ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 3–ந்தேதி தாம்பரம் விமான படை தளத்தின் 2 பிரிவுகளுக்கு விருது வழங்குகிறார்


ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 3–ந்தேதி தாம்பரம் விமான படை தளத்தின் 2 பிரிவுகளுக்கு விருது வழங்குகிறார்
x

தாம்பரம் விமான படை தளத்தின் 2 பிரிவுகளுக்கு விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 3–ந்தேதி சென்னை வருகிறார்.

சென்னை,

ஒவ்வொரு வருடமும் ராணுவத்துக்கு சிறந்த சேவை ஆற்றும் வகையிலும், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதிலும், போர்க்கால பயிற்சி பெறுவதிலும் சிறப்பாக விளங்கக்கூடிய படை பிரிவுகளுக்கு ஜனாதிபதி விருது வழங்கப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு சென்னை தாம்பரத்தில் உள்ள விமான படை தளத்துக்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட இருக்கிறது. அங்குள்ள ‘125’ ரக ஹெலிகாப்டர் பிரிவு மற்றும் எம்.ஐ.டி. எனும் மெக்கானிக்கல் பயிற்சி மைய பிரிவும் இந்த விருதை பெறுகின்றன. இந்த விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்று படை பிரிவுகளுக்கு விருது வழங்கி கவுரவிக்க உள்ளார்.

இதுகுறித்து தாம்பரம் விமானப் படை தளத்தில் நேற்று முதன்மை கமாண்டிங் அதிகாரி ஏர்மார்‌ஷல் எஸ்.ஆர்.கே.நாயர் நிருபர்களிடம் கூறியதாவது:–

ஹெலிகாப்டர் பிரிவு

இந்த ஆண்டுக்கான ஜனாதிபதி விருது தாம்பரம் விமானப் படை தளத்தில் அங்கம் வகிக்கும் ‘125’ ரக ஹெலிகாப்டர் பிரிவு மற்றும் எம்.ஐ.டி. எனும் மெக்கானிக்கல் பயிற்சி மைய பிரிவுக்கும் கிடைக்க இருக்கிறது. இதில் ‘125’ ரக ஹெலிகாப்டர் பிரிவு பல்வேறு சிறப்புகளை கொண்டது. ‘கிளேடியேட்டர்’ என்று அழைக்கப்படும் இப்பிரிவு 1983–ம் ஆண்டு நவம்பர் 1–ந்தேதி பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் தொடங்கப்பட்டது.

தாம்பரம் விமானப் படை தளத்தில் 1986–ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது. 1999–ம் ஆண்டு கார்கில் போர் உள்பட பல்வேறு ராணுவ நடவடிக்கைளில் ‘கிளேடியேட்டர்’ முக்கிய அங்கம் வகித்து உள்ளது. ‘வீர்சக்ரா’, ‘யூத் சேவா’, ‘வாயு சேனா’ உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளது.

மெக்கானிக்கல் பிரிவு

மெக்கானிக்கல் பயிற்சி மைய பிரிவும் பல சாதனைகளை படைத்து உள்ளது. இந்த படை பிரிவு முதன்முதலாக அரியானா மாநிலம் அம்பாலாவில் 1935–ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பல்வேறு தொழில்நுட்பங்களுடன் 1980–ம் ஆண்டு ஜூலை 21–ந்தேதி தாம்பரம் விமானப் படை தளத்தில் தொடங்கியது.

உயர்தர மெக்கானிக்கல் பயிற்சி அளிக்கப்படும் மிக முக்கியமான மையமாக இது திகழ்கிறது. என்ஜினின் உந்துவிசை சரிபார்ப்பு, பராமரிப்பு மற்றும் ஆயுதம் தாங்கி வடிவமைப்பு இப்பிரிவின் முக்கிய பணிகள்.

ஜனாதிபதி வழங்குகிறார்

இந்த இரு பிரிவுகளுக்கும் ராணுவ விருது வழங்கும் விழா 3–ந்தேதி தாம்பரம் விமானப் படை தளத்தில் நடக்கிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சென்னை வருகிறார். ஹெலிகாப்டர் பிரிவு மற்றும் மெக்கானிக்கல் பயிற்சி மைய பிரிவுகளுக்கு அவர் உரிய சின்னமும், கொடியும், விருதும் வழங்கி கவுரவிக்கிறார்.

இந்த விழாவில் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசு உயர் அதிகாரிகள், ராணுவம் மற்றும் விமானப்படை தள உயர் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

விமான சாகசம்

விமானப் படை தளத்தின் ‘ஏர் வாரியர் டிரில் டீம்’ அணிவகுப்புடன் விழா தொடங்குகிறது. ‘சூர்யா கிரன் ஏரோபட்டிக்ஸ் டீம்’ வானில் விமான சாகசங்களை செய்து காட்டுகின்றனர். எம்.ஐ–17 மற்றும் எம்.ஐ–35 ரக ஹெலிகாப்டர்களும் சாகசத்தில் ஈடுபட உள்ளன.  இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது விமானப் படை தள அதிகாரிகள் ‘ஏர் கமோடர்’ எஸ்.சீனிவாஸ், கேப்டன் ஏ.அருணாசலேஸ்வரன், கேப்டன் வி.டி.வதோனி, மக்கள் தொடர்பு அதிகாரி டி.சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story