தமிழக மீனவர்களை மீட்கவேண்டும் பிரதமருக்கு, முதல்-அமைச்சர் கடிதம்


தமிழக மீனவர்களை மீட்கவேண்டும் பிரதமருக்கு, முதல்-அமைச்சர் கடிதம்
x
தினத்தந்தி 26 March 2017 11:45 PM GMT (Updated: 26 March 2017 8:07 PM GMT)

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை மீட்கக்கோரி பிரதமருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.

சென்னை,

இதுகுறித்து பிரதமர் நரேந்திரமோடிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

மீனவர்கள் கைது

தமிழக மீனவர்கள் 12 பேர் 2 இடங்களில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தை தங்களது கவனத்துக்கு கொண்டு வர இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 6 மீனவர்கள் ஒரு எந்திர மீன்பிடி படகிலும், கோட்டைபட்டினத்தை சேர்ந்த 6 மீனவர்கள் மற்றொரு எந்திர மீன்பிடி படகிலும் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றபோது, அவர்களை இலங்கை கடற்படையினர், 26-ந் தேதி (நேற்று) அதிகாலை கைது செய்துள்ளதாகவும், தற்போது அந்த மீனவர்கள் இலங்கையில் உள்ள கரைநகரில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

தமிழக அமைச்சர்களுடன் கடந்த 17-ந் தேதியும், தமிழக மீனவர்களுடன் கடந்த 21-ந் தேதியும், மத்திய வெளிவிவகாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்தனர். இதனால், மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்தில் நடைமுறைக்கு ஏற்ப, நிரந்தர தீர்வு ஏற்பட்டுவிடும் என்ற நம்பிக்கையில் தமிழக மீனவர்கள் இருந்த நிலையில், இப்படி துரதிருஷ்ட சம்பவங்கள் நடந்துள்ளது.

பாரம்பரிய தொழில்

மத்திய வெளிவிவகாரத்துறை அதிகாரியுடன் நடந்த சந்திப்பினால், பிரச்சினைக்கு முடிவு ஏற்படும் என்ற எண்ணத்தில் இருந்த தமிழக மீனவர்கள் மத்தியில், இலங்கை கடற்படையினரின் இந்த செயலினால், ஒருவிதமான பதற்றமும், அமைதியின்மையும் ஏற்பட்டு உள்ளது.

அப்பாவி, ஏழை தமிழக மீனவர்கள், தங்களது பாரம்பரிய மீன்பிடி தொழிலை, பாரம்பரிய கடல் பகுதியில் மேற்கொள்வதை பாதுகாக்கும் விதமாக, அவர்களை இதுபோல கைது செய்வதை உடனடியாக நிறுத்துவதை உறுதி செய்யும் விதமாக, உறுதியான, தெளிவான, சந்தேகத்துக்கு இடமில்லாத, குழப்பமற்ற தகவலை இலங்கை அரசுக்கு மத்திய அரசு அனுப்பி வைக்க வேண்டும்.

தமிழக மீனவர்களுக்கு சொந்தமான படகுகளை விடுவிக்காமல் இருக்கும் இலங்கை அரசின் செயல், தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை உண்டாக்கியுள்ளது. வாழ்வாதாரத்துக்கு முக்கியமானதாக இருக்கும் மீன்பிடி படகுகள் இல்லாமல், மீனவர்கள் விரக்தியில் உள்ளனர்.

போர்க்கால நடவடிக்கை

எனவே, இதுகுறித்து இலங்கை உயர்மட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று, அங்கு சேதம் அடையும் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள் உடனடியாக விடுவிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், தமிழக மீனவர்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்தும் திட்டத்துக்கு ரூ.1,650 கோடி நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று தங்களிடம் ஏற்கனவே நான் கோரிக்கை மனு கொடுத்துள்ளேன். இந்த நிதியை ஒதுக்குவதற்கு ஒப்புதல் அளிக்க தீவிரமாக பரிசீலனை செய்து வருவதை தெரிந்து கொண்டேன். இந்த நிதியை விரைவாக வழங்குவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அமைச்சகத்துக்கு உத்தரவிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை ஏற்படுத்தும் விதமான பன்முகத்தன்மைகள் கொண்ட நடவடிக்கைகளை, போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

தலையிட வேண்டும்

மேலும் நம்முடைய மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் மீட்க வெளிவிவகாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். நம்முடைய மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். தற்போது இலங்கை கட்டுப்பாட்டில் உள்ள 38 மீனவர்களையும், 133 மீன்பிடி படகுகளையும் விரைவாக மீட்க தாங்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு தகுந்த நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறி உள்ளார்.

Next Story