தீப்பிழம்புடன் வீட்டில் எரிகல் விழுந்து பெண் கருகினார்


தீப்பிழம்புடன் வீட்டில் எரிகல் விழுந்து பெண் கருகினார்
x
தினத்தந்தி 24 March 2017 10:27 AM GMT (Updated: 24 March 2017 10:27 AM GMT)

வாணியம்பாடி அருகே மர்ம பொருள் வெடித்து வீடு சேதமானதில், பெண் உடல் கருகினார். எரிகல் விழுந்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த துரிஞ்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 45). ஓசூரில் தங்கி ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார். இவரது மனைவி புவனேஸ்வரி (34). வாணியம்பாடியில் உள்ள  ஷூ¨ கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு பவித்ரா (20) மற்றும் கீதாஞ்சலி (15) என்று இரு மகள்கள் உள்ளனர். பவித்ரா, தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. பட்டப்படிப்பு இறுதியாண்டு படிக்கிறார். கீதாஞ்சலி, 10-ம் வகுப்பு தேர்வு எழுதி வருகிறார்.

புவனேஸ்வரி தினமும் காலை 5 மணிக்கு எழுந்து சாப்பாட்டு செய்து, வீட்டு வேலைகளை முடித்து விட்டு ஷூ கம்பெனிக்கு சென்று விடுவார். இன்று காலை புவனேஸ்வரி தூங்கி எழுந்தார்.மகள்கள் உள் அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். புவனேஸ்வரி, வீட்டின் ஹால் பகுதிக்கு வந்தார். அப்போது திடீரென வீட்டின் மேற்கூரை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. வீட்டில் உள்ள ஜன்னல்கள் மற்றும் பொருட்கள் உடைந்து சிதறியது.

சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு வெடி சத்தம் கேட்டது. இந்த வெடி விபத்தில் புவனேஸ்வரி உடல் கருகி பலத்த காயம் அடைந்தார். தூக்கத்தில் இருந்த மகள்கள் மற்றும் ஊர் மக்கள் திடுக்கிட்டு எழுந்து ஓடி வந்து பார்த்தனர்.

வீடு முழுவதும் சேதமாகி இருந்தது. புவனேஸ்வரி உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார். அவரை உடனடியாக மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக, வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.

புவனேஸ்வரியின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. 80 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டிருப்பதால் டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பொறுப்பு இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் ஆலங்காயம் போலீசார் விரைந்து வந்தனர். மர்ம பொருள் வெடித்த வீட்டில் தீவிர சோதனை செய்தனர். வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டரும் வெடிக்காமல் இருந்தது.

எனவே, மலைப்பகுதி ஒட்டி இருப்பதால் நாட்டு வெடி குண்டுகள் ஏதாவது  வீட்டுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா? அல்லது நாட்டு வெடி குண்டுகளை மர்ம நபர்கள் வீட்டின் மீது வீசி விட்டு தப்பினரா? என்ற கோணத்திலும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

ஏனெனில் மலைப்பகுதி சுற்றிலும் நாட்டு வெடி குண்டுகள் தயாரிக்கும் கும்பல் நடமாட்டம் உள்ளது. மேலும் அப்பகுதி மக்கள், வானத்தில் இருந்து எரிகல் விழுந்திருக்கலாம் என்று அச்சம் தெரிவித்தனர்.

நாட்டறம்பள்ளி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில் கடந்த ஆண்டு வானில் இருந்து எரிகல் விழுந்து வெடித்தது. இதில் கல்லூரி கட்டிடம் குலுங்கியது. ஜன்னல்கள் உடைந்து நொறுங்கியது. இதில் கல்லூரி காவலாளி படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதைத்தொடர்ந்து, வாணியம்பாடி அடுத்த பெத்த வேப்பம்பட்டில் உள்ள விவசாய நிலத்திலும் எரிகல் விழுந்தது. இந்த 2 சம்பவங்களிலும் அறிவியல் ரீதியில் பல்வேறு சோதனை நடத்தப்பட்டது. விசாரணையும் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

எனவே, அதேபோல் எரிகல் வீட்டு மீது விழுந்து வெடித்திருக்கலாம் என்று பொதுமக்கள் சந்தேகம் தெரிவித்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். துணை ஆட்சியரும் இதுகுறித்து ஆய்வு நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு வாணியம்பாடி தனியார் கல்லூரி ஒன்றில் விண்கல் விழுந்ததில் ஒருவர் பலியானார். அதேபோல வாணியம்பாடி அருகே விவசாய நிலத்தில் மர்மப் பொருள் விழுந்தது. தற்போது மூன்றாவது முறையாக வாணியம்பாடியில் மர்மப்பொருள் விழுந்துள்ளது. இது அந்தப் பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story