மெரினாவில் அண்ணா சதுக்கம் பேருந்து நிலையம் முதல் கலங்கரை விளக்கம் வரை போலீஸ் குவிப்பு


மெரினாவில் அண்ணா சதுக்கம் பேருந்து நிலையம் முதல் கலங்கரை விளக்கம் வரை போலீஸ் குவிப்பு
x
தினத்தந்தி 29 March 2017 4:05 AM GMT (Updated: 29 March 2017 4:05 AM GMT)

சென்னை மெரினாவில் அண்ணா சதுக்கம் பேருந்து நிலையம் முதல் கலங்கரை விளக்கம் வரையில் போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் என்ற இயற்கை எரிவாயுவை எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆனால் இந்த திட்டத்தை நிறைவேற்றினால் விவசாயம் மற்றும் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்று கூறி நெடுவாசல் பகுதியில் போராட்டம் நடைபெற்றது. கடும் எதிர்ப்பையும் மீறி ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்கான ஒப்பந்தங்கள்  கையெழுத்தாயின. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முன்னெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாகவும் சென்னை மெரினாவில் மாணவர்களும், இளைஞர்களும் மீண்டும் ஒரு போராட்டத்தை நடத்தப்போவதாக  தகவல் வெளியானது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் அழைப்பும் விடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை மெரினாவில் மாணவர்கள் கூடுவதை தவிர்க்கும் விதமாக நேற்று முதல் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இன்று சென்னை மெரினாவில் போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளது. சென்னை மெரினாவில் அண்ணா சதுக்கம் பேருந்து நிலையம் முதல் கலங்கரை விளக்கம் வரையில் போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளது. அதிவிரைவுப்படை மற்றும் ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ரோந்து வாகனங்கள் மற்றும் ரோந்துப்பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருச்சி நீதிமன்றம் அருகே போராட்டம் நடக்கப்போவதாக வந்த தகவலை அடுத்து அங்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

நேற்று துணை போலீஸ் கமி‌ஷனர் பாலகிருஷ்ணன் கூறும்போது, ‘‘மெரினாவில் மாணவர்கள் யாரும் போராட்டம் நடத்த வரவில்லை. காற்று வாங்க வந்த மாணவர்கள் போராட்டம் நடத்த வந்திருப்பதாக தவறான தகவல் வெளியானது. மெரினாவில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது. வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

இதற்கிடையே மதுரை தெப்பக்குளத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராடிய 18 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Next Story