வறட்சி நிவாரணத்தை முழுமையாக பெற வேண்டும் தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ், ஜி.கே.வாசன் வலியுறுத்தல்


வறட்சி நிவாரணத்தை முழுமையாக பெற வேண்டும் தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ், ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 24 March 2017 11:00 PM GMT (Updated: 24 March 2017 8:12 PM GMT)

வறட்சி நிவாரணத்தை முழுமையாக பெற வேண்டும் தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ், ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை, 

மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தமிழகத்துக்கு வறட்சி நிவாரணத்தை முழுமையாக பெற வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ், ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளனர்.

டாக்டர் ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கான நிவாரணமாக மாநில அரசு ரூ.2,247 கோடி ஒதுக்கியிருந்தது. ஆனால், அந்த அளவுக்கு கூட மத்திய அரசு நிவாரண நிதி வழங்காததை ஏற்க முடியாது. தமிழகத்திற்கான நிவாரண நிதியை கேட்டுப் பெறும் விஷயத்தில் தமிழக அரசும் கடமை தவறி விட்டது.

தமிழக ஆளுங்கட்சி சார்பில் 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில் அவர்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தமிழகத்தின் உரிமையை கேட்டுப் பெற்றிருக்க வேண்டும்.

மோசமான பாதிப்பு

தமிழகத்தில் வறட்சியால் மிக மோசமான அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டு இருப்பதால் அதை கருத்தில் கொண்டு, தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.25 ஆயிரம் கோடியும், வர்தா புயல் நிவாரண நிதியாக ரூ.10 ஆயிரம் கோடியும் வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக முதல்-அமைச்சர் அலட்சியம் காட்டாமல் அனைத்துக் கட்சி தலைவர்களை அழைத்துச் சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வலியுறுத்தி தமிழகத்திற்கான நிவாரண நிதியை பெற்று வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

ஜி.கே.வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக ரூ.39,565 கோடி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் வறட்சி பாதித்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்த மத்தியகுழு, தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக ரூ.2,096.80 கோடி வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. இத்தொகை மிக மிக குறைவு.

இந்நிலையில் தேசிய செயற்குழுவின் துணை கமிட்டி தமிழக வறட்சிக்கு நிவாரணமாக ரூ.1,748.28 கோடி வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருக்கிறது என்று மத்திய வேளாண்துறை மந்திரி தெரிவித்துள்ளார். இந்த தொகை போதுமானதல்ல. இது விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

அழுத்தம் கொடுக்க வேண்டும்

தற்போது பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருப்பதால் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழக வறட்சிக்காக ரூ.39,565 கோடி வழங்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் மத்திய அரசுக்கு தகுந்த அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு ஜி.கே.வாசன் கூறி உள்ளார். 

Next Story