நக்சலைட்டுகள் தாக்குதல் பலியான 4 வீரர்களின் உடல்கள் தமிழகம் வந்தன; உருக்கமான தகவல்கள்


நக்சலைட்டுகள் தாக்குதல் பலியான 4 வீரர்களின் உடல்கள் தமிழகம் வந்தன; உருக்கமான தகவல்கள்
x
தினத்தந்தி 25 April 2017 9:11 PM GMT (Updated: 25 April 2017 9:10 PM GMT)

சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் தாக்குதலில் பலியான வீரர்கள் 4 பேரின் உடல்கள் நேற்று தமிழகம் வந்தன.

திருச்சி,

வீரர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழக வீரர்கள்

சத்தீஷ்கார் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நேற்று முன்தினம் மத்திய ரிசர்வ் படையினர் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் 25 வீரர்கள் பலியாகினர்.

வீரமரணம் அடைந்த 25 பேரில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த அழகுபாண்டி (வயது 26), சேலம் மாவட்டத்தை சேர்ந்த திருமுருகன் (38), திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பத்மநாபன் (48), செந்தில்குமார் (38) என தெரியவந்தது.

திருச்சி வருகை

பலியான 4 பேரின் உடல்களும் விமானப்படையை சேர்ந்த தனி விமானம் மூலம் நேற்று காலை சத்தீஷ்கார் மாநிலத்தில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டது. அந்த விமானம் மாலையில் திருச்சி விமான நிலையம் வந்தது. விமான நிலையத்தில் செந்தில்குமார், பத்மநாபன், திருமுருகன் ஆகியோரது உடல்கள் மட்டும் இறக்கப்பட்டன. மதுரை அழகுபாண்டியின் உடல் அதே விமானத்தில் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது.

திருச்சி விமானநிலையத்தின் உள்ளே இருந்து 3 பேரின் உடல்களும் ஆம்புலன்ஸ் வேனில் விமான நிலையத்தின் வெளிப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டன. அவர்களின் உடல்களுக்கு அமைச்சர் காமராஜ் மற்றும் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் செந்தில்குமார், பத்மநாபன் ஆகியோர் உடல்கள் தனித்தனியாக ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றப்பட்டு அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. திருமுருகன் உடல் சேலம் கெங்கவல்லிக்கு ஆம்புலன்ஸ் வேனில் கொண்டு செல்லப்பட்டது.

தொழில்நுட்ப கோளாறால் தாமதம்

திருச்சி விமானநிலையத்திற்கு 4 பேரின் உடல்களும் மதியம் 2 மணிக்கு வந்தடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பெங்களூருவில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. கோளாறு சரி செய்யப்பட்ட பின்னர் விமானம் புறப்பட்டு மாலை 5.20 மணிக்கு திருச்சி வந்தது.

செந்தில்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த அவருடைய நண்பர் கெபிராஜா கூறுகையில், “செந்தில்குமார் பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு வந்தார். நக்சலைட்டுகள் கண்ணிவெடியை ஆங்காங்கே புதைத்து வைத்திருப்பதாகவும், இதனால் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறினார். இந்நிலையில் நக்சலைட்டுகளின் தாக்குதலில் அவர் உயிரிழந்து விட்டார்” என்றார்.

மதுரை

மதுரை மாவட்டம் பெரியபூலாம்பட்டி முத்துநாகையாபுரத்தை சேர்ந்தவர் அழகுபாண்டி. இவருடைய தந்தை பிச்சை அழகுவும் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். அழகுபாண்டி 2011-ம் ஆண்டு மத்திய ரிசர்வ் படையில் சேர்ந்தார். முத்துநாகையாபுரத்தில் பெரும்பாலானவர்கள் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அழகுபாண்டியின் தந்தை பிச்சை அழகு கூறுகையில், என் மகன் 2 நாட்களுக்கு முன்புதான் செல்போனில் என்னிடம் பேசினான். விடுமுறையில் வரும்போது திருமணம் செய்து வைப்பதாக அவனிடம் கூறினேன். எனது மகன் இறந்தது நீங்கமுடியாத துயரத்தை தந்தாலும் தாய் நாட்டுக்காக இறந்தான் என்பது பெருமையாக இருக்கிறது என்றார்.

மதுரை விமான நிலையம் வந்த அழகுபாண்டியின் உடலுக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

சேலம்

சேலம் மாவட்டம் நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் திருமுருகன். இவருக்கு திருமணமாகி செல்வி என்ற மனைவியும், பிரதீபா (10), தர்ஷினி (7), ஸ்ரீஹரன் (5) என 3 குழந்தைகள் உள்ளனர். திருமுருகன் வீரமரணம் பற்றி கேள்விப்பட்டதும் நல்லூர் கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.

திருமுருகனின் தந்தை நல்லதம்பி கூறுகையில், திருமுருகன் சிறுவயதிலிருந்தே போலீஸ் வேலைக்கு போக ஆர்வமுடன் இருந்தான். பின்னர் மத்திய ரிசர்வ் படையில் வேலை கிடைத்ததும் அங்கு சென்று விட்டான். ஒரு மாதத்துக்கு முன்பு தான் ஊருக்கு வந்துவிட்டு சென்றான். நாட்டையும், உங்களையும் காப்பாற்றுவேன் என கூறிவிட்டு சென்றவன் தற்போது பிணமாக திரும்பி உள்ளான் என்றார்.

தஞ்சை

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் காமராசர் காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு வித்யா என்ற மனைவியும். 8 வயதில் சக்திபிரியன் என்ற மகனும் உள்ளனர். செந்தில்குமார் 2000-ம் ஆண்டு மத்திய ரிசர்வ் படையில் சேர்ந்தார். கோவையில் அதிவிரைவு படையில் பணியாற்றினார். 2011-ம் ஆண்டில் சத்தீஷ்கார் மாநிலத்துக்கு சென்று பணியாற்றி வந்தார். செந்தில்குமார் சுட்டுகொல்லப்பட்ட தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள அவிச்சாவடி கிராமத்தை சேர்ந்தவர் பத்மநாபன். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், முரளிதரன் (5), மோனிஷா (1½) என 2 குழந்தைகள் உள்ளனர். பத்மநாபன் 1994-ம் ஆண்டு மத்திய ரிசர்வ் படையில் சேர்ந்தார். பத்மநாபன் இன்னும் சில நாட்களில் பணி ஓய்வு பெற இருந்ததாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் பிணமாக வந்துள்ளார் என்று கூறி அவரது மனைவி கதறி அழுதார்.

Next Story