ரே‌ஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்


ரே‌ஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 27 Feb 2017 4:54 PM GMT (Updated: 27 Feb 2017 4:54 PM GMT)

ரே‌ஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

போராட்டம் நடத்துவோம்

சென்னை சாலிகிராமம் காவேரி தெருவில் உள்ள ரே‌ஷன் கடைக்கு சென்று அங்குள்ள சூழ்நிலையை நான் நேரில் பார்த்தேன். வெறும் புழுங்கல் அரிசியும், சர்க்கரையும் மட்டுமே கிடைக்கிறது. மற்ற பொருட்கள் சிறப்பு உணவு வகையான பருப்புகள், பாமாயில் கிடைப்பதில்லை என்பதை அறிந்தேன். அங்கிருந்த மக்கள் சொன்னது 2 மாதமாக இந்த சூழ்நிலை தான் என்றார்கள். எனக்கும் புரியவில்லை. பொதுமக்களுக்கு பொருட்கள் கிடைக்காதது டெண்டரினாலா?, தற்காலிகமாக முதல்–அமைச்சர்கள் மாறியதாலா? என்பது தான்.

நல்ல எண்ணத்தோடு செயல்படுத்தப்படும் உணவு பாதுகாப்பு திட்டத்தை தமிழக அரசின் தவறினால் உணவுப்பொருட்கள் கிடைக்காததோடு இணைத்து பேசுவது தவறாகும். தமிழக அரசு உடனே மக்களுக்கு ரே‌ஷன் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லை என்றால் அதைப் பெற்றுத்தருவதற்கு பா.ஜ.க. மகளிரணி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

நுகர்வோர் பாதுகாப்புக்கு வழி

ரே‌ஷன் கடைகளில் மானிய விலை கொடுத்து வாங்கும் பல பொருட்களில் பாக்கெட் செய்யப்பட்ட தேதி மற்றும் காலாவதியாகும் தேதி எதுவும் இல்லை. அதனால், பொருட்கள் வண்டு விழுந்து மோசமான நிலையில் இருப்பதைப் பார்த்தேன்.

ரே‌ஷன் கடையில் உள்ள பாக்கெட் பொருட்களில் காலாவதி தேதியும் அச்சடிக்க வேண்டும். அதுதான் நுகர்வோர் பாதுகாப்புக்கும் வழி வகுக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story