தொடர்ந்து செயல்படுத்தி வருவது களிப்பை அள்ளித்தருகிறது.

அதுபோலவே, பிறந்தநாள் விழா தொடர்பான படாடோபக் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, மக்கள் நலன் சார்ந்த விழாக்கள், கட்சியின் கொள்கையை வெளிப்படுத்தும் கருத்தரங்கங்கள் போன்ற அறிவொளித் திருவிழாக்களை நடத்த வேண்டும் என்பதே என் வேண்டுகோளாகும்.

புத்தகத்தை அன்பளிப்பாக வழங்கும் பழக்கம்

விழா நாட்களிலும், மேடைகளிலும் சால்வை என்ற பெயரில் பயனற்ற துணியை அணிவிப்பது என்பது பொருளற்ற செயலாக அமைந்துவிடுகிறது. பகட்டான இந்தப் பழக்கத்தைத் தவிர்த்து, காலமெல்லாம் பயனுள்ள வகையில் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கும் பழக்கத்தை மீண்டும் புதுப்பித்துப் பின்பற்றுவோம்.

கட்சியினர் இல்லங்களில் நடைபெறும் திருமண விழாக்கள் தொடங்கி பலவற்றிலும் புத்தகங்களைப் பரிசளித்து, படிக்கும் பழக்கத்தை சமுதாயத்தில் பரவலாக்கிப் பெருக்கிய பெருமை தி.மு.க.வுக்கு உண்டு. ஊர் தோறும், தெரு தோறும் படிப்பகங்களை உருவாக்கி பொதுமக்களின் அறிவுப்பசிக்கு புத்தகங்கள் வாயிலாகவும் பத்திரிகைகள் வாயிலாகவும் நல்விருந்து பரிமாறிய இயக்கம் நம் தி.மு.க.

அதன் தொடர்ச்சியாக, தி.மு.க.வால் பல நூலகங்கள் உருவாக்கப்பட்டன. தலைவர் கருணாநிதியின் பெருமுயற்சியால், மிகப் பெரிய நூலகமான உலகத் தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகம் தொடங்கப்பட்டதுடன், உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தபோது, ஊராட்சிகள் தோறும் நூலகங்கள் தொடங்கப்பட்டன. அவை அனைத்தையும் இழுத்து மூடி முடக்கிய இருளடைந்த ஒரு ஆட்சி இப்போது தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

அறிவை விசாலப்படுத்திக் கொள்ள வாய்ப்பு

அறிவாற்றல் மிக்க இளைய சமுதாயம் தமிழகத்தில் உருவாகியுள்ள நிலையில், அதனை மேலும் பரவலாக்கிக் கூர்மைப்படுத்தவும், தமிழகத்தின் வரலாற்றுப் பெருமையையும் உலகளாவிய நிலைமைகளையும் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் வகையிலும் புத்தகங்கள் துணை நிற்கின்றன. எனவே, என் பிறந்தநாளில் நேரில் சந்தித்து அன்பை வெளிப்படுத்த நினைக்கும் கட்சியினர் யாரும் சால்வை அணிவிக்காமல், புத்தகங்களை அளிக்குமாறு அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன்.

நீங்கள் வழங்கும் புத்தகங்களில் எனது அறிவை மேலும் விசாலப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்பதோடு, மிகுதியாக சேரும் புத்தகங்களை தமிழகத்தில் உள்ள பல நூலகங்களுக்கும் கொடுத்து உதவி, அதன் மூலம் தமிழக இளைஞர்கள், மகளிர் உள்ளிட்ட அனைவரும் அளவிலாப் பயன்பெறச் செய்ய முடியும்.

என் அன்பு வேண்டுகோளை எப்போதும் ஏற்று கண்டிப்பாக கடைப்பிடிக்கும் தி.மு.க.வினர் இந்த வேண்டுகோளையும் ஏற்று, சால்வைபொன்னாடை போன்ற பகட்டான பரிசுகளைத் தவிர்த்து, மார்ச் 1–ந்தேதி இளைஞர் எழுச்சி நாள் முதல் தொடர்ந்து நல்ல புத்தகங்களை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story