அரசு ஊழியர்கள் போராட்டத்துக்கு உடனடி தீர்வு காண வேண்டும் மு.க.ஸ்டாலின் கோரிக்கை


அரசு ஊழியர்கள் போராட்டத்துக்கு உடனடி தீர்வு காண வேண்டும் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
x
தினத்தந்தி 26 April 2017 6:14 AM GMT (Updated: 26 April 2017 6:13 AM GMT)

அரசு ஊழியர்கள் போராட்டத்துக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை,

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக அரசில் உள்ள 64 துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் தங்களது 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மிகப்பெரும் போராட்டத்தை துவங்கியிருக்கிறார்கள்.“எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அழைத்துப் பேசவில்லை என்றால் காலவரையறையற்ற போராட்டத்தில் குதிப்போம்” என்று அரசுக்கு நோட்டீஸ் அளித்தும், அரசு ஊழியர்களை அழைத்துப் பேசாமல் கட்சிப் பதவிகளையும், ஆட்சிப் பதவிகளையும் “இரு ஊழல் அணிகளையும்” இணைப்பதற்காக ஏலம் போட்டுக் கொண்டிருக்கும் இந்த அ.தி.மு.க. அரசுக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் அமல்படுத்த வேண்டும், அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங் களை தாமதமின்றி நிரப்ப வேண்டும், ஊதிய உயர்வு அளிக்கும் வரை 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 முக்கியக் கோரிக்கைகள் முன் வைத்து அரசு ஊழியர்கள் தீவிரமாகப் போராடி வருகிறார்கள்.

கடுமையான வறட்சியும், எங்கும் குடிநீர் பஞ்சமும் தலைவிரித்தாடுகின்ற இந்தநேரத்தில் அரசு ஊழியர்களின் பணி மிக முக்கியமானது மட்டுமின்றி, மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு மிகவும் அவசரமானது. ஆனால் அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுத்தும் அரசு ஊழியர்களை அழைத்துப் பேசாமல் அலட்சியம் காட்டியது அ.தி.மு.க. அரசின் மோசமான அணுகு முறையை எடுத்துக் காட்டுகிறது.

மாநில நிர்வாகம் எப்படிப் போனால் எங்களுக்கு என்ன, நாங்கள் இன்னும் கொஞ்ச நாள் ஆட்சியில் இருந்தால் போதும் என்ற மிகக் குறுகிய மனப்பான்மையுடன் அ.தி.மு.க. அரசு செயல்படுகிறது என்பதே போராடும் மக்களையோ, அரசு ஊழியர்களையோ அழைத்துப் பேசாததின் பின்னணி என்றே உணர்ந்து கொள்ள வேண்டியதிருக்கிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு ஊழியர்களின் சங்கங்களின் பிரதிநிதிகளை உடனடியாக அழைத்துப் பேசி, அவர்களுக்காக ஏற்கனவே வெளியிடப்பட்ட “110 அறிவிப்பை” நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். அரசு ஊழியர்களின் புதிய கோரிக்கைகள் குறித்தும் அவர்களை அழைத்துப் பேசி, எவ்வித தாமதமும் இன்றி அந்த கோரிக்கைகளை நிறை வேற்ற முன் வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு அரசின் கீழ் உள்ள 64 துறைகளில் வேலை நிறுத்தம் நடைபெற்றால், ஏற்கனவே அதிமுக ஆட்சியில் சீர்குலைந்து கிடக்கின்ற அரசு நிர்வாகம் முற்றிலும் நிலைகுலைந்து, மக்கள் மிக மோசமான பாதிப்புக்குள்ளாக நேரிடும் என்பதால், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் உடனடி கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story