டாக்டர் கொலையில் திடீர் திருப்பம்: சென்னை பெண் என்ஜினீயர் உள்பட 6 பேர் கைது


டாக்டர் கொலையில் திடீர் திருப்பம்: சென்னை பெண் என்ஜினீயர் உள்பட 6 பேர் கைது
x
தினத்தந்தி 26 March 2017 9:00 PM GMT (Updated: 26 March 2017 7:48 PM GMT)

ஒரத்தநாடு டாக்டர் கொலை தொடர்பாக சென்னை பெண் என்ஜினீயர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஒரத்தநாடு

ஒரத்தநாடு டாக்டர் கொலை தொடர்பாக சென்னை பெண் என்ஜினீயர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். சொத்து பிரச்சினையில் மாற்றுத்திறனாளி மகள் தந்தையை கொன்றது அம்பலமானது.

டாக்டர் கொலை

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு கல்லுக்கடைசந்து தெருவில் வசித்தவர் ராஜப்பன் (வயது 69). இவர் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். ஒரத்தநாடு பஸ்நிலையம் அருகில் உள்ள அவருக்கு சொந்தமான கட்டிடத்தில் மருத்துவமனை நடத்தி வந்தார். இவருடைய மனைவி மணிமாலா. இவர்களுக்கு அம்பிகா, தீபிகா ஆகிய மகள்களும் கோகுல் என்ற மகனும் உள்ளனர். இதில் தீபிகா மாற்றுத்திறனாளி ஆவார். மூத்த மகள் அம்பிகாவுக்கு திருமணமாகிவிட்டது. கடந்த 21-ந்தேதி இரவு தனது வீட்டுவாசலில் நின்றுக்கொண்டிருந்த டாக்டர் ராஜப்பனை 2 வாலிபர்கள் சரமாரியாக கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

கூலிப்படையை ஏவி...

இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டர் ராஜப்பனை கொலை செய்தவர்கள் குறித்து விசாரணை நடத்தினர். இதில் முன்விரோதம் எதுவும் இருக்குமா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்தது.

அதேபோல் கொலை செய்யப்பட்ட ராஜப்பனின் மனைவி மணிமாலா, மகள்கள் அம்பிகா, தீபிகா, மகன் கோகுல் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் டாக்டர் ராஜப்பனின் இளைய மகள் தீபிகாஉ(32) மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. அவரிடம் போலீசார் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, இந்த கொலையில் திடீர் திருப்பமாக தனது தந்தையை கூலிப்படையை ஏவி, தீபிகா கொலை செய்த அதிர்ச்சியான தகவல் தெரிய வந்தது.

இது தொடர்பாக போலீசாரிடம் தீபிகா அளித்த வாக்குமூலம் வருமாறு:-

சொத்துகளை தரமறுத்தார்

சிறுவயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்ட நான் டாக்டருக்கு படிக்க விரும்பினேன். ஆனால் அது முடியவில்லை. இதனால் கம்ப்யூட்டர் என்ஜினீயர் (பி.இ.) படித்துவிட்டு சென்னையில் சொந்தமாக கம்ப்யூட்டர் நிறுவனம் வைத்து நடத்தி வந்தேன். எனது தந்தை எனக்கும், எனது தாயார் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் தேவையான வசதிகளை செய்துகொடுக்கவில்லை. மாறாக உறவினர்களுக்கு பணத்தை கொடுத்து வந்தார்.

இதனால் அவர் மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. எனது கஷ்டங்களை எனது நண்பரும் நாகப்பட்டினம் மாவட்டம் கூத்தூரை சேர்ந்தவருமான பிரகாஷ் (26) என்பவரிடம் கூறி வந்தேன். அதேநேரம் எனது தந்தையிடம் பணமும், அவரிடமுள்ள சில சொத்துகளையும் கேட்டுக்கொண்டே இருந்தேன். ஆனால் அவர் பணம் மற்றும் சொத்துகளை தர முன்வரவில்லை. இதனால் அவரை கொலை செய்ய நானும் எனது நண்பர் பிரகாசும் திட்டம் தீட்டினோம். பிறகு அவர் மூலமாகவே ரூ.4 லட்சம் பேரம் பேசி கூலிப்படையை ஏவி கொலை செய்தோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மகள் உள்பட 6 பேர் கைது

இதையடுத்து, இந்த கொலை தொடர்பாக தீபிகா, அவரது நண்பர் பிரகாஷ், டேவிட்ராஜ் (25), சூரியபிரகாஷ்(19), தினேஷ் (23), குமார் (24) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். கொலையாளிகள் பயன்படுத்திய 2 கத்திகளையும் போலீசார் கைப்பற்றினர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய ராஜேஷ் (25) என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.

தந்தையை மாற்றுத்திறனாளி மகள் கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் ஒரத்தநாடு பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story