ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் சமத்துவ மக்கள் கட்சி உள்பட 45 பேர் மனுக்கள் தள்ளுபடி


ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் சமத்துவ மக்கள் கட்சி உள்பட 45 பேர் மனுக்கள் தள்ளுபடி
x
தினத்தந்தி 25 March 2017 12:15 AM GMT (Updated: 24 March 2017 8:07 PM GMT)

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் உள்பட 45 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

சென்னை, 

ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு வருகிற ஏப்ரல் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

127 வேட்புமனு தாக்கல்

இதற்கான வேட்பு மனுதாக்கல் நேற்று முன்தினம் முடிவடைந்தது.

சசிகலாவின் அ.தி.மு.க. (அம்மா) கட்சியின் சார்பில் டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தின் அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) கட்சியின் சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருது கணேஷ் மற்றும் மதிவாணன் (தே.மு.தி.க.), கங்கை அமரன் (பா.ஜனதா), லோகநாதன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), ஜெ.தீபா (தீபா பேரவை) அந்தோணி சேவியர் (சமத்துவ மக்கள் கட்சி), கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) உள்ளிட்ட 127 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர்.

மனுதாக்கல் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் சுயேச்சை வேட்பாளர்கள் ஆவார்கள்.

பரிசீலனை

இந்த நிலையில், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை சென்னை மாநகராட்சியின் தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீண் பி.நாயர், தேர்தல் பொதுப் பார்வையாளர் பிரவீண் பிரகாஷ், தேர்தல் காவல் பார்வையாளர் ஷிவ்குமார் வர்மா ஆகியோர் முன்னிலையில் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது.

தி.மு.க. சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருதுகணேஷ், வக்கீல் கிரிராஜன், தே.மு.தி.க. சார்பில் வேட்பாளர் மதிவாணன், அ.தி.மு.க. (அம்மா) சார்பில் தளவாய்சுந்தரம், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையில் பங்கேற்றனர்.

82 பேரின் மனுக்கள் ஏற்பு

மனுதாக்கல் செய்த ஒவ்வொருவருடனும் தலா 3 பேரும், வேட்பாளர் வரவில்லை என்றால் 3 பேர் மட்டும் வேட்புமனு பரிசீலனையில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

இரவு வரை தொடர்ந்த, வேட்புமனுக்கள் பரிசீலனையின் முடிவில், டி.டி.வி.தின கரன், மதுசூதனன், மருது கணேஷ், மதிவாணன், கங்கை அமரன், லோகநாதன், ஜெ.தீபா உள்ளிட்ட 82 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

சமத்துவ மக்கள் கட்சி மனு நிராகரிப்பு

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கவில்லை என்று கூறி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, என் தேசம் என் உரிமை கட்சி, இந்து மக்கள் கட்சி, தமிழ்நாடு இளைஞர் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் உள்பட 45 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளர் அந்தோணி சேவியர், அவரது மாற்று வேட்பாளர் விஜயன் ஆகியோரின் வேட்புமனுக்களை தொகுதியைச் சேராதவர்கள் முன்மொழிந்ததால் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அக்கட்சியினர் சிறிது நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட தமிழ்நாடு இளைஞர்கள் கட்சி வேட்பாளர் காமேஸ்வரன் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்டவர்களும் கைது செய்யப்பட்டனர்.

டி.டி.வி.தினகரன்

நேற்று வேட்பு மனுக்கள் பரிசீலனையின் போது அ.தி.மு.க. (அம்மா) கட்சியின் வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு அன்னிய செலாவணி மோசடி வழக்கில் ரூ.28 கோடி அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதால் அவரது வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் சார்பில் தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு தாக்கல் அளிக்கப்பட்டது. இதேபோல் டி.டி.வி.தினகரனின் சிங்கப்பூர் குடியுரிமை பிரச்சினையை கிளப்பி அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) கட்சியின் சார்பிலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அந்த பிரச்சினைகள் குறித்து நீண்ட நேரம் விவாதம் நடத்தப்பட்டது. இறுதியில் டி.டி.வி.தினகரனின் வேட்புமனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

27-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல்

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கு 27-ந் தேதி (திங்கட் கிழமை) கடைசி நாள் ஆகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.

அதன் அடிப்படையில், வேட்பாளர்கள் புகைப்படம், பெயர், சின்னம் ஆகியவை மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவு செய்யப்படும்.

வேட்பாளர்களின் எண்ணிக்கை 16-க்கும் அதிகமாக இருந்தால் வாக்குச்சாவடிகளில் கூடுதலாக வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும். அதிகபட்சமாக, 63 வேட்பாளர்களின் பெயரை வாக்குப்பதிவு எந்திரங்களில் பொருத்த முடியும். அதற்கு மேல் வேட்பாளர்களின் எண்ணிக்கை இருந்தால், பழைய முறையான வாக்கு சீட்டின் அடிப்படையிலேயே தேர்தல் நடத்தப்படும். 

Next Story