பூமிக்கடியில் மின்கம்பிகளை புதைக்க ரூ.2,567 கோடி மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் பதில்


பூமிக்கடியில் மின்கம்பிகளை புதைக்க ரூ.2,567 கோடி மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் பதில்
x
தினத்தந்தி 23 March 2017 9:30 PM GMT (Updated: 23 March 2017 8:09 PM GMT)

சென்னை மாநகராட்சி பகுதிகளில் மின்விபத்துகளை தவிர்க்க மின்கம்பிகளை பூமிக்கடியில் பதிக்கும் பணி ரூ.2,567 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் என்று மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் தங்கமணி பதில் அளித்தார்.

சென்னை,

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், கொளத்தூரில் மின்சாரம் தாக்கி சந்திரா என்ற பெண் பலியானது குறித்து ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசியதாவது:-

என்னுடைய கொளத்தூர் தொகுதியை பொறுத்தவரையில் கிட்டத்தட்ட 37 கிலோ மீட்டர் அளவிற்கு தாழ்வழுத்த மின்கம்பி வடம் சென்றுகொண்டிருக்கிறது. இதனை புதைவட கம்பிகளாக (பூமிக்கடியில் பதிக்கும் கேபிள்) பதிக்கும் பணி முழுமையடைந்திருந்தால், சந்திரா போன்ற விலைமதிப் பற்ற மனித உயிர்களை நிச்சயமாக காப்பாற்றி இருக்கமுடியும். இது அரசாங்கத்தின் முறையான பராமரிப்பு இல்லாததால் ஏற்பட்ட உயிரிழப்பு என்பதால் மின்சார வாரியம் தரும் ரூ.2 லட்சத்துடன் தமிழக அரசின் சார்பில் ரூ.10 லட்சம் இழப்பீடாக தரவேண்டும்.

கொளத்தூர் தொகுதி மற்றும் விரிவாக்கப்பட்ட சென்னை மாநகரத்தில் இதுபோன்ற மனித உயிரிழப்புகள் உயர்வழுத்த மின்கம்பிகளால் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன. 11,000 கிலோ வாட், 33,000 கிலோ வாட் கொண்ட மின் கம்பிகளாலும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. தடையில்லாத, சீரான மின்சாரம் முக்கியமானது தான். இதோடு மனித உயிர்களுக்கு பாதுகாப்பு தருகின்ற மின் வினியோகமும் ஏற்படுத்தி தர இந்த அரசு முன்வர வேண்டும். இந்த தாழ்வழுத்த மற்றும் உயர்வழுத்த மின் கம்பிகளை புதைவடக்கம்பிகளாக மாற்றி இந்த ஆண்டுக்குள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.2,567 கோடி

இதற்கு பதில் அளித்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பேசியதாவது:-

உயிர் இழப்புகள் ஏற்படாதவாறு தக்க நடவடிக்கை எடுக்கப்படும். வார்தா புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பழுதடைந்த மின்கம்பிகள் உடனடியாக மாற்றப்பட்டன. கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பூம்புகார் நகர் பகுதியில் சுமார் 80 சதவீதம் மின்வினியோகம் மேலே செல்லும் தாழ்வழுத்த மின்கம்பிகள் மூலம் செய்யப்பட்டு வருகிறது.

பூம்புகார் நகரில் எதிர்பாராதவகையில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் மின் விபத்து ஏற்பட்டது. கொளத்தூர் மற்றும் விரிவுபடுத்தப்பட்ட சென்னை மாநகராட்சி பகுதிகளில் மின்கம்பிகள் ரூ.2,567 கோடி செலவில் புதைவடமாக மாற்றப்படும். நிதி ஆதாரங்கள் கிடைத்ததும் அதற்கான பணிகள் உடனே தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story