தமிழகத்தின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார்: முதல் அமைச்சர் பழனிசாமி பேட்டி


தமிழகத்தின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார்:  முதல் அமைச்சர் பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 27 Feb 2017 1:47 PM GMT (Updated: 27 Feb 2017 1:47 PM GMT)

டெல்லியில் பிரதமரை சந்தித்த முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 60 பக்கங்கள் கொண்ட கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து தமிழக பிரச்னைகள் பற்றிய கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.

பிரதமருடனான இந்த சந்திப்பு அரை மணிநேரம் வரை நடந்தது.  இந்த சந்திப்பில் அவர், ஹைட்ரோ கார்பன் விவகாரம், வறட்சி நிவாரணம் மற்றும் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் ஆகிய பிரச்னைகள் பற்றி பிரதமரிடம் முதல் அமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்.

இச்சந்திப்பில் 60 பக்கங்கள் கொண்ட கோரிக்கை மனுவும் பிரதமரிடம் அளிக்கப்பட்டுள்ளது.  அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த முதல் அமைச்சர் கூறும்பொழுது, ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடக்க உதவிய பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளேன்.

தேசிய தகுதி நுழைவு தேர்வுக்கான நீட் சட்ட முன்வடிவிற்கு மத்திய அரசின் ஒப்புதல் தரவும், தஞ்சாவூரில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் நிறுவவும் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

அத்திக்கடவு-அவினாசி திட்ட நிறைவேற்றத்திற்கு நிதி ஒப்புதல் வழங்க பிரதமரிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

வர்தா புயல் நிவாரண நிதியாக ரூ.22,573 கோடி வழங்க கோரிக்கை

மீனவர்களின் நலவாழ்வு திட்டத்திற்காக ரூ.1,650 கோடி வழங்க கோரிக்கை

பாரம்பரிய பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி வழங்க கோரிக்கை

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

வறட்சி நிவாரண பணிகளுக்காக ரூ.39,565 கோடி வழங்க வேண்டும் என கோரிக்கை

உணவு பாதுகாப்பு திட்டத்தில் தமிழகத்திற்கு கூடுதலாக 85 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியை ஒதுக்கீடு செய்ய கோரிக்கை

தமிழகத்திற்கு தர வேண்டிய நிலுவையில் உள்ள ரூ.17,333 ஆயிரம் கோடியை விடுவிக்க கோரிக்கை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரிக்கை

தீபகற்ப நதிகளை ஒன்றாக இணைக்க உரிய நடவடிக்கை தேவை

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க கோரிக்கை

மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை நிறைவேற்ற வேண்டாம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை கைவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது என கூறினார்.

தமிழகத்தின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார் என முதல் அமைச்சர் கூறியுள்ளார்.

Next Story