நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு


நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 27 March 2017 12:00 AM GMT (Updated: 26 March 2017 7:42 PM GMT)

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 12 பேரை படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.

கோட்டைப்பட்டினம், 

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் ஆகிய பகுதிகளில் விசைப்படகு மீன்பிடி தளங்கள் உள்ளன. இங்கிருந்து சுமார் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தில் இருந்து 381 விசைப்படகுகளில் 1,300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த செல்லப்பா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த 6 பேரும், கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த ஜபருல்லா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 6 பேரும் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்றுமுன்தினம் இரவு இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

12 மீனவர்கள் சிறைபிடிப்பு

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்ததாக கூறி 2 விசைப்படகுகளில் இருந்த மொத்தம் 12 மீனவர்களையும் சிறைபிடித்தனர். பின்னர் அவர்களை விசைப்படகுகளுடன் இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்தில் உள்ள ராணுவ முகாம் அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

இதையடுத்து 12 மீனவர்களையும் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

விடுதலை செய்ய நடவடிக்கை

இது குறித்து ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் சங்க தலைவர் ராமதேவன் தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:-

இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழகத்தை சேர்ந்த மீனவர் ஒருவரை இலங்கை கடற்படையினர் சுட்டுக்கொன்றதை கண்டித்து 11 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டோம். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு தற்போது கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகிறோம்.

கடந்த 22-ந் தேதி கடலில் மீன்பிடிக்க சென்ற ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 8பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். தற்போது மேலும் 12 மீனவர்களை அவர்கள் கைது செய்து உள்ளனர். எனவே மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுக்கவும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரிதும் பாதிப்பு

அடுத்த மாதம்(ஏப்ரல்) 15-ந்தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வர உள்ள நிலையில் தொடர்ந்து மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும் நடந்து வருகிறது. இந்த ஆண்டு முழுவதும் இது போன்ற காரணங்களால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு பலர் மீன்பிடி தொழிலையே கைவிட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாட்டில்களை வீசி தாக்குதல்

இதனிடையே ராமேசுவரம் மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அந்த வழியாக குட்டிக் கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கண்டதும் அங்கிருந்து செல்லும்படி எச்சரித்துள்ளனர்.

இதையடுத்து மீனவர்கள் கடலில் வீசிய வலைகளை எடுத்துக்கொண்டு அவசர, அவசரமாக அங்கிருந்து கரைக்கு திரும்ப முயன்றனர். அப்போது இலங்கை கடற்படையினர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி புகுந்து கற்களையும், பாட்டில்களையும் மீனவர்களை நோக்கி வீசினர். இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்காமல் கரைக்கு திரும்பி விட்டனர். 

Next Story