அ.தி.மு.க.வின் சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளர்கள் புதிய சின்னத்தில் போட்டி


அ.தி.மு.க.வின் சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளர்கள் புதிய சின்னத்தில் போட்டி
x
தினத்தந்தி 24 March 2017 12:15 AM GMT (Updated: 23 March 2017 7:09 PM GMT)

அ.தி.மு.க.வின் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளர்கள் புதிய சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.

சென்னை, 

ஜெயலலிதா மரணம் அடைந்ததால் காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு வருகிற ஏப்ரல் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் கமிஷன் தடை

அ.தி.மு.க. இரண்டாக உடைந்து அக்கட்சியினர் சசிகலா தலைமையில் ஓர் அணியாகவும், முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியாகவும் செயல்பட்டு வரும் நிலையில் நடைபெறும் தேர்தல் என்பதால், இந்த இடைத்தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. என்ற கட்சி பெயரை பயன்படுத்த இரு அணியினருக்கும் தடை விதித்துள்ள தேர்தல் கமிஷன், அக்கட்சியின் சின்னமான இரட்டை இலையையும் முடக்கி இருக்கிறது.

அ.தி.மு.க. அணிகளுக்கு புதிய சின்னங்கள்

மாற்று ஏற்பாடாக சசிகலா அணிக்கு அ.இ. அ.தி.மு.க. (அம்மா) என்ற புதிய பெயரையும், தொப்பி சின்னத்தையும் தேர்தல் கமிஷன் ஒதுக்கி இருக்கிறது.

இதேபோல் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு அ.இ. அ.தி.மு.க. (புரட்சித் தலைவி அம்மா) என்ற பெயரையும், இரட்டை விளக்கு மின்கம்பத்தையும் ஒதுக்கி உள்ளது.

மதுசூதனன், டி.டி.வி.தினகரன்

இந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நேற்றுதான் கடைசி நாள் ஆகும்.

இறுதி நாளான நேற்று ஓ.பன்னீர்செல்வத்தின் அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) கட்சியின் சார்பில் போட்டியிட மதுசூதனனும், சசிகலாவின் அ.தி.மு.க. (அம்மா) கட்சியின் சார்பில் போட்டியிட டி.டி.வி. தினகரனும் தங்கள் வேட்புமனுக் களை தாக்கல் செய்தனர்.

ஜெ.தீபா பேரவையின் சார்பில் போட்டியிட ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவும், பாரதீய ஜனதா சார்பில் கங்கை அமரனும், சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் அந்தோணி சேவியரும் தேர்தல் அதிகாரி பிரவீன் நாயரிடம் தங்கள் மனுக்களை வழங்கினார்கள். கட்சி வேட்பாளர்களுக்கு மாற்று வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்தனர்.

மேலும் 64 சுயேச்சைகளும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

127 பேர் மனு தாக்கல்

ஏற்கனவே இந்த தொகுதியில் போட்டியிட தி.மு.க. சார்பில் மருதுகணேசும், தே.மு. தி.க. சார்பில் மதிவாணனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் லோகநாதனும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் கலைக்கோட்டுதயமும் மற்றும் பல சுயேச்சைகளும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து இருக்கிறார்கள்.

அந்த வகையில், ஆர்.கே.நகர் தொகுதியில் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் உள்பட மொத்தம் 127 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள்.

இன்று பரிசீலனை

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. வேட்பு மனுதாக்கல் செய்தவர்கள் அல்லது அவர்கள் சார்பில் பிரதிநிதிகள் இந்த பரிசீலனையில் பங்கேற்க உள்ளனர்.

பரிசீலனையின் போது, தேர்தல் கமிஷனின் விதிமுறைகளை பின்பற்றாத மனுக்கள் தகுதியில்லாத மனுக்களாக கருதப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டு, தகுதியான மனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் வேட்பு மனுக்களை திரும்பப் பெற வருகிற 27-ந் தேதி (திங்கட் கிழமை) கடைசி நாள் ஆகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, வேட்பாளர்களுக்கான சின்னங்களும் ஒதுக்கப்படும்.

ஏப்ரல் 12-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். பதிவான வாக்குகள் ஏப்ரல் 15-ந் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

Next Story