கணவர் பெயர் குறிப்பிடவில்லை:ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் தீபா வேட்பு மனுவில் சிக்கல்


கணவர் பெயர் குறிப்பிடவில்லை:ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் தீபா வேட்பு மனுவில் சிக்கல்
x
தினத்தந்தி 24 March 2017 8:53 AM GMT (Updated: 24 March 2017 8:55 AM GMT)

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தாக்கல் செய்த வேட்பு மனுவில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

சென்னை,

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க. அம்மா அணி தினகரன், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி மதுசூதனன், தி.மு.க.வின் மருது கணேஷ், பா.ஜ.க. வின் கங்கை அமரன், தே.மு.தி.க.வின் மதி வாணன் உள்பட 127 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

வேட்பு மனுக்கள் பரி சீலனை  இன்று (வெள்ளிக் கிழமை) நடந்தது. ஒவ்வொரு மனுதாரரின் சார்பில் தலா 3 பேர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. தினகரனுக்காக நவநீத கிருஷ்ணன், வெற்றிவேல்,  தளவாய் சுந்தரம், அக்ரி கிருஷ்ண மூர்த்தி சென்றனர். ஓ.பி.எஸ். அணி சார்பில் வக்கீல்கள் திருமாறன், பாபு பங்கேற்றனர்.
தி.மு.க. வேட்பாளர் மருது கணேசுக்காக தி.மு.க. சட்டத்துறை செயலாளரும் வக்கீலுமான கிரிராஜன், பொம்முராஜ், அருண் ஆகியோர் மனுக்கள் பரிசீலனையில் கலந்து கொண்டனர். என் தேசம் என் உரிமை கட்சி சார்பில் ஜெயஸ்ரீ பங்கேற்றார்.

தேர்தலை நடத்தும் அதிகாரி பிரவீண்நாயர் முன்னிலையில் மனுக்கள் ஒவ்வொன்றாக எடுத்து ஆய்வு செய்யப்பட்டது. பணம் கட்டாமல் வேட்பு மனு கொடுத்திருப்பவர்களின் மனுக்கள் உடனே தள்ளுபடி செய்யப்பட்டன.
 
ஏற்கனவே நடந்த தேர்த லில் போட்டியிட்டவர்கள் செலவு கணக்கை உரிய முறையில் ஒப்படைத்து இருக்கிறார்களா என்றும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் மனு செய்தவர்கள் மீது ஏதேனும் குற்ற வழக்கு பின்னணி உள்ளதா என்றும் பரிசீலிக்கப்பட்டது.

சில ச்யேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதுபோல் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர்  மனுவும் மாற்று வேட்பாளரின் மனுவும் தள்ளுபடிச் செய்யபட்டது.

தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ், தே.மு.தி.க. வேட்பாளர் மதிவாணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் லோகநாதன், நாம் தமிழர் வேட்பாளர் கலைக்கோட்டுதயம்  ஆகியோர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப் பட்டன. அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) கட்சியின் வேட்பாளர் மதுசூதனன் வேட்பு மனு ஏற்கபட்டது

அ.தி.மு.க. அணிகளுக்கு சவால் விடும் வகையில் போட்டியாளராக மாறியுள்ள ஜெ.தீபாவின் மனுவை ஏற்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டது. அவர் சார்பில் வேட்பு மனு பரிசீலனையில் முன்னாள் எம்.எல்.ஏ. மலரவன் பங்கேற்றார். வேட்புமனு தாக்கலின் போது, தேர்தலை நடத்தும் அதிகாரியிடம் சம்பந்தப்பட்ட வேட்பாளர் உறுதிமொழி பத்திரம் அளிக்க வேண்டும்.

அது தொடர்பான பத்திரத்தின் 2-வது பக்கத்தில் வேட்பாளர் தனது பெயரை குறிப்பிட்டு தனது சொந்தங்கள் பற்றிய தகவலையும் தெரிவித்து சத்தியப்பிரமாணம் செய்து உறுதி அளிக்கிறேன் என்றும் தெரிவிப்பார்.

இதன்படி தீபா அளித் துள்ள விவரங்களில் தியாகராய நகர் சிவஞானம் ரோட்டில் வசித்து வருவதாக வும், தனது தந்தையின் பெயர் ஜெ.ஜெயகுமார் என்றும் கூறப்பட்டுள்ளது. ஜெ.தீபா எனும் நான் சத்தியப்பிரமாணம் செய்து கீழ்க்கண்டவற்றை உறுதி அளிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து அதே பக்கத்தில் தீபா தன்னை சுயேட்சை வேட்பாளர் என்று குறிப்பிட்டு, தனது தொலைபேசி மற்றும் செல்போன் எண்களை குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவரது இ-மெயில் முகவரிகளும், வாட்ஸ்-அப் வசதி கொண்ட செல்போன் எண்ணும் இடம் பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து வேட்பாளர் மற்றும் அவரது துணைவியர், துணைவர் பற்றிய தகவல்கள் அவர்களின் நிரந்தர வங்கி கணக்கு எண், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் நிலை பற்றிய விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. இதில் விண்ணப்பதாரர் துணைவர் பகுதியில், தீபாவின் கணவர் மாதவனின் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அந்த காலத்தில் மாதவனின் பெயரை தீபா குறிப்பிடாமல் விட்டுள்ளார். 

 உறுதிமொழிப் பத்திரத்தில், 'ஜெயக்குமாரின் மகள் தீபா என்றே குறிப்பிட்டுள்ளார். அதில், கணவரின் பெயரைக் குறிப்பிடவில்லை. அவருக்கு தி.நகரில் ஓட்டுரிமை இருப்பதாகவும், 2016-17ல் மொத்த வருமானம் 5 லட்சத்து 37 ஆயிரத்து 490 ரூபாயை வருமானவரித்துறையில் கணக்குக்காட்டியுள்ளார், வழக்குகள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

 கையிருப்பாக 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் உள்ளது. ராஜா என்பவரிடம் 40 லட்சம் ரூபாய், சுரேஷிடம் 20 லட்சம் ரூபாய், தினேஷ்பாபுவிடம் 10 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இருசக்கர வாகனம் உள்ளது. 821 கிராம் தங்கம், 4 கிலோ வெள்ளி, 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைரமும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அசையும் சொத்தின் மொத்த மதிப்பு, ஒரு கோடியே 5 லட்சத்து 96 ஆயிரத்து 604 ரூபாய் என்று தெரிவித்துள்ளார். சுயமாக வாங்கிய அசையாச் சொத்தின் மதிப்பு,  17 லட்சத்து 50 ஆயிரம். இதன் தற்போதைய சந்தை மதிப்பு, 2 கோடி ரூபாய். ஆந்திர வங்கியில் கல்விக்கடன் வாங்கிய வகையில் பாக்கித் தொகையாக 6 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். வாழ்க்கைத் துணை வியாபாரம் செய்வதாகத் தெரிவித்துள்ளார். தன்னை குடும்பத்தலைவி என்று குறிப்பிட்டுள்ளார். 2001ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ-வும். 2007ல் காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ-வும், 2011ல் வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் இன்டர்நேஷனல் ஜர்னலிஸமும் படித்துள்ளார். 

இது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தகவல் வாட்ஸ்-அப், உள் ளிட்ட சமூக வலை தளங்களிலும் தீயாக விமர்சிக்கப் பட்டு வருகிறது.

இந்த நிலையில் 12.45 மணி அளவில் தீபா சார்பில் பங்கேற்ற மலரவன் வெளியில் வந்தார். அவரிடம் தீபா மனுவுக்கு ஏற்பட்ட சிக்கல் குறித்து கேட்ட போது அவர் கூறியதாவது:-
வேட்பு மனுவை பூர்த்தி செய்யும் போது தனது கணவர் மாதவனின் பெயரை தீபா எப்படியோ மறந்துவிட்டார். எனவே தான் வேட்பு மனுவில் அவர் பெயர் விடுபட்டு விட்டது.
வேட்பு மனு பரிசீலனை நடந்த போதுதான் இந்த சிறிய தவறை கண்டுபிடித்தோம். இதுபற்றி நாங்கள் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டோம்.
எங்களது கோரிக்கையை தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொண்டார். வேட்பாளர் தீபாவை நேரில் வர சொல்லுங்கள் என்று கூறினார். அதன்படி நாங்கள் தகவல் கொடுத்து தீபாவை வரவழைத்துள்ளோம்.

தீபா மனுவில் ஏற்பட்டுள்ள குறை குறித்து விளக்கம் அளிக்க உள்ளார். எழுத்து பூர்வமாகவும் அவர் கடிதம் கொடுக்க உள்ளார். தேர்தல் அதிகாரி அதை ஏற்பாரா என்பது தெரிய வில்லை. இவ்வாறு மலரவன் கூறினார்.

தீபா மனுவை ஏற்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தீபா பேரவை நிர்வாகி களும், ஆதரவாளர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

Next Story