நடிகர் தனுஷ் வழக்கின் இறுதி விசாரணை ஒத்திவைப்பு; மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


நடிகர் தனுஷ் வழக்கின் இறுதி விசாரணை ஒத்திவைப்பு; மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 27 March 2017 10:45 PM GMT (Updated: 27 March 2017 8:03 PM GMT)

நடிகர் தனுஷ் மீதான வழக்கின் இறுதி விசாரணையை அடுத்த மாதத்துக்கு ஒத்திவைத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

மேலூரை சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் மேலூர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “நடிகர் தனுஷ் எங்களுடைய மகன் தான். பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோதே திடீரென மாயமாகிவிட்டார். தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். எங்களுக்கு வயதாகிவிட்டதால் மாதாந்திர பராமரிப்பு தொகையாக ரூ.65 ஆயிரம் வழங்க தனுசுக்கு உத்தரவிட வேண்டும்“ என்று கூறியிருந்தனர்.  இந்த மனு மேலூர் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்தநிலையில் அவர்கள் சொல்லும் தகவல்கள் பொய்யானவை. எனவே அந்த வழக்கை ரத்து செய்வதுடன், வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட வேண்டும் என்று நடிகர் தனுஷ் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்தநிலையில் வழக்கு விசாரணையின்போது தனுஷ் யாருடைய மகன் என்பதை அறிய, அவரது பள்ளி மாற்றுச்சான்றிதழை இருதரப்பினரும் தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.

அங்க அடையாளங்கள்

ஆனால் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்த மாற்றுச்சான்றிதழில் அவருடைய அங்க, மச்ச அடையாளங்கள் இடம்பெறவில்லை. இதனையடுத்து அடையாளங்களை அறிய அவர் நேரடியாக ஆஜராக வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டதன்பேரில் கடந்த 28-ந்தேதி மதுரை ஐகோர்ட்டில் தனுஷ் ஆஜரானார். அவரது உடலில் அங்க அடையாளங்களை டாக்டர்கள் குழு பரிசோதித்து, முத்திரையிடப்பட்ட உறையில் வைத்து அறிக்கை தாக்கல் செய்தது. பின்னர் இதுதொடர்பான வழக்கை மேலூர் கோர்ட்டு விசாரிக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

கால அவகாசம்

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தனுஷ் தரப்பு வக்கீல் ஆஜராகி, “எங்கள் தரப்பு வாதம் நிறைவுபெற்றுவிட்டது. எதிர்தரப்பினர் தேவையில்லாமல் வழக்கு விவரங்களை வெளிப்படுத்துகிறார்கள்” என்று குற்றம் சாட்டினார்.

மேலூர் தம்பதி தரப்பு வக்கீல், “இந்த வழக்கில் மூத்த வக்கீல் ஆஜராக வேண்டியது இருப்பதால் காலஅவகாசம் வழங்க வேண்டும்“ என்றார்.

ஒத்திவைப்பு

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

தனி அறையில் வழக்கை விசாரிக்க நீதிபதிக்கு அதிகாரம் உள்ளது. இந்த வழக்கு தொடர்பான செய்திகள் மக்கள் மனதில் வெவ்வேறு கருத்துகளை எழுப்பச்செய்துள்ளன. கோர்ட்டு உத்தரவுகள் மூடி மறைக்கப்படுபவை அல்ல. எனவே கோர்ட்டு உத்தரவுகளை முறையான ஆவணங்கள் பெற்று வெளியிடலாம்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு, வழக்கின் இறுதி விசாரணையை அடுத்தமாதம் (ஏப்ரல்) 11-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

Next Story