பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு 100-க்கும் மேற்பட்ட கண்டன கடிதங்கள்


பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு 100-க்கும் மேற்பட்ட கண்டன கடிதங்கள்
x
தினத்தந்தி 23 March 2017 9:54 PM GMT (Updated: 23 March 2017 9:54 PM GMT)

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு இதுவரை 100-க்கும் மேற்பட்ட கண்டன கடிதங்கள் தமிழ்நாட்டில் இருந்து வந்துள்ளன.

பெங்களூரு

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு இதுவரை 100-க்கும் மேற்பட்ட கண்டன கடிதங்கள் தமிழ்நாட்டில் இருந்து வந்துள்ளன.

சசிகலாவுக்கு கண்டன கடிதங்கள்

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பிப்ரவரி 15-ந்தேதி முதல் அவர்கள் சிறையில் இருந்து வருகிறார்கள். அவர்களுக்கு சிறை விதிமுறைகளின்படியே வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

சிறையில் இருக்கும் கைதிகளுக்கு கடிதங்கள் வந்தால் அதனை சிறை அதிகாரிகள் பிரித்து படித்து பார்த்துவிட்டு சம்பந்தப்பட்ட கைதிகளிடம் வழங்குவார்கள். அதுபோல் கைதிகள் வெளியில் இருப்பவர்களுக்கு கடிதம் எழுதி அதிகாரிகள் மூலம் அனுப்பலாம். அந்த கடிதங்களையும் அதிகாரிகள் படித்து பார்த்துவிட்டு அனுப்புவார்கள். இந்த நிலையில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான கண்டன கடிதங்கள் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத சிறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சசிகலா சிறைக்கு வந்த நாள் முதல் இதுவரை அவருடைய பெயருக்கு 100-க்கும் மேற்பட்ட கடிதங்கள் தமிழ்நாட்டில் இருந்து வந்துள்ளன. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் சேலம், தர்மபுரி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், கரூர் மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் இருந்து கடிதங்கள் வந்துள்ளன. கடிதங்களின் முகவரி எழுதும் பகுதியில் “சசிகலா, மத்திய சிறை, பரப்பன அக்ரஹாரா, பெங்களூரு-560100” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விலை கொடுத்தாக வேண்டும்

அந்த கடிதங்களை அவரிடம் நாங்கள் ஒப்படைத்தோம். அந்த கடிதங்களை அவர் படித்து பார்ப்பார். அவற்றில் அவரை பற்றி சில கடுமையான வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தது. ஜெயலலிதா எப்படி இறந்தார், அதற்கு காரணம் என்ன? என்பது போன்ற விஷயங்கள் அதில் இருந்தன. நீங்கள் செய்த தவறுக்காக உரிய விலையை கொடுத்தாக வேண்டும். கஷ்டத்தை அனுபவிக்க வேண்டும் என்பது உள்பட கண்டனம் தெரிவித்து வாசகங்கள் இடம்பெற்று இருந்தன.

ஆரம்ப நாட்களில் தனக்கு வந்த அனைத்து கடிதங்களையும் சசிகலா படிப்பார். கடிதங்களில் கடுமையான சொற்கள் இருப்பதால் அந்த கடிதங்களை இப்போது படிப்பதில் அவர் ஆர்வம் செலுத்துவதில்லை.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார். 

Next Story