மக்களுக்கு புரியும் வகையில் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் கீழ் கோர்ட்டுகளுக்கு, ஐகோர்ட்டு அறிவுரை


மக்களுக்கு புரியும் வகையில் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் கீழ் கோர்ட்டுகளுக்கு, ஐகோர்ட்டு அறிவுரை
x
தினத்தந்தி 25 March 2017 10:15 PM GMT (Updated: 25 March 2017 6:49 PM GMT)

சாதாரண மக்களுக்கு புரியும் வகையில் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று கீழ் கோர்ட்டுகளுக்கு, ஐகோர்ட்டு அறிவுரை வழங்கியுள்ளது.

சென்னை,

புதுச்சேரியில் தேசிய புலனாய்வு அமைப்பு தொடர்ந்த வழக்கு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஆறு பேரின் நீதிமன்றக் காவலை 2014 ஜூலை முதல் செப்டம்பர் வரை நீட்டித்து, தேசிய புலனாய்வு அமைப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றும், எனவே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும், ஐகோர்ட்டில் ஆள்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

புழக்கத்தில் இல்லாத வார்த்தை

இந்த மனுக்களை நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, புதுச்சேரி நீதிபதி தனது உத்தரவுகளில் புழக்கத்தில் இல்லாத சுருக்க வார்த்தைகளை பயன்படுத்தி இருப்பதை நீதிபதிகள் கண்டுபிடித்தனர். உதாரணமாக, காவல் நீட்டிப்பு என்றால் ஆர்.இ. என்று எழுதப்பட்டு இருந்தது.

இதுபோல புழக்கத்தில் இல்லாத சுருக்க வார்த்தைகளை பயன்படுத்தாமல், சாதாரண மக்களுக்கு புரியும் வகையில் கோர்ட்டுகள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்கள்.

தள்ளுபடி

குற்றம் சாட்டப்பட்டவர்களின் நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்காததால், அவர்கள் 6 பேரும் 2014 ஜூன் முதல் செப்டம்பர் வரை சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

ஆனாலும், அந்த காலகட்டத்துக்குப் பின்னர் காவல் நீட்டிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அவர்களை விடுவிக்க முடியாது என்று உத்தரவிட்டு மனுக்களை தள்ளுபடி செய்தனர். 

Next Story