“விஷாலை யாரோ கொம்பு சீவி விடுகிறார்கள்”கேயார் பேச்சு


“விஷாலை யாரோ கொம்பு சீவி விடுகிறார்கள்”கேயார் பேச்சு
x
தினத்தந்தி 25 March 2017 10:15 PM GMT (Updated: 25 March 2017 7:16 PM GMT)

“தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிடும்படி, விஷாலை யாரோ கொம்பு சீவி விடுகிறார்கள்” என்று தயாரிப்பாளர் கேயார் பேசினார்.

சென்னை,

‘வதம்’ என்ற பெயரில், ஒரு புதிய படம் தயாராகி உள்ளது. இதில் பிரவின், வின்ஸ்லி ஆகியோர் கதாநாயகர்களாகவும் சுவப்னா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். என்.எஸ்.அருள் செல்வம் டைரக்டு செய்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் பிரிவியூ தியேட்டரில் நடந்தது.

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் கேயார், இந்த விழாவில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

வராத கதாநாயகிகள்

“தயாரிப்பாளர்கள் கோடி கோடியாக பணம் செலவழித்து படங்களை எடுக்கிறார்கள். ஆனால், அந்த படங்களை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கும், பாடல் வெளியீட்டு விழாக்களுக்கும் அதில் நடித்த கதாநாயகிகள் வருவது இல்லை. இது, துரதிர்ஷ்டவசமானது. படங்களை விளம்பரப்படுத்துவதற்கும் சேர்த்துதான் நடிகைகளுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது. இதற்காக ஒப்பந்தங்களும் போடப்படுகின்றன.

இந்தி நடிகைகள் இந்த ஒப்பந்தங்களை மீறாமல், படங்களை விளம்பரப்படுத்தும் விழாக்களில் தவறாது பங்கேற்கிறார்கள். ஆனால் தமிழ் படங்களில் நடிக்கும் கதாநாயகிகள் அதை கடைபிடிப்பது இல்லை. நடிகைகள் சம்பளத்தில் 25 சதவீதத்தை பிடித்தம் செய்து வைத்துக்கொண்டு பாடல் வெளியீடு உள்ளிட்ட பட விழா நிகழ்ச்சிகளுக்கு வந்தால் மட்டுமே திருப்பி கொடுக்க வேண்டும். வராத நடிகைகளுக்கு 25 சதவீத சம்பளத்தை கொடுக்க கூடாது.

விஷால்

நடிகர் விஷால் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிடுவது ஏற்புடையது அல்ல. நடிகர் சங்கத்தில் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருக்கும் அவரால் தயாரிப்பாளர்கள் பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியாது. தற்போது தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகத்தில் இருப்பவர்களுடன் ஏற்பட்ட மோதலால் விஷால் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார். விஷால் பொறுப்புக்கு வந்தால் தன் மீது நடவடிக்கை எடுத்தவர்களை நீக்குவார். இவர்களுக்குள் நடக்கும் மோதல் சங்க வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும். நடிகர்கள் அதிக நாட்கள் படப்பிடிப்புகளிலேயே கவனம் செலுத்துவார்கள்.

தயாரிப்பாளர்கள் பிரச்சினைகளை விஷாலால் தீர்க்க முடியாது. அவரை யாரோ கொம்பு சீவி விட்டு தேர்தலில் நிறுத்தி உள்ளனர். தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2 ஆண்டு பதவி காலம் முடிவது வரை சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று அவரால் சொல்ல முடியுமா? எங்கள் அணிக்கு வரவேற்பு உள்ளது. தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம். ‘வதம்’ படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.”

இவ்வாறு கேயார் பேசினார்.

விழாவில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோஷம், டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன், நடிகர் விஜய் வசந்த், தயாரிப்பாளர்கள் கதிரேசன், வின்ஸ்லி, இசையமைப்பாளர் ரவி விஜய் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story