டெல்லியில் விவசாயிகள் போராட்டம் வாபஸ்; தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்துவது ஏன்?


டெல்லியில் விவசாயிகள் போராட்டம் வாபஸ்; தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்துவது ஏன்?
x
தினத்தந்தி 24 April 2017 7:45 PM GMT (Updated: 24 April 2017 2:31 PM GMT)

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் வாபஸ் ஆன நிலையில், தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்துவது ஏன்? என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

விவசாயிகள் போராட்டம்

டெல்லியில் நடந்த விவசாயிகளின் போராட்டம் மத்திய, மாநில அமைச்சர்களின் உறுதிமொழியை ஏற்று வாபஸ் பெறப்பட்ட பிறகும் இங்கு தமிழகத்தில் 25–ந் தேதி (இன்று) எதற்காக முழு அடைப்பு போராட்டம் நடத்த வேண்டும்?. விவசாயிகளின் துயர் துடைப்பதாக கூறிவிட்டு அப்பாவி பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை சீர்குலைக்க கூடாது.

முழு அடைப்பு நடத்தி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து அதன் மூலம் குறுக்கு வழியில் ஆட்சியில் அமர பகல் கனவு காணும் தி.மு.க.வுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இருந்தால் இன்னும் 4 ஆண்டுகள் அடுத்த தேர்தல் வரை பொறுமை காக்க வேண்டும்.

காவிரி நீர் பங்கீடு

கடந்த காலத்தில் தி.மு.க. ஆட்சியின்போது காவிரி நீர் பங்கீடு ஒப்பந்தத்தை புதுப்பிக்க தவறியதும், காவிரியின் குறுக்கே பல தடுப்பணைகள் கர்நாடகம் கட்டியபோது கண்டிக்க தவறியதும், காவிரி நீர் உரிமை வழக்கை காங்கிரஸ் கூட்டணிக்காக சுப்ரீம் கோர்ட்டில் வாபஸ் பெற்றது போன்ற துரோக வரலாறுகளை கொண்ட தி.மு.க. தற்போது விவசாயிகளுக்கு ஆதரவு வே‌ஷம் போடுவது ஏன்?.

தி.மு.க. ஆட்சியில் தானே மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கான முதல்கட்ட பரிசோதனை தமிழ் மண்ணில் அனுமதிக்கப்பட்டது?. எண்ணற்ற ஏரி, குளங்கள் காணாமல் போனதும், மணல் கொள்ளையர்களின் கூடாரமானதும் யார் ஆட்சியில்?.

தமிழகத்தில் தாமரை மலரும்

மத்திய அரசை பினாமி ஆட்சி என்று கூறும் மு.க.ஸ்டாலின், கடந்த காலத்தில் மத்திய ஆட்சியில் பங்கேற்ற தி.மு.க., தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் பினாமியாகத்தான் செயல்பட்டது என்பதனை 2ஜி ஊழல் பங்காளியான தி.மு.க. தற்போது பகிரங்கப்படுத்துகிறதா?. மாநிலத்தில் ஆட்சியும், மத்தியில் கூட்டணி ஆட்சியும் நடத்திய காங்கிரஸ், தி.மு.க. கட்சிகள் இலங்கையில் லட்சக்கணக்கான நம் தமிழ் சகோதர, சகோதரிகள் கொல்லப்பட்டதை தடுக்க தவறியதை தமிழ் மக்கள் மறக்கமாட்டார்கள்.

வட மாநிலங்களில் தொடங்கி இந்தியா முழுவதும் வலுப்பெற்று வரும் பா.ஜ.க.வின் அசுர வெற்றிகளை கண்டும், தென் மாநிலங்களில் பா.ஜ.க.வின் வளர்ச்சியை கண்டும் மிரண்டுபோய் விவசாயிகளின் பெயரை சொல்லிக்கொண்டு கூட்டணி அரசியல் செய்கிறார்கள். வழக்கம் போல் தமிழகத்தில் தனியாக நிற்க திராணி இல்லாத, வலுவிழந்த காங்கிரஸ் கோல் ஊன்றும் நிலையில், தமிழகத்தில் பா.ஜ.க.வால் கால் ஊன்ற முடியாது என்று விமர்சிக்கிறார்கள். அதனை பொய் உரையாக்கி தாமரை தமிழகத்தில் மலரும் என சூளுரைக்கிறேன்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story