மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு


மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 25 March 2017 10:00 PM GMT (Updated: 25 March 2017 7:11 PM GMT)

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பணீந்திரரெட்டிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி டி.ராஜா உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

சென்னை மாநகராட்சியில் அதிகாரியாக வேலை செய்பவர் சி.லாரன்ஸ். இவர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் பணீந்திரரெட்டிக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கில் நீதிபதி டி.ராஜா பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

மனுதாரர் லாரன்ஸ் மீது கடந்த 2008-ம் ஆண்டு சில குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. குற்றச்சாட்டின் மீது சென்னை மாநகராட்சி நிர்வாகம் விசாரணை நடத்தாததால், அவரது பதவி உயர்வு பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ஐகோர்ட்டில் 2014-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, குற்றச்சாட்டு குறித்து விசாரித்து சட்டப்படி உத்தரவு பிறப்பிக்கும்படி சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 15-ந் தேதி உத்தரவிட்டது.

நிரூபிக்கவில்லை

இதன்படி, நடந்த விசாரணையில், மனுதாரர் லாரன்ஸ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று முடிவு செய்து, குற்றச்சாட்டை கைவிடும்படி தமிழக அரசுக்கு மாநகராட்சி ஆணையர் கடந்த 2015-ம் ஆண்டு பரிந்துரை செய்தார்.

இந்த பரிந்துரையை பரிசீலித்து தகுந்த உத்தரவை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் பிறப்பிக்காததால், லாரன்ஸ் மீண்டும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், மாநகராட்சி ஆணையர் செய்த பரிந்துரையின் அடிப்படையில் தகுந்த உத்தரவை 3 வாரத்துக்குள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் பிறப்பிக்க வேண்டும்’ என்று கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 11-ந் தேதி உத்தரவிட்டது.

சம்பள உயர்வு ரத்து

இந்த உத்தரவின்படி, செயலாளர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. மனுதாரர் பல தடவை முறையிட்டும், நடவடிக்கை இல்லாததால், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் பணீந்திரரெட்டி மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளார். ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்தாதது பணீந்திரரெட்டி செய்த முதல் குற்றமாகும்.

இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பின்னர், லாரன்ஸ் மீதான குற்றச்சாட்டு குறித்து மற்றொரு விசாரணை அதிகாரியை நியமித்து விசாரணை நடத்த பணீந்திரரெட்டி உத்தரவிட்டுள்ளார். அந்த விசாரணை அதிகாரி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அறிக்கை தந்ததும், அதனடிப்படையில் லாரன்சுக்கு 2 ஆண்டுக்கு சம்பள உயர்வை ரத்து செய்து செயலாளர் பணீந்திரரெட்டி உத்தரவிட்டுள்ளார். இது அவர் செய்த 2-வது குற்றமாகும்.

மேல்முறையீடு இல்லை

அரசு ஊழியர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று விசாரணை அதிகாரி சாதகமான அறிக்கையை கொடுத்தால், அந்த அறிக்கையை புறம் தள்ளிவிட்டு, மற்றொரு விசாரணை அதிகாரியை நியமித்து விசாரணை நடத்துவதற்கு அரசு உயர் அதிகாரிக்கு அதிகாரம் உண்டு.

ஆனால், மறுவிசாரணைக்கு உத்தரவிடுவதற்கு முன்பு குற்றச்சாட்டுக்கு ஆளான ஊழியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்து, அவரது கருத்தை பெற்ற பின்னர் தான் இறுதி உத்தரவை பிறப்பிக்கவேண்டும். அவ்வாறு இந்த வழக்கில் பணீந்திரரெட்டி செய்யவில்லை.

ஐகோர்ட்டின் உத்தரவு சரியோ, தவறோ, அதை அமல்படுத்துவது அதிகாரிகளின் கடமை. ஒருவேளை அந்த உத்தரவு சரியில்லை, அதனால் பாதிப்பு ஏற்படுகிறது என்றால், அந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவேண்டும். அல்லது அந்த உத்தரவை மாற்றியமைக்கக்கோரி மறுஆய்வு மனுவை தாக்கல் செய்யவேண்டும். இதையும் அவர் செய்யவில்லை.

24 வாய்தா

இது ஒருபுறம் இருக்க, இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்ய பணீந்திரரெட்டி சார்பில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை 24 முறை வாய்தா கேட்கப்பட்டது. வாய்தாவும் கொடுக்கப்பட்டது.

இதற்கிடையில், ஐகோர்ட்டு உத்தரவை செயல்படுத்தாமல் இருந்ததற்கு மன்னிப்பு எதுவும் கேட்காமல், பணீந்திரரெட்டி பதில் மனுவை தாக்கல் செய்தார். அதில், இரண்டாவதாக நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி, மனுதாரர் லாரன்சுக்கு எதிரான 7 குற்றச்சாட்டுகளில் 6 நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அறிக்கை கொடுத்ததால், அரசுக்கு ஏற்பட்ட இழப்பை லாரன்சிடம் இருந்து வசூலிக்கவும், அவருக்கு சம்பள உயர்வை நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டதாக கூறியிருந்தார்.

இது ஐகோர்ட்டு உத்தரவை சுற்றி வளைத்து செயல் இழக்க செய்யும் வேலையாகும். இது பணீந்திரரெட்டி செய்த மிகப்பெரிய தவறு.

பின் தேதியிட்ட கடிதம்

அதுமட்டுமல்ல, மனுதாரர் லாரன்சுடன் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பிற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், இவர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன் பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது மனுதாரர் மீதான நடவடிக்கையை கைவிடுவதாக ஒரு உத்தரவு நகலை கூடுதல் அட்வகேட் ஜெனரல் தாக்கல் செய்தார். அதில், ‘உத்தரவை அமல்படுத்தும்படி ஐகோர்ட்டு தொடர்ந்து நிர்பந்தம் செய்வதால், லாரன்சுக்கு எதிரான நடவடிக்கையை கைவிடுவதாக பணீந்திரரெட்டி குறிப்பிட்டுள்ளார்.

இது தேவையற்ற வார்த்தை. மேலும் நடவடிக்கையை கை விடுவதாக பிப்ரவரி 20-ந் தேதியிட்ட கடிதம், 17-ந் தேதியிட்ட பதில் மனுவுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பின்தேதியிட்ட ஒரு கடிதம் எப்படி முன்னதாக தாக்கல் செய்யப்பட முடியும்?

நடவடிக்கை ஏன் கூடாது?

இந்த பதில் மனு அலங்கோலமாவும், கவனக்குறைவுடனும் தாக்கல் செய்யப்பட்டிருப்பது தெரிகிறது. இதுகுறித்து விளக்கம் கேட்டபோது, இந்த தவறை நியாயப்படுத்தி மற்றொரு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தவில்லை என்றால், அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு முதல் அமர்வு ஏற்கனவே ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளது. அதன்படி, பணீந்திரரெட்டி நேரில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டது.

அவர் நேரில் ஆஜரானபோது, இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்டு ஒரு ஆண்டு ஆகியும், அந்த உத்தரவை ஏன் அமல்படுத்தவில்லை? என்றும், ஐகோர்ட்டின் பொன்னான நேரத்தை வீண் அடித்ததற்காகவும், அரசு பணத்தை வீண் அடித்ததற்காகவும் கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் தங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என்று விளக்கம் கேட்கப்பட்டது.

சம்பிரதாய உத்தரவு

அவர் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 11-ந் தேதி ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாததற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். அதுவும், இந்த ஐகோர்ட்டு பதில் மனுவில் மன்னிப்பு கேட்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய பின்னரே அவர் மன்னிப்பு கோரினார்.

நீதிமன்றங்களின் கண்ணியத்தை கட்டிக்காப்பது ஐகோர்ட்டின் கடமையாகும். இதுபோன்ற சூழ்நிலையில், கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் இந்த ஐகோர்ட்டு நடவடிக்கை எடுக்கத் தவறினால், இந்த ஐகோர்ட்டின் மீதான நம்பிக்கையை பொதுமக்கள் இழக்கக்கூடும்.

அதுமட்டுமல்ல, இந்த ஐகோர்ட்டு விசாரணையும், உத்தரவும் அர்த்தமற்றதாகவும், ஐகோர்ட்டின் புனிதத்தன்மை கேலிக்கூத்தாகவும் மாறிவிடும். ஐகோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவுகள் எல்லாம் ஏதோ ஒரு சம்பிரதாயம் போலாகிவிடும்.

ரூ.50 ஆயிரம் அபராதம்

எனவே, பணீந்திரரெட்டி மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்படுகிறது. அவருக்கு வழக்கு செலவாக (அபராதமாக) ரூ.50 ஆயிரம் விதிக்கிறேன். இந்த தொகையை 4 வாரத்துக்குள் தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக்குழுவுக்கு அவர் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்திய விவரத்தை 5 வாரத்துக்குள் அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும்.

இவ்வாறு நீதிபதி டி.ராஜா உத்தரவிட்டுள்ளார்.

Next Story