கீழடி அகழாய்வு பணியின் தலைவராக இருந்த அமர்நாத் அசாமுக்கு மாற்றம்


கீழடி அகழாய்வு பணியின் தலைவராக இருந்த அமர்நாத் அசாமுக்கு மாற்றம்
x
தினத்தந்தி 24 March 2017 8:18 AM GMT (Updated: 24 March 2017 8:18 AM GMT)

மதுரை அருகே உள்ள கீழடி அகழாய்வு பணியின் தலைவராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் அசாமுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

சென்னை,

மதுரை–சிவகங்கை மாவட்ட எல்லையில் அமைந்த கீழடி கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளாக அகழ்வாய்வு நடத்தப்பட்டு வந்தது. அப்போது 2,500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் வசித்ததற்கான வீடுகள், பயன்படுத்திய பொருட்கள் மற்றும் அடையாள சின்னங்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன. அப்போது தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகள், சுடு மண்ணால் செய்யப்பட்ட காதணிகள் உள்ளிட்ட பல அரிய பொருள்கள் கிடைத்தன. இந்நிலையில், இந்த அகழ்வாராய்ச்சி திடீரென நிறுத்தப்பட்டது. மத்திய அரசு இந்த ஆண்டு ஆய்வுக்கான நிதியை ஒதுக்காததால் இந்த பணிகள் நடைபெறாமல் முடங்கியது.

இவ்விவகாரத்தை தமிழக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் எழுப்பிய போது, திருச்சி சிவாவுக்கு மத்திய சுற்றுலா, கலாசாரத் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) டாக்டர் மகேஷ் சர்மா எழுதிய கடிதத்தில், கீழடி கிராமத்தில் இந்திய தொல்லியல் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்த அகழ்வாராய்ச்சி ரத்து செய்யப்படவில்லை. தற்காலிகமாகவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து அகழ்வாராய்ச்சியை மேற்கொள்வதற்கு முன்பாக, ஆய்வின் போது கிடைத்த பொருள்கள் அனைத்தும் முழுமையாக ஆவணப்படுத்தப்பட்டு தமிழக மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட உள்ளன. தொல்லியல் ஆய்வு பயிற்சிக்கும் இந்த ஆராய்ச்சியின் அறிக்கை அளிக்கப்படும்

2014-15 மற்றும் 2015-16-ஆம் ஆண்டுகளின் போது கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது, சேகரிக்கப்பட்ட பொருள்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை, அடுத்த கட்டமாக அப்பகுதியில் மேற்கொள்ளப்படும் அகழ்வாராய்ச்சிப் பணிக்கு மிகவும் உதவியாக அமையும். மேலும், தலைமைக் கணக்குக் தணிக்கையாளர் (சிஏஜி) நடத்திய தணிக்கையில் இந்திய தொல்லியல் துறையின் நிலுவை அகழ்வாராய்ச்சி அறிக்கைகள் தொடர்பாக சில கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். எனவே, அகழ்வாராய்ச்சி நிலுவை அறிக்கைகளை அகழ்வாராய்ச்சி கொள்கைப்படி உரிய காலத்தில் அளிக்க சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே பல்வேறு போராட்டங்களை அடுத்து கீழடியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருட்கள் மைசூருக்கு கொண்டு செல்லப்படுவது தடுக்கப்பட்டது. மேலும் ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் கீழடியில் புதைந்திருந்த தமிழர் நாகரீகத்தை வெளிக்கொண்டு வந்த தொல்லியல் ஆய்வுகளுக்கு தலைமையேற்று நடத்திய அமர்நாத் ராமகிருஷ்ணன் தமிழகத்தில் இருந்து அசாம் மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அகழாய்வு தொடர்பான 3 வது கட்ட ஆய்வுக்கு நிதி ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்த நிலையில், தலைவராக இருந்த அமர்நாத் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இது கீழடி அகழ்வாய்வுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

Next Story