ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக புகார் மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் டி.டி.வி.தினகரன் பேட்டி


ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக புகார் மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் டி.டி.வி.தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 27 March 2017 6:15 AM GMT (Updated: 27 March 2017 6:15 AM GMT)

மு.க.ஸ்டாலின் நாங்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக தொடர்ந்து கூறி வருகிறார். அவர் தோல்வி பயத்தில் இது போல உளறி வருகிறார் என டிடிவி தினகரன் கூறினார்.

சென்னை,

ஆர்.கே.நகர் தொகுதி அ.தி.மு.க. அம்மா கட்சி சார்பில் போட்டியிடும் டி.டி.வி.தினகரன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். கொடுங் கையூர் எழில் நகர் பகுதியில் இன்று காலை வாக்கு சேகரித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-

ஆர்.கே.நகர் பகுதி அம்மா வின் தொகுதியாகும். அவர் செய்த திட்டங்களுக்காக மக்கள் எனக்கு வாக்களிப் பார்கள். நான் 60 ஆயிரம் ஓட்டுக்கு மேல் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். தொப்பி சின்னத்தில் இப்பகுதி மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள். இதன் மூலம் நான் இரட்டை இலையை மீண்டும் மீட்டெடுப்பேன்.

எதிர்க்கட்சிகளின் ஒவ்வொரு கேள்விக்கும் நான் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த தொகுதியை இந்தியாவிலேயே முதன்மை தொகுதியாக மாற்ற வேண்டும் என்று அம்மா விரும்பினார். அதை நிறைவேற்றும் வகையில் எனது பணிகள் தொடரும்.

இதற்காகத்தான் ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் குறைகளை கேட்பதற்காக  அனைத்து அமைச்சர்களும் ஒவ்வொரு தெருத் தெருவாக செல்கிறார்கள். மக்கள் பிரச்சினைகளை கேட்டறிந்து தேர்தல் முடிந்த பிறகு அவற்றை நிறைவேற்றித் தருவது எனது முதல் பணி.

கொடுங்கையூர் குப்பை கொட்டும் இடத்தை சுத்தம் செய்து இந்த பகுதியில் பூங்கா அமைக்கப்படும். அந்த இடத்தை மக்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் மாற்றம் செய்யப்படும். தற்கொலை செய்து கொண்ட அ.தி.மு.க. தொண்டர் எங்கள் அணியை சேர்ந்தவர். அவர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அவரின் மறைவுக்காக நாங்கள் வருத்தம் தெரிவித்ததோடு எங்கள் பிரதி நிதியையும் அந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தேன்.

எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று மாலை வெளியிடப்படும். இதில் இந்த தொகுதி மக்களின் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்கள் இடம் பெறுகின்றன. இந்த தொகுதியில் வீடு இல்லை என்று பலர் மனுக்கள் கொடுத்திருந்தார்கள். அதனால் 51 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்க முடிவு எடுத்துள்ளோம்.

அம்மாவின் முக்கிய திட்டமான வேலைவாய்ப்பு முகாம் தொடர்ந்து நடத்தப்படும். இதன் மூலம் தனியார் நிறுவனங்களில் உள்ள பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நாங்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக தொடர்ந்து கூறி வருகிறார். அவர் தோல்வி  பயத்தில் இது போல உளறி வருகிறார். இந்த ஆட்சியை கலைக்க திட்டமிட்ட அவரது கனவு பலிக்கவில்லை.

எனது முதல் பணியாக இந்த தொகுதியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி முன்மாதிரி தொகுதியாக கொண்டு வருவேன்.டெல்லியில் விவசாயிகள் மத்திய அரசை கண்டித்து போராடி வருகிறார்கள். தமிழக அரசு விவசாயிகளுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story