சென்னையில் முடங்கி கிடக்கும் ‘அம்மா’ குடிநீர் மையங்கள்


சென்னையில் முடங்கி கிடக்கும் ‘அம்மா’ குடிநீர் மையங்கள்
x
தினத்தந்தி 27 Feb 2017 5:40 PM GMT (Updated: 27 Feb 2017 5:39 PM GMT)

ஏழை மக்களுக்காக ஜெயலலிதா திறந்து வைத்த அம்மா குடிநீர் மையங்கள் முடங்கி கிடக்கின்றன.

சென்னை,

இதனை கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பு திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மினரல் வாட்டர்

சென்னை நகரில் வசிக்கும் ஏழை–எளிய மக்களும் வசதி படைத்தவர்களை போன்று ‘மினரல் வாட்டர்’(சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான குடிநீர்) அருந்த வேண்டும் என்று மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா விரும்பினார். இதனை நிறைவேற்றும் வகையில் ‘அம்மா குடிநீர் திட்டம்’ என்ற புதிய திட்டத்தை அவர் செயல்படுத்தினார்.

அதன்படி முதற்கட்டமாக சென்னை நகரில் ஏழை–எளிய மக்கள் அதிகம் வசிக்கும் 20 இடங்களில் அம்மா குடிநீர் மையத்தை கடந்த ஆண்டு பிப்ரவரி 13–ந்தேதி ஜெயலலிதா திறந்து வைத்தார்.

மாநகராட்சி தீர்மானம்

அம்மா குடிநீர் மையத்தில் ஒரு குடும்பத்துக்கு நாள் ஒன்றுக்கு 20 லிட்டர் ‘மினரல் வாட்டர்’ விலை இல்லாமல் வழங்கப்பட்டது. இந்த திட்டம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றதையடுத்து, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் ரூ.9 கோடியே 60 லட்சத்து 40 ஆயிரம் செலவில் மேலும் 30 இடங்களில் அம்மா குடிநீர் மையம் திறக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி அதற்கான பணிகள் உடனடியாக தொடங்கினாலும், நாளடைவில் பணிகள் முடங்கி போனது.

எந்திரங்கள் பழுதாகும்

இதற்கிடையே சென்னையில் திறக்கப்பட்ட பெரும்பாலான அம்மா குடிநீர் மையங்கள் திடீரென்று மூடப்பட்டன. அவை கடந்த சில மாதங்களாக வெறும் காட்சி பொருட்களாகவே காணப்படுகின்றன. இதன் காரணமாக அம்மா குடிநீர் மையத்தில் ஒரு மணி நேரத்துக்கு 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் லிட்டர் வரை குடிநீரை சுத்திகரிக்கும் எந்திரங்கள், மோட்டார்கள் பழுதாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை ஒருபுறம் கருத்தில் கொண்டும், மற்றொருபுறம் கோடைகாலம் நெருங்குவதால் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஏதுவாக மூடப்பட்ட அம்மா குடிநீர் மையங்களை உடனடியாக திறக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகாரிகள் அலட்சியம்

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, ‘ஒரு திட்டத்தை தொடங்குவது பெரிதல்ல. அதனை முறையாக செயல்படுத்த வேண்டும். அப்போது தான் அந்த திட்டத்தின் பலன் மக்களை முழுமையாக சென்றடையும். அந்தவகையில் மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுத்திய அம்மா குடிநீர் திட்டம் அதிகாரிகள், ஊழியர்கள் அலட்சியத்தால் தற்போது முடங்கி இருக்கிறது. கோடை வெயில் காலம் தொடங்க உள்ளநிலையில் மூடப்பட்ட அம்மா குடிநீர் மையங்கள் திறந்து மக்களின் தாகத்தை தணிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்றார்.


Next Story