ஆர்.கே நகரில் எப்படி பணம் கொடுக்கலாம், என்ற சிந்தனையில் உள்ளனர் மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு


ஆர்.கே நகரில் எப்படி பணம் கொடுக்கலாம், என்ற  சிந்தனையில் உள்ளனர் மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு
x
தினத்தந்தி 27 March 2017 6:07 AM GMT (Updated: 27 March 2017 6:07 AM GMT)

அ.தி.மு.கவினர் எப்படி பணம் கொடுக்கலாம், “கோல்டு” கொடுக்கலாம் என்ற சிந்தனையில் தான் இருக்கிறார்கள்.

சென்னை,

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

.தி.மு.க.வின் இரு அணியினரும் பணத்தை பதுக்கி வைத்து வினியோகம் செய்வதாக நாங்கள் சொல்கிறோம். ஏனென்றால் ஆட்சியில் இருக்கும்போது 2 அணிகளும் கூட்டு கொள்ளை அடித்தவர்கள். இப்போது இவர்கள் இரண் டாக பிரிந்து இருக்கலாம். ஆனால் கொள்ளையடித்த பணத்தை இப்போது வினியோகிப்பதில் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறுகிறார்கள். நாங்கள் முறைப்படி தேர்தல் கமிஷனில் புகார் கொடுத்து கொண்டு இருக்கிறோம்.மீண்டும் இது குறித்து முறையிடுவோம்.

ஆர்.கே நகரில் தி.மு.க  பிரசாரம் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. அனைத்து கட்சி தலைவர்கள் அடங்கிய பிரசார பொதுக்கூட்டம் ஆர்.கே.நகரில் நாளை மாலை நடக்கிறது.

தொகுதியில் குடிநீர் பிரச்சினை தலை விரித்தாடுகிறது. என் தொகுதியில் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாடு முழுவதும் குடிநீர் பிரச்சினை உள்ளது. மக்கள் குடிநீருக்காக அலைகிறார்கள். சட்ட மன்றத்தில் பல நேரங்களில் இதுபற்றி பேசி இருக்கிறேன். ஆனால் இந்த ஆட்சியில் அதை பற்றி கவலைப் படவில்லை.

விவசாயிகள் தமிழ்நாட்டில் போராடியது மட்டுமின்றி தற்போது டெல்லியிலும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அ.தி.மு.க.வில் இருந்து ஒரு அமைச்சர் கூட அவர்களை சென்று பார்க்கவில்லை. முதல்-அமைச்சர், விவசாய துறை மந்திரி யாருமே செல்லவில்லை.

இவர்கள் “பெரா” வழக்கில் சிக்கி இருக்கிற வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எப்படி பணம் கொடுக்கலாம், “கோல்டு” கொடுக்கலாம் என்ற சிந்தனையில் தான் இருக்கிறார்கள். அவர்கள் வேறு எதுபற்றியும் கவலைப் படுவது இல்லை. இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

Next Story