அ.தி.மு.க. 2 அணிகள் பேச்சு நின்றது ஏன்? பரபரப்பு தகவல்கள்


அ.தி.மு.க. 2 அணிகள் பேச்சு நின்றது ஏன்? பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 24 April 2017 9:04 PM GMT (Updated: 24 April 2017 9:03 PM GMT)

அ.தி.மு.க. 2 அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை நின்று போனது ஏன்? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை,

கடந்த பிப்ரவரி மாதம் 7–ந் தேதி, ஜெயலலிதா சமாதிக்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பான பேட்டி அளித்தது முதல் அ.தி.மு.க. பிளவுபட்டு 2 அணிகளாக செயல்பட்டு வருகிறது.

2½ மாத கால இடைவெளிக்கு பிறகு, தற்போது அ.தி.மு.க. 2 அணிகளையும் இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், பேச்சுவார்த்தை தொடங்கும் முன்பே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டு அது நின்றுபோனது.

அதற்கு என்ன காரணம் என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்விவரம் வருமாறு:–

எதிரும் புதிருமான கருத்து

அ.தி.மு.க. 2 அணிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நேற்று மாலை தொடங்க இருந்தது. ஏற்கனவே 2 அணிகளிலும் தலா 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பேச்சுவார்த்தை தொடங்கும் முன்பே 2 அணிகளிலும் உள்ள நிர்வாகிகள், பிரச்சினைக்குரிய வகையில் எதிரும் புதிருமான கருத்துகளை தெரிவித்து வந்தனர். இதனால், 2 அணிகளுக்கும் இடையே உள்ள பிரச்சினை மேலும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியது.

அப்போது, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது அணி நிர்வாகிகளுக்கு வாய்ப்பூட்டுபோட்டார். யாரும் தேவையில்லாமல் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தார். ஆனால், அவரது அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தங்க தமிழ்செல்வன் (ஆண்டிப்பட்டி தொகுதி), வெற்றிவேல் (பெரம்பூர் தொகுதி) ஆகியோர் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு எதிராக கருத்துகளை தெரிவித்துவந்தனர். இது ஓ.பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

சந்தேகம்

இது ஒரு புறம் இருக்க, பேச்சுவார்த்தை தொடங்க இருந்த நேற்று காலை, அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்தபேட்டி ஒன்றில், ‘‘எங்கள் அணியில் இன்னும் குழுவே அமைக்கப்படவில்லை. உறுப்பினர்கள் யார் என்றும் தெரியாது’’ என்று கூறினார். மேலும், நேற்று வெளியான அ.தி.மு.க. அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆரிலும், ‘‘தீய சக்திகளின் சூழ்ச்சிகளை முறியடித்து அம்மா (ஜெயலலிதா) வகுத்த வழியில் கழகத்தையும் (அ.தி.மு.க.) – ஆட்சியையும் காத்திட சின்னம்மா (சசிகலா) – டி.டி.வி.தினகரனுக்கு தோளோடு தோள் நிற்போம். கோடானுகோடி கழகத்தினர் – பொதுமக்கள் வீர சபதம்’’ என்று தலைப்பு செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இந்த 2 நிகழ்வுகளும் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த நிர்வாகிகளுக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. அதனால், பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு முன்னதாக 2 நிபந்தனைகளை விதித்தனர்.

அதாவது, ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும். சசிகலாவையும், அவரது குடும்பத்தினரையும் கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். அதனால், மீண்டும் பிரச்சினை உருவாகி இணைப்பு பேச்சுவார்த்தை நின்றுபோனது.

இந்த 2 நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு நிறைவேற்றினால்தான், அடுத்து பேச்சுவார்த்தையில் பங்கேற்பது என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் முடிவெடுத்துள்ளனர்.


Next Story