ஜெயலலிதாவின் மகன் என போலி ஆவணம் தயாரித்து வழக்கு தொடர்ந்தவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு


ஜெயலலிதாவின் மகன் என போலி ஆவணம் தயாரித்து வழக்கு தொடர்ந்தவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 27 March 2017 11:06 AM GMT (Updated: 27 March 2017 11:06 AM GMT)

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மகன் என்று கூறிய கிருஷ்ணமூர்த்தி என்பவரை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



சென்னை:


ஈரோடு மாவட்டம், காஞ்சிகோவில் கிராமத்தை சேர்ந்தவர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி(வயது 32). இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தத்து எடுக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், நான் மறைந்த நடிகர் சோபன்பாபு, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆகியோரது மகன் ஆவேன். நான் 1985-ம் ஆண்டு பிப்ரவரி 15-ந் தேதி பிறந்தேன்.

நான் குழந்தையாக இருந்தபோது, என் தாய்-தந்தைக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், 1986-ம் ஆண்டு காஞ்சிகோவில் கிராமத்தை சேர்ந்த வசந்தாமணி என்பவருக்கு, மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். முன்னிலையில் என்னை தத்துக்கொடுத்துவிட்டனர். இதற்கான ஒப்பந்தத்தில், என் பெற்றோர் சோபன்பாபு, ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர். ஆகியோர் கையெழுத்திட்டுஉள்ளனர்.

ஈரோட்டில் தத்து எடுத்த பெற்றோருடன் வசித்தாலும், அடிக்கடி சென்னை வந்து என் தாயார் ஜெயலலிதாவை சந்திப்பேன். கடந்த மார்ச் மாதம் அவரை சந்தித்தபோது, என்னை தன் மகன் என்று செப்டம்பர் மாதம் அறிவிக்கப் போவதாக ஜெயலலிதா கூறினார்.

இதற்கான நடவடிக்கைகளை அவர் எடுத்து வந்தார். இவையெல்லாம் தற்போது கர்நாடக மாநில சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு நன்றாக தெரியும். இதனால், ஜெயலலிதாவுடன் அவர் தகராறு செய்தார். இந்த நிலையில், என் தாயார் அப்பல்லோ ஆஸ்பத்திரியில், கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். பின்னர் டிசம்பர் 5-ந் தேதி அவர் மரணம் அடைந்தார்.
என் தாயாருக்கு இறுதிச்சடங்கு செய்வதற்கு சசிகலாவும், அவரது உறவினர்களும் என்னை அனுமதிக்கவில்லை. டி.டி.வி. தினகரனின் தூண்டுதலின்பேரில், அடையாளம் தெரியாத சிலர் என்னை கடத்திச்சென்று, சிறுதாவூர் பங்களாவில் அடைத்து வைத்து கொடுமை செய்தனர். அந்த பங்களாவில் வேலை செய்யும் காவலாளியின் உதவியுடன் அங்கிருந்து தப்பி வந்தேன்.

அதன்பின்னர் என்னுடைய நலவிரும்பிகள் கொடுத்த யோசனையின் அடிப்படையில், டிராபிக் ராமசாமியை கடந்த மாதம் இறுதியில் சந்திக்க சென்றேன். இதை தெரிந்து கொண்ட சசிகலாவின் ஆட்கள், (ஐகோர்ட்டு முன்புள்ள) என்.எஸ்.சி. போஸ் சாலையில் வைத்து என்னை தாக்கினார்கள். இதில் நான் படுகாயம் அடைந்தேன்.

இதன்பின்னர் கடந்த 11-ந் தேதி டிராபிக் ராமசாமியை சந்தித்து, சசிகலாவுக்கு எதிராக போராடி, என்னுடைய உரிமையையும், என் தாயாரின் சொத்துக்களையும் மீட்டுத் தரும்படி கேட்டேன்.

அவர் கொடுத்த அறிவுரையின்படி, தமிழக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், தமிழக டி.ஜி.பி. உள்ளிட்டோருக்கு கடந்த 12-ந் தேதி புகார் மனுவை அனுப்பினேன். தேனாம்பேட்டை போலீசாருக்கும் தனியாக புகார் மனு அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கும், என்னை தத்து எடுத்துள்ள பெற்றோருக்கும் போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்படவில்லை. தற்போது சசிகலாவின் ஆட்களால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது. அவர்கள் தற்போதைய முதல்-அமைச்சரிடம் செல்வாக்கு பெற்றவர்கள். எனவே, எனக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பை வழங்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு மீதான விசாரணையின் போது நீதிபதிகள் ஜெயலலிதாவின் புகைப்படத்தை எடுத்து, அதில் உன் படத்தை ஒட்டி போலி ஆவணங்களை தயாரித்துள்ளது நன்கு தெரிகிறது. உங்களிடம் உள்ள ஒரிஜினல் ஆவணங்கள், புகைப்படம், தத்து பத்திரம் என்று அனைத்தையும் எடுத்துக்கொண்டு, போலீஸ் கமிஷனர் முன்பு சனிக்கிழமை (இன்று) காலையில் ஆஜராகவேண்டும். இவரது ஆவணங்களையும், இவரையும் விசாரித்து  போலீஸ் கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். என்று உத்தரவிட்டார்

கிருஷ்ணமூர்த்தி அளித்த ஆவணங்களை ஆய்வு செய்த காவல்துறையினர் அந்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்று இன்று நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, ஜெ.கிருஷ்ணமூர்த்தியை கைது செய்யுமாறு நீதிமன்றம் சென்னை மாநகர குற்றப்பிரிவு காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் மேலும், கைது செய்வதற்கு எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை ஏப்ரல் 10ஆம் தேதி சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.


Next Story