இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது தி.மு.க.வுக்கு சாதகமாக இருக்குமா? மு.க.ஸ்டாலின் பதில்


இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது தி.மு.க.வுக்கு சாதகமாக இருக்குமா? மு.க.ஸ்டாலின் பதில்
x
தினத்தந்தி 23 March 2017 11:45 PM GMT (Updated: 23 March 2017 7:35 PM GMT)

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது தி.மு.க.வுக்கு சாதகமாக இருக்குமா? என்ற கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

சென்னை,

கேள்வி:- சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் தோல்வியடைந்துள்ளது. உங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?.

பதில்:- சபாநாயகரை நீக்கக்கோரி நாங்கள் கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்ததற்கு கவலைப்படவில்லை. இதை நாங்கள் கொண்டு வருவதற்கு முன்பே இதனுடைய முடிவு என்ன என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். இருந்தாலும் இந்த தீர்மானத்தை நாங்கள் கொண்டு வந்ததற்கு காரணம், தலைவர் கருணாநிதி சட்டமன்ற ஜனநாயக மரபுகளை எங்களுக்கு தெளிவாக கற்றுக் கொடுத்திருக்கிறார். சட்டமன்றத்தில் சபாநாயகர் விதிகளை எந்த வகையிலும் கடைபிடிக்கவில்லை என்பதை எடுத்துக்காட்ட வேண்டும் என்பதற்காகத்தான், நாங்கள் இந்த தீர்மானத்தை கொண்டு வந்து, அந்த தீர்மானத்திலே அதுபற்றி எல்லாம் பேசி, அவையிலே பதிவு செய்திருக்கிறோம். இது நாட்டு மக்களுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த தீர்மானத்தை கொண்டு வந்தோமே தவிர, வெற்றி-தோல்வி என்ற அந்த நிலையில் இதை நாங்கள் கொண்டு வரவில்லை. இதுதான் உண்மை.

உட்கட்சி விவகாரம்

கேள்வி:- உடைந்த அ.தி.மு.க.வின் இரு பிரிவினருக்கும் இப்போது இருவேறு சின்னங்களை கொடுத்திருக்கிறார்கள். அதில் மின்விளக்கு கம்பம் சின்னம் பார்ப்பதற்கு இரட்டை இலை போன்று இருக்கிறது. இது குறித்து உங்களது கருத்து என்ன?.

பதில்:- ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய அ.தி.மு.க. இரண்டாக பிரிந்து அவர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் உட்கட்சி விவகாரமாக, நேற்றைய தினம் தேர்தல் ஆணையத்தின் மூலமாக அவர்களுடைய சின்னம் முடக்கப்பட்டிருக்கிறது. கட்சியினுடைய பெயரும் முடக்கப்பட்டிருக்கிறது. இவைகளை எல்லாம் நாங்கள் செய்திகளாக அறிந்து கொண்டோம். எனவே, இது அவர்களுடைய உட்கட்சி பிரச்சினை. எனவே, தி.மு.க.வை பொறுத்தவரையில் தேவையில்லாமல், இன்னொரு கட்சியின் உட்கட்சி பிரச்சினையில் என்றைக்கும் தலையிடாது. தலையிடவும் மாட்டோம்.

நம்பிக்கை

கேள்வி:- இதற்கு பிறகு சபாநாயகர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?. காங்கிரசும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கும் சொல்கிறார்கள். இதுபோன்று நேரம் ஒதுக்கப்படுவதில்லை. தங்களது கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது என்று சொல்கிறார்கள். இப்படி பல விஷயங்களை இந்த தீர்மானத்தின் மூலமாக வைத்திருக்கிறீர்கள்.

பதில்:- இன்றைக்கு, வாக்கெடுப்புக்கு பின்னர், மீண்டும் சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்த பிறகு, பேசுகிறபோது அவர் நிறைவாக ஒன்றை சொல்லியிருக்கிறார். தனக்கு ஆதரவளித்து வாக்களித்திருக்கக்கூடிய உறுப்பினர்களுக்கு நன்றி சொல்லி, அதேநேரத்தில் என் மீது நம்பிக்கை இல்லாமல் எனக்கு ஆதரவு அளிக்காத தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உறுப்பினர்களுக்கும் நன்றி சொல்லியிருக்கிறார். நன்றி சொல்லுகிறபோது ஒரு வார்த்தையை பதிவு செய்திருக்கிறார். அதாவது, “உங்களுடைய நம்பிக்கையை பெறக்கூடிய வகையில் நான் என்னுடைய பணியை நிறைவேற்றுவேன்” என்று ஒரு உறுதிமொழியை தந்திருக்கிறார். எனவே, அந்த நம்பிக்கையோடு இருக்கிறோம். இதற்கு பிறகாவது, நிச்சயமாக அவையினுடைய முறைகளை, விதிமுறைகளை முறையாக கடைபிடித்து எதிர்க்கட்சிகளுக்கு உரிய அந்த உரிமையை அவையிலே நிலைநாட்டுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு வந்திருக்கிறது.

இரட்டை இலை முடக்கம் சாதகமா?

கேள்வி:- இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டிருப்பது தி.மு.க.வுக்கு தேர்தலில் எந்த அளவுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?.

பதில்:- அ.தி.மு.க.வினுடைய சின்னம் முடக்கப்பட்டிருப்பது தி.மு.க.வுக்கு ஏதோ சாதகம் என்று ஒரு தவறான யூகத்தை, குறிப்பாக ஊடகத்தில் இருக்கக்கூடிய நீங்கள் பரப்பிக்கொண்டிருக்கிறீர்கள். அது உண்மையில்லை. எம்.ஜி.ஆர். கட்சியை நடத்திக் கொண்டிருந்தபோதுகூட, ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது கூட அந்த இரட்டை இலை சின்னத்தை நாங்கள் பல இடைத்தேர்தல்களில் தோற்கடித்து இருக்கிறோம். உள்ளாட்சித் தேர்தல்களில் தோற்கடித்து இருக்கிறோம். அதேபோல், ஜெயலலிதா தலைமையில் இருக்கக்கூடிய நேரத்தில், அந்த இரட்டை இலை சின்னத்தை தேர்தலிலே தோற்கடித்து ஆட்சிக்கு வந்திருக்கிறோம். இன்னும் கூட சொல்ல வேண்டும் என்றால், அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு பகுதியில் அ.தி.மு.க. இரட்டை இலை சின்னம் டெபாசிட்டை இழந்திருக்கிறது. பென்னாகரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. அதில், இரட்டை இலை சின்னம் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. ஆக, அந்த சின்னத்தை கண்டு நாங்கள் ஏதோ அச்சப்படுவதாகவும், அது போய்விட்ட காரணத்தால், எங்களுக்கு ஏதோ லாபம் வந்துவிட்டதாகவும் ஒரு தவறான பிரசாரத்தை நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். அது உண்மையல்ல.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

Next Story